வியாழன், 25 ஜூலை, 2013

வகுப்பறையில் ஆசிரியர்

ஒரு முறை  ஆசிரியர் வெகு சிரத்தையுடன் வகுப்பறையில் மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் அந்த மாணவர்களில் ஒருவன் திடீரென எழுந்து நின்றான். ஆசிரியர் கோபம் கொள்ளவில்லை.
அதற்கு மாறாக, என்ன சந்தேகம் உனக்கு!? எனக் கேட்டார்.
அதற்கு மாணவன்  சார்! யார் உங்களுக்கு ஆசிரியர் என்று தெரிந்து கொள்ளலாமா? எனக் கேட்டான். ஏன் என ஆசிரியர் கேட்க, அதற்கு அந்த மாணவன்  அவர் உங்களுக்கு மிகவும் தெளிவாகப் பாடம் கற்பித்திருந்ததால் தானே நீங்கள் இவ்வளவு அழகாகத் தெளிவாக எங்களுக்குப் பாடம் கற்பித்துள்ளீர்கள் எனக் கூறினான்.
தமிழ் வகுப்புகள் தான் மாணவர்களுக்கு அறிவை அளிக்கும் போதிமரமாக இருந்திருக்கிறது என்பதை உணர்ந்திருந்த  ஆசிரியர் புன்சிரிப்புடன் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்க வேண்டிய பணி தான் இது. இதைத்தான் எனது ஆசிரியரும் போதித்துள்ளார்.
அடிப்படைக் கல்வி மிகவும் ஆழ்ந்து கற்க வேண்டியது தமிழ்மொழியில் அவசியமானது எனப் பதில் உரைத்தார்.
மாணவன் தமிழ் எதற்கு? வாழ்க்கையில் எனக் கேட்டான். அதற்கு ஆசிரியர் இலக்கியங்களைப் படித்து இன்புறுவதற்கும்,படைப்புத் திறனை வெளிக்கொணர்வதற்கும் மட்டுமன்று தமிழ்மொழி. நமது பண்பாட்டினை மறக்காமல், பெரியோரைப் போற்றி வாழ்வதற்காகவும், ஒழுக்கமுடன் வாழ்வதற்காகவும், நேர்மையுடன் வாழ்வதற்காகவும்  கற்பதே தமிழ்மொழி. ஒழுக்கத்தில் பிறழ்பவனுடைய பதிவேட்டினை உற்று நோக்கின் தாய்மொழியில் அவன் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரியும் எனக் கூறினார்.வகுப்பறையில் மணி ஒலிக்க இனிமையான தமிழ் வகுப்பு நிறைவடைந்தது.



புதன், 24 ஜூலை, 2013

நற்றிணை - 210. மருதம்-மிளைகிழான் நல்வேட்டான் -பத்தாம் வகுப்பிற்குரிய தமிழ்ப் பாடல்


நற்றிணை - 210. மருதம்
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்  5
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.  
நெல் அறுத்து நீங்கப்பெற்ற அழகிய இடமகன்ற வயலின்கண்ணே மறுபடி உழுத ஈரமுடைய சேற்றில்; விதைக்கும் வண்ணம் விதைகொண்டு சென்ற கடகப்பெட்டியில் மிகப் பலவாகிய மீன்களைப் பிடித்துப் போகட்டு மீண்டு கொண்டு வருகின்ற; புதுவருவாயினையுடைய ஊரனே!;  

  • அரசராலே மாராயம் பெறப்படுதலும் அவர் முன்பாக விரைந்த செலவினையுடைய குதிரை தேர் யானை முதலாகியவற்றை ஏறிச்செலுத்துதலும் (ஆகிய அருஞ்செயல்) செல்வம் எனப்படுவன அல்லகண்டாய்; அவையனைத்தும் முன்பு தாம் செய்த வினைப்பயனான் எய்தப்படுவனவாகும்;
  •  இனிச் சான்றோராலே செல்வம் என்று உயர்த்துக் கூறப்படுவதுதான் யாதோவெனில்?; தம்மை அடைக்கலமாகக் கைப்பற்றியவர்க்கு உண்டாகிய துன்பத்தை அஞ்சி அத்துன்பத்தைப் போக்கி அவரைக் கைவிடாமல் ஆளுகின்ற இயல்புடனே வன்கண்மையின்றி இனிய தன்மையனாயிருக்குஞ் செல்வமேயாம்;
  • அடைக்கலமெனக் கைப்பற்றி யொழுகாநின்ற இவளை நீ கைவிட்டதனாலே அத்தகைய இயல்பு நின்பால் இல்லையென்று அறியக் கிடக்கின்றமையின் இனிக் கூறியாவதென்?

தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய், வாயில் நேர்ந்தது. - மிளைகிழான் நல்வேட்டனார்
You hail from a fertile place where the
stubbles from the previous harvest
on the broad field
were removed ,
the wet field are ploughed,
to raise the new crop,
the farmers  who went with seeds
in the straw baskets
departed the fields
with many fishes
in the basket.
But you must realize that
tall words and fast mobility
isnt true wealth,
it is just results of your actions.
The greatest wealth
according wisemen
is  the kindness expressed by eyes
when it fears
the sorrowful eyes his/her kin.
Poet: Milaikizhan  Nalvettanar
Translated by Palaniappan Vairam
அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
stubble let on reaped field – changed – (that) place – broad field    
மறுகால் உழுத ஈரச் செறுவின்
crop raised second time – ploughed- wet- field
வித்தொடு சென்ற வட்டி பற்பல
with seeds- went- straw basket – many   
மீனொடு பெயரும் யாணர் ஊர
with fish – depart – fertile/wealthy- place
நெடிய மொழிதலுங் கடிய ஊர்தலும்
tall- words (praise) – swift – travelling
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
wealth – not – one’s- action’s- result
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
wisemen’s-wealth – is – kin’s
புன்கண் அஞ்சும் பண்பின்
sorrowful eyes – fearing –   manners
மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவே.
tenderness (as expressed by eyes) – wealth of -wealth – it is.
அரிகால் மாறிய-நெல் அறுக்கப்பட்டு நீக்கப்பட்ட
அம்கண்-அழகிய இடம்
அகல்வயல்-அகன்ற வயல்
வித்து-விதை
வட்டி-விதைக்கூடைலிலே அறுவடை செய்யப்பட்டுள்ளது.
யாணர் ஊர-புது வருவாயினை உடைய தலைவனே
நெடிய மொழிதலும்--மாராயப் பட்டம் போன்ற சிறப்புகளைப் பெறுதலும்
கடிய ஊர்தலும்---தேர்,யானை,குதிரை போன்ற சிறப்புகளைப் பெறுதலும்
சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின்---தன்னை அடைந்தவர்க்கு உண்டாகிய துன்பத்தைக் கண்டு அஞ்சி  அவர் துன்பத்தை நீக்கி அவரைக் காத்தல்
மென்கண் செல்வம்--வெறுப்பு கொள்ளாமல் அன்பு காட்டி நடப்பவனாய் இருக்கும் செல்வம்
எளிமையான உரை

  • வயலிலே அறுவடை செய்யப்பட்டுள்ளது.
  • அத்தகைய வயல் மீண்டும் உழப்பட்டு சேறாய் உள்ளது. 
  • கூடையில் கொண்டு வரப்பட்ட விதைகள் அச்சேற்றிலே முளைக்க வைக்கப்பட்டுள்ளன.
  •  அந்தச் சேற்றில் துள்ளி விளையாடும் மீன்களைப் பிடித்துப் போட்டுக்கொண்டு வரும் புது வருவாயினை உடைய தலைவனே!
  • அரசு பாராட்டப் பெறும் மாராயம் போன்ற சிறப்புகளைப் பெறுதலும்,
  • -தேர்,யானை,குதிரை போன்ற சிறப்புகளைப் பெறுதலும்,செல்வங்கள் ஆக மாட்டா. அது அவரவர் முன்வனைப் பயனே.
  • இனிச் சான்றோராலே செல்வம் என்று உயர்த்துக் கூறப்படுவதுதான்  தம்மை அடைக்கலமாகக் கைப்பற்றியவர்க்கு உண்டாகிய துன்பத்தை அஞ்சி அத்துன்பத்தைப் போக்கி அவரைக் கைவிடாமல் ஆளுகின்ற இயல்புடனே இருப்பது செல்வமேயாம்;
  • அடைக்கலமெனக் கைப்பற்றி யொழுகாநின்ற இவளை நீ கைவிட்டதனாலே அத்தகைய இயல்பு நின்பால் இல்லை எனத் தோழி கூறினாள்.


வியாழன், 18 ஜூலை, 2013

செவ்வாய், 16 ஜூலை, 2013

தமிழ்



                            தமிழ் மொழி
தமிழ் என்பது உள்ளத்திலிருந்து எழும் இனிமையான இசை போன்றது. அத்தகைய இனிமையான மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர் எவ்வாறு தொடக்க நிலையில் கற்பிக்க வேண்டும்?
இசை ஓர் ஆத்மார்த்தமான ஆனந்த லயிப்பு. இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை. தமிழ்ப் பாடலை இசையுடன் கலந்து பாடலாம்.
வகுப்பறை என்பது புனிதமானது. அது வகுப்பறை ஏடுகளைத் திருத்தும் களமல்ல. வெறும் ஏடுகளைத் திருத்துவதால் ஒரு மாணவனின் கல்வித்திறன் வளர்வதில்லை.
45 நிமிட வகுப்பறையில் ஒரு மாணவனின் கற்றல் திறன் வெறும் 20-25 நிமிடங்கள் மட்டுமே. அத்தகைய நேரத்தில் ஆசிரியர் ஆர்வமூட்டி செயல்திறன் பயிற்சி அளித்து, பாடப்பொருளைக் கற்பித்தல் அவசியம். ஆர்வமூட்டல் என்பது ஒரு பாடப்பொருளுக்கு மிகவும் முக்கியமானது.
பாடப்பொருள் கற்பிப்பது மட்டும் ஒரு ஆசிரியர் கடமையாகாது. தான் கற்பித்ததை மாணவன் நிறைவு செய்துள்ளானா என்பதை அறிய எளிய வழி வகுப்பின் இறுதி 5-10 நிமிடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். எழுத்து முறையிலோ, வாய்மொழி மதிப்பீட்டிலோ மாணவனின் திறனை அளவிடுதல் மாணவனின் கல்வித் திறனை வளர்க்கும்.
         இன்றைய காலக்கட்டத்தில் மாணவன் வீட்டில் சென்று  படிப்பதில்லை(பெரும்பாலான மாணவர்கள்). காரணம் இதர பாடங்கள் மாணவனுக்கு இன்றளவில் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்றாகி விட்டது. அதனால் எல்லாப் பாடங்களும் அவனுக்கு மிகுந்த சுமை போன்று தோற்றமளிக்கிறது. எல்லாப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடப்பொருளைச் சற்று வாழ்க்கைக்குத் தகுந்த முறையில் சற்று நகைச்சுவை, உலக வாழ்க்கை இவற்றைத் தொடர்புபடுத்திக் கற்பித்தல்வேண்டும்.   
 மொழிப்பாடங்களை ஆசிரியர்கள்  வகுப்பறையில் கற்பித்தலே போதுமானது.
தமிழ்ப்பாடங்களை முழுமையாக ஒரு மாணவன் பொருளறிந்து கற்பானாயின் அவன் வாழ்வில் எத்தகைய தவறும் செய்ய மாட்டான். கற்பிக்கும் ஆசிரியர் அத்தகைய ஈடுபாட்டுடன் முழு தியாக சிந்தனையுடன் பாடப்பொருளைக் கற்பித்தல் வேண்டும். 

சாதீ(தி) ஒழிய இன்றைய ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியவை

                      சாதீ(தி) ஒழிய இன்றைய ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியவை

மதம் மனிதனைப் பண்படுத்த மட்டுமே பயன்பட வேண்டும்.  இறைவன் ஒருவனே. இறைவனை நாம் காண முடியாது. ஆனால் மனசாட்சியைத் தெய்வமாக நினைத்து அதன்வழி பணியாற்றுவது இன்றைய காலகட்டத்தில் அவசியமாகிறது. பணியாற்றும் இடங்களிலோ, பிற இடங்களிலோ மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் நடந்து கொள்வது அவர்கள் ஆற்றும் ஆசிரியப் பணிக்கு இழுக்காகும். மழை வரையறையின்றி எல்லா இடத்திலும்  பெய்து பூமியை வளப்படுத்துகிறது. அதற்குத் தெரியுமா! சாதி!மதம்!இனம் அனைத்தும் மனிதனுக்கு மட்டுமே உரித்தான பொறாமை என்னும் பெருநோயின் விளைவுகளால் தோன்றுபவை. இவை  மாணவரின் உள்ளத்தில் தீராத பிரச்னைகளை உருவாக்கும். ஆசிரியர்களே மாணவர் மத்தியில் தேவையற்ற பேச்சுகளைப் பேசுவது கூடாது. உள்ளம் என்பது தூய்மையான கோயில் போன்றது. அதில்  மனசாட்சியே கடவுள். அதற்கு நாம் செய்யும் மரியாதை நாம் செய்யும் நல்வழிச் செயல்களே. இதனை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
   ஆணும், பெண்ணும் சரிசமம் என்ற உணர்வு தலைமையிடத்தில் இருந்தால் மட்டும் போதாது. சக ஆசிரியர்களிடத்திலும் மலர வேண்டும். அடுத்தவர் குடும்பத்தில் தேவையற்ற தலையீடு, பணத் திருப்தியின்மை, அடுத்தவர் சொத்தின் மீது அவா  போன்றவை ஆசிரியராக இருக்கத் தகுதியுடையவரின் கொள்கையன்று. இக்குணம் அவ்வளவாகச் சுயமாக மாறிவிடாது. காரணம் நமது சமுதாயம் ஆணாதிக்கத் தலைமைச் சமுதாயம். வீட்டில் சகல உரிமையுடன் இயங்கும் ஆணொருவன் பணியாற்றும்  இடத்திலும் அவ்வாறே எதிர்பார்ப்பதன் விளைவு தேவையற்ற  பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் எழக் காரணமாகின்றன ஆண் தன்னால் முழுமையாக இயங்க முடியும் என நினைப்பின் அதைத் தன்னுடைய வீட்டிலிருந்து ஆரம்பித்துப் பழகலாம் அதை விடுத்துப் பணியாற்றும் இடத“்தில் தேவையற்ற சிந்தனைகளுடன் அவதூறுகளைப் பரப்பிப் பணியாற்றும் இ.டத்திற்கு இழுக்கு தேடித் தரலாகாது. உன்னால் முடியும் என்று உலகை நீ நடத்து எனப் பெண்கள் சமூகத்தினை வரவேற்கப் பழக வேண்டும். பெண்களும் பணியாற்றும் இடத்தில்  தமது உடையலங்காரத்திலும், தலையலங்காரத்திலும் சற்று கவனத்துடன் இருக்கப் பழகுதல் வேண்டும். ஆசிரியரது சிறு நடவடிக்கையும் மாணவனின் கவனத்தைத் திசை திருப்பிடச் செய்யும். ஒரு சிறு ரோஜா வகுப்பறையில் ஆசிரியர் தலையிலிருந்து கீழே விழும் போது மாணவர் கவனம் அதில் திரும்பும். அப்போது மாணவனின் முழுக் கவனமும் அந்த ரோஜாவின் மீது பதிகிறது.

 ‘ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்‘ என்பதேற்கேற்பச்  சமுதாயத்தில் வாழும் ஆசிரியர்கள்  தங்களது  செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய செயல்பாடுகளினால் வளமான ாணவர் சமுதாயம் மலரும்.


திங்கள், 15 ஜூலை, 2013

இலக்கியம் கற்பித்தலில் மேலும் சில எளிய வழிகள்



இலக்கியம் கற்பித்தலில் மேலும் சில எளிய வழிகள்

தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார் - குறள் 399

இலக்கித்தைப் பயிற்றுவிக்கும் போது அதன் இனிய சுவையை நாம் எவ்வாறு உணருகின்றோமோ, அதே இன்பத்தைக் கற்பவர்கள் உணருகின்ற வகையில், நாம் அதைப் பயிற்றுதல் வேண்டும்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல், இலக்கிய நுகர்ச்சியை அரியச்செய்தல் வேண்டும். சங்க இலக்கியங்கள் முழுமையான யாப்படைந்த பாடல்கள் அறம், பொருள், இன்பம், என்னும் நீதியை உள்ளடக்கியக் கவிதைகளைப் பயிற்றுவிக்கும் போது, ஒன்றி, உணர்ந்து பயிற்றுவித்தால் மாணவர்களின் உள்ளத்தில் பதியும்.

கலைபயில் தெளிவு

ஆசிரியரின் இலக்கணம் நல்லூலில் குறிப்பிடப்பட்டது போல, கலைபயில் தெளிவு, ஆசிரியருக்கு இருத்தல் வேண்டும். இலக்கியத்தை நடத்துகின்றபோது அதனோடு தொடர்புடைய செய்திகளை பல்வேறு இலக்கியங்களிலிருந்தும் எடுத்துக்காட்டிக் கூறுதல் நலம் பயக்கும்.

சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம், தற்கால இலக்கியம், இவற்றிற்கிடையே காணப்படும் சொல் மாறுபாடுகளையும், சொல்பரிணாமங்கள் மற்றும் திரிபு (மாறுபாடு) ஆகியவற்றை நன்றாக விளக்கிக் கூறுதல் வேண்டும்.

இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடியாக விளங்கி சமூகத்தின் பல்வேறு கலாச்சாரங்களைப் பதிவு செய்து இளைய தலைமுறைக்கு வழங்கி வருகிறது. எனவே, இதனை பொழுது போக்கிற்காக மட்டும் நாம் கற்காமல் வாழ்வியலுக்காகவும் கற்கவேண்டும் என்ற உறுதியுடன் கற்கவும், கற்பிக்கவும் வேண்டும்.