வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

இன்றைய உலகில் தமிழ் கற்பித்தலில் உள்ள சி்க்கல்கள்

இன்றைய உலகில் தமிழ் கற்பித்தலில் உள்ள சி்க்கல்கள்


செல்லிடப்பேசி பள்ளிகளில் கொண்டுவரத் தடை செய்யப்பட்டுள்ளது.கல்லூரிகளிலும் இதே நிலைதான்.ஒன்றைச் செய்யாதே எனச் சொல்லும்போதுதான் அதைச் செய்யும் போக்கு மாணவர் மத்தியில் மிகுந்து காணப்படுகிறது.
 காரணம் வெளிநாடுகளில் ஆண்ட்ராய்ட் பயன்படுத்தி ஆப்ஸ்களை உருவாக்கி  கற்பித்தலை முன்னேற்றப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலோ வீட்டளவிலும்,அதைப் பயன்படுத்தத் தெரிந்த குறைந்த அளவு பள்ளிஆசிரியர் என்ற அளவிலும் இயங்கி வருகின்றனர்.இதனால் கற்பித்தலில் சிக்கல்கள் மிகுந்துள்ளது.ஒன்றன் பொருளை மாணவர்கள் கற்கும்போது படைப்பாற்றல்திறனை ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் வெளிக்கொணருகிறது. எடுத்துக்காட்டாக இலக்கணப்பொருளைக் கற்பிக்கும்போது வகுப்பறையில் துணைக்கருவிகள்,கரும்பலகை,அல்லது பசும்பலகை என்ற அளவில்தான் நடத்தப்படுகிறது. ஆனால் ஒரு படம் மாணவனால் எடுக்கப்பட்டு அதை ஆப்ஸ் உருவாக்கிக் காட்டு என ஆசிரியரால் உருவாக்கப்படும்போதுமட்டுமே மாணவனின் முழு கற்றல்திறன் வெற்றியடைகிறது. இந்த மொபைல் பிரச்னை எல்லா நாடுகளிலும் உள்ளது.அறிவியலை வெற்றியாக்கிக்கொள்வது ஆசிரியர் கையில் உள்ளது. கற்றலைப் புதுவகையில் பயிற்சித்தாள்,ஆப்ஸ் உருவாக்கம் ஃப்ளிப் புக் என மாணவனை உருவாக்கச் செய்யும்படி செய்தால் அவர்கள் ஏன் கண்டதைத் தேடப்போகிறார்கள்.ஆசிரயர் சமுதாயம் இதனைப் புரிந்து கொண்டு இயங்கவேண்டும்(காலத்திற்கேற்றாற்போல) தேடுதல் என்பது மாணவனுக்கு மட்டுமல்ல, ஆசிரியருக்கும்தான். கல்வியே இன்று கணினி மயமாகிவிட்ட நிலையில் கற்பித்தலை புத்தகத்துடன் நிறுத்துதல் தவறு.மொழியியல் பயிற்றாய்வுக்கூடம் வாரம் ஒருமுறை இயங்கி அவற்றில் இதையெல்லாம் உட்புகுத்த வேண்டும். புற்றுநோய் அபாயம் மொபைலை அதிகம் பயன்படுத்துவதால் வருகிறது. எனவே இது குறித்த விழிப்புணர்வினையும் மாணவர்களுக்கு அளிக்கவேண்டும்.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

கதை எழுதும் பயிற்சி

கல்யாணம்கறது அவனவன் சொந்த விருப்பம்.ஊருகூடி வர்றப்ப மட்டும்தான் நீங்கள்லாம் தேவை. நான் சொன்னா செய்யணும்,பாருங்க மேட்ரிமோனியல்ல.அந்த பொண்ணு வாயை,கண்ணை இது எனக்கு சூட் ஆகுமா! நான் இருக்கற ஸ்டேட்டசுக்கு நீங்க உங்க ஸ்டேட்டசுக்குத் தகுந்த பொண்ணெல்லாம் செட்டாகுமா?ஏதோ இந்த குடிசைல பிறந்துட்டேன்.எந் தலையெழுத்து. அம்மா நிமிர்ந்தாள். அப்ப இருக்கற இடத்துலயே ஏதாவது பாத்துக்கவேண்டியதுதானே?கலரும்,அழகும் ஒரு புள்ளைக்குத்தாண்டா வரும். மனசுதாண்டா ஆயுசுமட்டும்வரும்.பொண்ணுன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா! உனக்கு கஞ்சி ஊத்தித்தாண்டா வளத்தேன். அன்னைக்கு என் அழகுக்கு என்னன்னு நான் கேட்டிருந்தேன்னா உங்கதி என்னஆகும்? ப்ச்! நான் இருக்கற இடம் அப்படி.
டேய்…உன்னைச் சின்னவயசுல இருந்தே உன்னை எனக்குத் தெரியும்.இடுப்புல தூக்கினப்பவே உனக்கு பாலபாடம் கத்துக்கொடுக்க ஆரம்பிச்சவ நான்.உன் ஸ்டேட்டஸ் என்னன்னு எனக்குத் தெரியும்.வாயை மூடு…….கதையினைத் தொடர்ந்து எழுதுக.
மின்னஞ்சலின்  பயன்பாடுகள்
பொருத்தமான விடை தேர்க(இதனை,காலதாமதத்தை,இடத்தை,முறையினை)
ஒரு -----------க் கண்டுபிடித்துச் சென்றடைவதற்கும்,அவரிடமிருந்து தகவல் பெறுவதற்கும் ஏற்படும் காலதாமதத்தை மின்னஞ்சல் சரி செய்கிறது. -----------க் கண்டுபிடித்தவர் ஒரு இந்தியர். ஆனால் இந்த மின்னஞ்சல்----------------த் தகுந்த வழியில்மட்டும்  பயன்படுத்தாமல் அவரவருடைய வசதிக்கேற்றபடி மனதுக்கேற்றாற்போல பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் ஏராளம்


திங்கள், 23 பிப்ரவரி, 2015

கதை எழுதும் பயிற்சி

              கதை எழுதும் பயிற்சி
கணேசன் அன்று கல்லூரிக்குச் செல்லவில்லை. வீட்டில் உள்ள உத்தரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த கூடை ஊஞ்சலைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
என்னப்பா! போகலையா…….காலேஜூக்கு……..செருப்பு தைத்து அசதியுடன் கைப்பெட்டியை வைத்துவிட்டு நிமிர்ந்தார் அப்பா.
இன்னைக்கு பட்டமளிப்புவிழாப்பா! ஸ்டேட் ஃபர்ஸ்ட்பா…..மெடிகல்ல……………. இந்தமாதிரி நான் வந்திருக்கறது உங்களாலதானேப்பா! எல்லாரும் அவங்கஅவங்க பெத்தவங்களோட வருவாங்கப்பா! நான் மட்டும் எப்படிப்பா போறது?உங்களுக்கு கேமராவுல ஃபோட்டோ எடுக்கறது ரொம்ப பிடிக்கும்ல…..மொபைல் ரொம்ப சின்னதா இருக்குப்பா..என்ஃப்ரெண்ட்கிட்டகேட்டதுக்கு அவன் கேமராவைக் கொடுத்திருக்காம்பா! உங்க இஷ்டத்திற்கு எடுங்கப்பா! நான் சம்பாதிச்சு உங்களுக்கு நல்லா வந்துச்சுன்னா அதேபோல வாங்கித் தர்றேன்.
இல்லைப்பா! அப்பா படிக்கலை…எனக்குப்பா இந்த இங்கிலீஷூ,பேண்ட் இதெல்லாம்  பழக்கமில்லைப்பா! அங்க எல்லாரும் இருப்பாங்க! உனக்கு அப்புறம் அவமானமாயிடும்.யாராவது ஃபிரெண்ட்ஸ்கிட்டகூட இவர்தான் உஙக அப்பாவான்னு கேட்டா உனக்குக் கஷ்டமாயிடாதா?
அதெல்லாம் ஒண்ணுமில்லை! நீங்களா எதாவது நினைச்சுக்காதீங்கப்பா!
இல்லைப்பா! பசங்க செருப்பு தைக்க வரும் .வந்த இடத்துல தன்னுடைய பேரண்ட்ஸ் பத்தியும் பேசும்.தன்னோட கூடப்படிக்கறவங்க பேரண்ட்ஸ் பத்தியும் பேசும். அப்ப அதுங்க பேசுறதைக் கேட்டா ஏண்டா பிள்ளை இந்தமாதிரி பேசுதுன்னு தோணும். அந்த பையன்ரூமுக்கு வந்து அந்த தாத்தா வந்து காலைல படிக்கறதுக்கு எழுப்பி விட்டாராம்! என் பர்சனல்லாம் இருக்கும்னு தாத்தாவுக்குத் தெரியமாட்டேங்குதுன்னு பேசறாம்பா!
யாருப்பா அந்த பையன்?ரகுவா!
அதெப்படி அவ்வளவு கரெக்டா சொல்றே! அவங்க தாத்தா பத்தி தெரியுமா உனக்கு! ஏன் அப்படிப்பேசுறான். அவன் எங்கே காலேஜூக்கு ஒழுங்கா வந்தான்?அவங்க வீட்ல அவங்க சொந்தக்காரங்கபொண்ணு படிக்குதுப்பா! அதுங்களுக்கு உடம்பு கொஞ்சம் வீக்.அதனால பாடத்துல வீக்.எதுவும் கொஞ்சம் அழுத்திச் சொன்னாத்தான் புரியும். அதுங்க தப்பா படிச்சா சொல்லித் தராம சிரிக்கறாம்பா! அதுங்க சொல்லி எங்கிட்ட படிச்சுட்டுபோகுதுங்க………விடுங்கப்பா! அவங்கப்பா செங்கல்லு தலைல சுமந்து கட்டுன வீடு அது. மௌனமானான் கணேசன். ஒரு விளம்பரத்தைப் பாத்தீங்களாப்பா! கர்பத்துல இருக்கற புள்ளை வானத்துல போயி வைஃபை இருந்தாத்தான் அந்த வீட்டுக்குப் போவேன்னு பேச வைக்கிறானுங்க!
 அதுக்கெங்கே அதைப்பத்தியெல்லாம் புரியப்போகுது.
கம்ப்யூட்டர் காலம்டா……. என்னடா! நானும் உன்னைமாதிரி இங்கிலீசு கலந்து பேசுறேன்னு பாக்கறியா! எல்லாம் உங்கூடப் பழகுன தோஷம்தான். உங்கம்மா இருக்கறவரைக்கும் அவ எனக்கு உதவி செய்வா! அதனால உனக்குத் தேவையானதை நான் வாங்கித் தருவேன்.ஆனால் அவ இப்ப உன்னோட மேற்படிப்புக்குப் பணம்வேணும்னு வேறு தெருவுல கடை போட்டிருக்கா! அவ வராம நான் மட்டும் வர முடியுமாப்பா! இப்பல்லாம் காசு கொடுத்தாவே இந்த படிப்புக்கு சீட் கிடைக்குதுன்னு செல்றாங்களேப்பா! அப்ப எப்படிப்பா வைத்தியம் அந்த பசங்களுக்குத் தெரியும்? அப்படி படிச்சுட்டு வர்ற பசங்களுக்கு அதே புத்திதானேப்பா இருக்கும்.சேவை மனப்பான்மை எப்படிப்பா இருக்கும்?யாரையும் நம்மால திருத்த முடியாதுப்பா.நம்மவரைக்கும் இன்னைக்கு சரியாக மனசை சுத்தமா வைச்சுக்கணும்..உங்க உடுப்பும்,இங்கிலீசு தெரியாததும் இல்லை வெளியுலகிற்குத் தேவையில்லாதது. உங்ககிட்ட இருக்கற உண்மையான மனசு வெளியில தெரிஞ்சா போதும். அதுதாம்பா இத்தனைவருசமா நீங்க தொழில் செஞ்சுக்கிட்டிருக்கீங்க! எல்லாத்துலேயும் நேர்மை வேணும்ல… சரி! அம்மா வரட்டும்…….காத்திருக்கிறேன்..
இல்லைப்பா….நீ கிளம்பு….அம்மா வர லேட்டாகும்னு ஃபோன் செஞ்சா….அவளுக்கு கால்ல சுளுக்காம்.அதுக்கு அவளா கால்ல தலைமுடியைச்சுத்தி மண்ணைச் சுத்திப்போட்டுக்குட்டா சரியாப்போய்டுமாம்.
அம்மா அதுக்குத்தான் சுத்திப்போட்டாங்களாமா! இல்லைன்னா வேற ஏதாவது இருக்கப்போகுதுப்பா!
கதையினைத் தொடர்ந்து எழுதுக.
கதையில் காணப்படும் பிறமொழிச் சொற்களைத் தனியே எடுத்து எழுதுக.
கதைக்குப் பொருத்தமான தலைப்பை எழுதுக.

பேச்சுத்தமிழ்ச் சொற்களை எடுத்து எழுதித் தூய தமிழ்ச்சொற்களை எழுதுக.

புதன், 18 பிப்ரவரி, 2015

வாழ்க்கைப்பாடங்கள்

வாழ்க்கைப்பாடங்கள்

இவ்வுலகில் நிரந்தரமானது அனைவருக்கும் பொதுவானது அன்பு. அத்தகைய அன்பு எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது
பெற்றோர் குழந்தைகளிடம் காட்டும் அன்பு
பிறர்மீது மனிதநேயத்துடன் வாழும் அன்பு
என இருவகையாகப் பிரித்துக்காட்டலாம்.
ஏனெனில் இன்றளவில்  நிறைய இன்றைய குழந்தைகளிடம் மாறுபாடான விஷயங்கள் காணப்படுகின்றன.
தன்குழந்தை என்ற அளவில் ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில் தமது குடும்பத்தை அமைத்துவாழும் பெற்றோர் தாம் உண்ணாது குழந்தைகளுக்காகச் சேமித்து ஏன் பிறரிடம் இலஞ்சம் பெற்று உயரிய படிப்புடன் இருந்தாலும் வெளியுலகில் தமது மரியாதையைக்குறைத்து வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் அந்தக் குழந்தைகளுக்குப் பெற்றோரின் அன்பு புலனாவதில்லை.கஞ்சி தான் குடித்து பிள்ளைக்கு பிட்சாவும்,பர்கரும்,விலை உயர்ந்த ஆடைகளையும் வாங்கித்தருகின்றனர்.பிள்ளைகளுக்குத் தமது கஷ்டங்களைப் புரியுமாறு சொல்லி தம்முடன் அமர்ந்து பகிர்ந்து உண்ணும் தன்மையைப் பெற்றோர் ஊட்டவேண்டும். இன்றளவில் நிறைய பிள்ளைகள் பெற்றோருக்கு அளிக்காமல் அவர்களின் நகை,உணவு இவற்றையே கருத்தில்கொண்டு சிறுவயதில்இருந்தே பிடுங்கி வைத்து சமயத்தில் பெற்றவர்களையே அடித்துவிடுகின்றனர். பார்ப்பவர் ஏதாவது கேட்டால் ஒன்று, இரண்டு வைத்திருக்கிறோம்.போனால் போகட்டும் எனப் பெற்றோர் விட்டுவிட அது பிற்காலத்தில் பாசமே என்ன என்பது தெரியாமல் தான்தோன்றித்தனமாக வளர்கின்றது. நீ சோறா போட்டு வளர்த்தாய்?எனக் கடைசிகாலத்தில் அவர்களையே கேள்வி கேட்கின்றனர். பெற்றவள் தலையில் பூவைத்தால்கூட மகள்களுக்குப் பொறுப்பதில்லை.நல்ல துணிமணிகளைத்தாய் அணிய மகள் விடுவதில்லை.தகப்பன் பயன்படுத்தும் அன்றாடப்பொருட்களைத் தான் பயன்படுத்தி மகன்கள் அவர்களைத்தூக்கி எறிந்துவிடுகின்றனர்.

வயதான பெற்றோர் அப்போதுகூட தமது முதுமைப்பருவத்தைப்பற்றிக் கவலைப்படாமல் தமது பேரக்குழந்தைகளுக்காகவே வாழ்ந்து பரிதாபமான மரணத்தைத் தழுவுகின்றனர். பேரக்குழந்தைகளும் இன்று தமது தாத்தா,பாட்டியை பணம் காய்ச்சிமரமாகவேதான் பாரக்கின்றனர்.அந்த தாத்தா அது செய்தார், இந்த தாத்தா இது செய்தார் நீ என்ன என்பதுபோலக் கேள்வி எழுப்பி அவர்கள் மனதை நோகடிக்கின்றனர்.பெற்றவர்களே அதைச்சொல்லிக்கொடுத்துவளர்க்கின்றனர்.அடுத்தவர் பார்க்க பெருமையாக அவர் இது கொடுத்தார்,இது கொடுத்தார் என்று சொல்லி முதியோரை மனம் நோகவிடுவது வாழ்க்கை கிடையாது. ஒரு பிள்ளைக்கு அது செய்தாய்,என் பிள்ளைக்கு நீ இது செய்யவில்லை.உனக்கு அவன்தான் பிரியம் என மனதை நோகடிக்கும் பிள்ளைகளே அதிகம்.இது 3 வயதுக்குந்தை முதல் 60வயதுப் பிள்ளைவரை இன்று பெற்றோரைக்கேள்வி கேட்கிறார்.அவர்களது மனநிலையை யாரும் புரிந்துகொள்வதில்லை. வயசாயிடுத்தோல்லியோ,இனி எல்லாமே அப்படித்தான்....... என சிவாஜி பாடும் பாட்டை அசைபோட்டு வாழும் குடும்பங்கள் எத்தனை எத்தனை?ஒரே வீட்டில் சுவிட்ச்,இடம்குறிப்பாக அறிந்து பழக்கப்பட்ட அவர்களால் தமக்காக வேறு புதுவீட்டில் எப்படி வாழமுடியும் என்றுநினைத்துக்கூடப் பார்க்காமல்பிள்ளைக்கொல்லிகள் இன்று இருக்கின்றனர்.வயதானால் கால்தள்ளும்,துணிகூட இடறும் என்றுகூடத் தெரியாமல் மொபைலை ஏன் கீழே போட்டீர்கள்?ஏன் மெயில் பார்க்கத்தெரியலை?நான்தான் பார்த்துப்பழகுங்கன்னு சொன்னேன்ல..என சிறுபிள்ளைத்தனமாகத் தான் வாழும் வாழ்க்கையின் பகட்டைப் பெற்றோரிடம் காட்டக்கூடாது. தமது பெற்றோர் விருப்பப்பட்டால்தவிர அவர்கள்மீது இதைப்போன்ற செயல்களைத் திணிக்கக்கூடாது. ஒருபிள்ளை இங்கே,மறு பிள்ளை வேறெங்கே என வாழும் சமுதாயத்தில் பெற்றோர் அனைவருக்கும் பிள்ளை ஒன்றுதான்.ஆனால்  தள்ளி இருக்கும் பிள்ளைமுகம் காண இன்னொரு பிள்ளையிடம் கூற இயலாமல் அறிவியல்உபகரணங்களைப்பற்றித் தெரியாமல் பயன்படுத்தச்சொல்லி யாராவது வரமாட்டார்களா என ஏங்கித் தவிக்கும் குடும்பங்கள் எத்தனை தெரியுமா?என்ன அறிவியல் வளர்ச்சி வந்து என்ன செய்ய? பி்ள்ளைகளுக்குப் பண்பாடு தெரியவில்லையே? வீட்டிற்குள் இன்னொரு பிள்ளை இருந்தும் அதைப் பயன்படுத்தத்தெரிந்தும் அதைக்கண்டுகொள்வதுகிடையாது.காரணம் பொறாமை,சுயநலம்.தமது வசதிக்காக வாழும் பிள்ளைகள் தம்கையை எதிர்பார்த்தே வாழவேண்டுமே தவிர பெற்றோரின் உழைப்பை உறிஞ்சிவாழக்கூடாதுஇளவயதில் அடுத்தவருடன் ஒப்பீடு செய்து வாழும் பிள்ளை அடுத்தவர்கள் தமது பெற்றோரை எப்படி வைத்திருந்தார் என்பதை யோசிப்பது கிடையாது.எனவே பெற்றோர் சமுதாயம் பிள்ளைகள் வளர்ப்பில் கவனமாக இருக்கவேண்டும்.ஆசிரியர்களுக்குமட்டும் பண்பாட்டினை வளர்ப்பது கடமையாகாது.பெற்றோரும் ஆசிரியருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். தாம் குடிப்பது கூழாக இருந்தாலும் அதைச் சந்தோஷமாக அருகில் ஊற்றிக்குடிக்கும் மனநிலையைக் குழந்தைக்கு ஊட்டி வளர்க்கவேண்டும்.பண்பாடு என்பது மனதைப் பண்படுத்தி வாழ்வது.புண்படுத்தி வாழ்வது அல்ல.ஒருபானை சோறிருந்தாலும் உட்கார்ந்திருக்கும் அனைவரும் பகிர்ந்துண்டு வாழும் மனநிலையை வளர்க்கவேண்டும்.தமிழ்மொழி இதைத்தான் வாழ்க்கைப்பாடங்களாக அமைத்துக்காட்டியுள்ளன. இப்படி வளர்க்கப்படும் குழந்தைதான் நாளை பிறரிடம் அன்புகாட்டி வளரும் சமுதாயத்தை உருவாக்கிக்காட்டுவான்.நான் தவறு செய்யாமல்தான் வாழ்வேன் எனக் கடைசிவரையில் உறுதியுடன்வாழ்பவன்தான் தமது வாழ்க்கைப்பாதையில் வெற்றியடைகிறான்.  சகோதர,சகோதரிகளும் ஒருவருக்கொருவர் பொறாமைகொண்டு யார் அதிகமாகப் படிப்பது,பணம் ஈட்டுவது என இயங்கிவரும் உலகமாகிவிட்டதை  பெற்றோர்களும்,ஆசிரியர்களும்,உணரவேண்டும்.அலுவலகத்தாள்பேனா,பென்சில்,அடுத்தவர் மின்னஞ்சலைத்திருட்டுத்தனமாகப்பார்ப்பது,அடுத்தவர் பொருளை அனுபவிப்பது,அடுத்தவருடைய சொத்தினை ஆள்வது இவை யாவுமே நாம் கடைப்பிடித்தால் அவை அனைத்தும் நமது குழந்தைகளும் பின்பற்றும்.உலகத்தோடு ஒத்துவாழ் என நேர்மையில்லாத உலகில் வாழ்ந்தால் யாருக்காகச் சொத்து என்பதே மாறிவிடும் என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

சனி, 7 பிப்ரவரி, 2015

தமிழ்மொழியின் இன்றைய நிலைமை

             தமிழ்மொழியின் இன்றைய நிலைமை
மொழி ஒருவனுடைய வாழ்வின் நடத்தையைப் போதிக்கிறது. பிற பாடங்கள் ஒருவனுக்கு வாழ்க்கையில் பணம் ஈட்டுவதற்கான வழியாக இருக்கும்போது மொழியானது அவனது வாழ்க்கைக்கே அச்சாணியாகத் திகழ்கிறது. அத்தகைய இனிமையான தமிழ்மொழி கற்பவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதைப் பாடத்திட்டங்களில் அமைக்கப்பட்ட பாடங்கள் நிரூபிக்கின்றன. இறைவாழ்த்துமுதல் இலக்கணம் வரை ஒவ்வொன்றும் நாம் வாழ்ந்துகாட்ட வேண்டிய அறங்களாக இன்றளவில் நிற்கின்றன.
மின்னி மறைவது மானிட வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கையில் நாம் அறம் செய்து வாழ வேண்டும். அறம் என்றால் பெரிய அளவில் இருக்கவேண்டும் என்பதன்று.இதை இலக்கியங்கள் கற்ற ஆசிரியர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டியதில்லை. ஆனால் மக்களுக்கு இன்னமும் அத்தகைய பக்குவம் எப்போது வரும் என்பதுதான் தெரியவில்லை. இவ்வுலகில் வீசுகின்ற காற்றும், மரங்களும் யாரைக்கேட்டும் தமது கடமையைச் செய்வதில்லை.யாரிடமும் தமது குடும்பங்களுக்காகப் பிறரிடம் இலஞ்சம் வாங்கி வயிறு வளர்ப்பதில்லை.யாரையும் அடித்துப் பிழைப்பதில்லை. தீவிரவாதத்தை வளர்ப்பதில்லை. தமது குடும்பத்திற்காகப் பிறரிடம் யாசிப்பதில்லை. மனிதன்மட்டும்ஏன் அவ்வாறு வாழவேண்டும்?
அதுவும் தமிழ் கற்ற பெரியோர்களே இன்றளவில் அவ்வாறு ஊரோடு ஒத்து வாழ்கின்றவர்களாக இருக்கின்றனர். இத்தகைய தன்மையையா தமிழ் போதித்துள்ளது. சுயநலம் கருதா பாரதியும்,அரசியல் வகுத்த வள்ளுவரும் இதைத்தானா வகுத்துச் சென்றுள்ளனர்.
  தமிழ்மொழியில் பேசினால் வேலைவாய்ப்பின்மை பெருகுகிறது என்பது எதனால் ஏற்பட்டுள்ளது? தமிழ்மொழி கூறிய கருத்துகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்கவில்லை.பொறாமை,வஞ்சகம்,ஒற்றுமையின்மை,சுயநலம்,பிறரைஅடித்துப்பிழைத்தல் இவற்றின்கீழ் வாழ்தலால் தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது.அத்தகைய நச்சுக்கொடிகளை வேரறுத்துவாழும்போதுதான் தமிழ்மொழி தழைக்கும்.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

இணையத்தில் தமிழ் நாளேடுகள்-ஓர் ஆய்வு                                       இணையத்தில் தமிழ் நாளேடுகள்-ஓர் ஆய்வு
                                                                                   முனைவர் பி.ஆர்.இலட்சுமி.,
                        பி..லிட்.,எம்.ஏ(தமிழ்),(மொழியியல்).,எம்ஃபில்.,புலவர்.,பிஎச்.டி., டிசிஇ.,(பிஜிடிசிஏ).,(எம்.ஏ.,டிசிஏ) 
                                                                                                                    தமிழ்த்துறை வல்லுநர்,
                                                                   சென்னை-66.
                 நாடு விட்டு நாடு இடம்பெயர்ந்து குறிப்பிட்ட கொள்கைக்கென மனித சமூகம் வாழ்ந்து வருதல் பண்டைக்கால மரபு. அவ்வாறு வாழ்ந்து வரும் காலகட்டங்களில் இடத்திற்கேற்றவாறு தன்னைப் பண்படுத்தி வாழ்வது  மனிதனின் பண்பாட்டுநெறி. அறிவியல் இயந்திர உலகில் அனைத்தும் கணினியின்வழி இயங்கிவருதலின்போது சமூதாயத்தில் பண்பாட்டின் வெளிப்பாடான நாளேடுகளின் பங்கு இன்றியமையாதது. அத்தகைய நோக்கில் இணையத்தில்  வெளியாகும் மின் நாளேடுகள் குறித்து ஆய்வது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகிறது.
இணைய நாளேடுகளின் வளர்ச்சியும், பயன்களும்
             மனிதன் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் குறித்து அறிவதில் அதிக ஆர்வம் காட்டிவாழ்வது உலக இயல்பு. மக்கள் இன்றைய வாழ்க்கைமுறையில் இணையத்தைச் செல்லிடப்பேசி, கணினி எனப் பலமுறைகளிலும்  பயன்படுத்துகின்றனர். இவ்வுலகில் ஊர்திகள் சென்று சேர இயலாத இடத்திலும் செய்திகள் இதன்வழியாக மக்களைச் சென்றடைகின்றன. இதனால் மக்களின் தொழில்நுட்பச் சிந்தனைக் கருத்துகள் தெளிவடைகின்றன. நாளேடு வடிவத்தில் இணையத்தில்  படிக்கப் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மக்களின் தேவை அறிந்து அவை இயங்கி வருகின்றன. காலந்தோறும் மக்களின் தொழில்நுட்பச் சிந்தனைக் கருத்துகள் வளர்ச்சியடைந்துள்ளமையால்  1974ஆம் ஆண்டிலிருந்து மின் நாளிதழ்களுக்கான முன் மாதிரி நுட்பங்கள் வளர்ந்தன. இலினாய்சு பல்கலைக்கழகத்தில் பிளேட்டோ முறைமையைப் பயன்படுத்தி இணையத்தில் மட்டும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நாளிதழ்கள் தயாரிக்கப்பட்டன.(விக்கிஃபீடியா)
 படைப்புகளின் பக்கங்களைப் பிரதி எடுக்கவேண்டிய வசதிக்கட்டமைப்புகளுடனும், உடனடி விவாதக் கருத்துகளுடன்கூடிய வசதிநிலைகளுடனும் யுனிகோட் தொழில்நுட்பத்திற்கேற்றாற்போல இணைய நாளேடுகளான தினமலர், தினமணி, தினத்தந்தி, தினகரன், தி இந்து, தமிழ்முரசு போன்றவை இந்தியாவில் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன.
மாணவர்கள்  அடையும் நன்மைகள்
           புத்தக வாசிப்பு (www.badhriseshadhri.nin) குறித்து மாணவர்களிடையே பத்ரி பேசியமை குறித்த செய்தியின்வழி இன்றைய மாணவர்கள் எதனையும் பார்த்து அறிவதில்தான் நாட்டம் அதிகம் உடையவராக இருப்பது தெரியவருகிறது. நாளேடு படிக்கும் பழக்கம் மாணவர்களிடையே குறைந்து வருகின்ற காரணத்தினால் பெரும்பான்மையான தமிழகப் பள்ளிகள் நாளேடுகளில் வெளியாகும் செய்திகளைப் படிக்கும் முறையினை ஊக்குவிக்கின்றன. நாளேடு செயல்வரைபடத்திட்டத்தின்வழி கற்றல்திறனை மாணவர்களிடத்தில் வளர்க்கிறது. இது இணையவழி நாளேடுகளைப் படிப்பதினால் ஏற்படுவதில்லை. இருப்பினும்,  தரவுகளைச் சேகரித்துக் கற்றல்திறனை மேம்படுத்த இணைய நாளேடுகள்  உதவி புரிகின்றன. படிக்க இயலா நேரங்களில் நமக்குத் தேவைப்படும் நாட்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் வசதியினையும் நாளேடுகள் அளிக்கின்றன.  சினிமா, புத்தகம், இசை சார்ந்த ரசனைகள், பாதித்த நிகழ்வுகள், ஆன்மீகம். சமையல், வேடிக்கை, கிசுகிசு, அரசியல், அன்றாட நிகழ்வுகள் எனப் பலதரப்பட்ட செய்திகளை நாளேடுகள் அளிக்கின்றன. நாளேட்டின் வலைத்தள வடிவமைப்பு வண்ணத்திற்குப் பெரும்பான்மையான நாளேடுகள் இன்னமும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.

                 நடுத்தரவருமானம் நிறைந்தவர் வீட்டில் ஒரு நாளேடு மட்டுமே வாங்க இயலும். அவர்களால் நினைத்த கோயில்களுக்குக்கூடச் செல்ல இயல்வதில்லை. நூலகத்திற்குச் சென்று படிக்கும் வாய்ப்புகளும் மிகவும் குறைவு. இத்தகைய சூழலில் வாழ்ந்து வரும் சமுதாயமக்களின் நலனுக்கேற்றாற்போலத் தினமலர் நாளேடு  அழகாக எல்லா மதத்தினவருக்கான ஒளிக்காட்சிகளை வடிவமைத்துள்ளது.  தினமலர் நாளேட்டினைப் படிக்கப் பதிவு செய்தால்  மின்னஞ்சல் வழியாக இலவசமாக நாளேட்டினைப் படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ‘நீங்கள் படித்தவை எனக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி மிகவும் பயனுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது.  புத்தகங்களைப் படிக்கும் வசதியும் குறிப்பிட்ட சில நாளேட்டினில் அமைக்கப்பட்டுள்ளன. தினமலரில் கணினி தொடர்பான இலவச வெளியீட்டினைத் தரவிறக்கம் செய்யும் வசதி முன்னர் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில வருடங்களாக இத்தகைய வசதி அளிக்கப்படாமல் மின்நூலாக மட்டுமே அளிக்கப்பட்டுவருகிறது.

             கல்வி குறிப்பிட்ட செய்திகளைத் தினமலரும், தினமணியும் அளிப்பதால் இணைய உலகில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன. வளர்ந்து கொண்டிருக்கும் தி இந்து நாளிதழ் இலக்கியச் சிறப்பாதாரங்களுடன் காணப்படுகிறது. குறிப்பிட்ட செய்திகளுக்கு அளிக்கும் உடனடி பதில்களைத் தினமலர் நாளேடு மின்னஞ்சல்வழியாகத் தொடர்புடையவரிடம் தெரிவிக்கிறது. இதைப்போல மக்களின் மனதைப் புரிந்துகொண்டு நாளேடுகள் அமைக்கப்படவேண்டும்.

                 தி இந்து‘ நாளிதழ் அறிவியல் சார்ந்த இலக்கிய அணுகுமுறைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. (http://tamil.thehindu.com/opinion/columns.article6757744-கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள்) முக்கியச் செய்திகளை ஒலி வடிவில் தரவிறக்கம் செய்யும் வசதியுடன்  நாளேட்டின் வடிவமைப்பினைப் புதுமையான கட்டமைப்பு வசதியுடன் அமைத்துள்ளது. சோதிட ஒளிக்காட்சியினை மக்களின் எண்ணங்களுக்கேற்றாற்போல நாளேடுகள் அமைத்துள்ளன. தினகரனில் பக்கவடிவமைப்பில் மருத்துவக்குறிப்புகள் பகுதியும், சமையலறைக்குறிப்புகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழ்முரசு பக்கவடிவமைப்பு ஓரளவு மட்டுமே சிறப்புள்ளதாக அமைந்துள்ளது. ஒளிக்காட்சியில் எழுத்துப்பிழையுடன் காட்சியளிப்பதை மாற்றி அமைத்திடவேண்டும். பிறமொழிக்கலப்பு மிகுதியாக அமைந்து கொச்சைத் தமிழ்ச்சொற்கள் அமைந்துள்ளதை மாற்றி அமைத்திடல்வேண்டும்.  தினத்தந்தி நாளேடு மணப்பந்தல் என உட்தலைப்பிட்டுச் செய்திகளை வலைப்பக்க வடிவமைப்பாக்கியுள்ளது. வலைப்பக்க வடிவமைப்பில் பிற நாளேடுகள் போலல்லாது தனித்துக் காணப்படுகிறது.

பெண் முன்னேற்றச் சிந்தனை
              பெண்கள் இணைய வசதியினைக்  குறைவான அளவில் பயன்படுத்தி வருகின்றனர். பெண்ணின் கற்பு குறித்த செய்திகள் உலகளாவிய அளவில் வேறுபட்டுள்ளன. பெண்கல்வி முக்கியத்துவத்திற்காகக் கற்பினை விலைபேசும் பெண்ணினமும்  இருப்பதால் பெண்கள் இன்றளவில்  பாலியல் பொருளாக நோக்கப்படுகின்றனர். பெண் சமுதாயம் உலகம் முழுவதும் ஒருங்கிணைந்த சில கருத்துகளைக் கொண்டிருந்தால் பெண்ணினம் வளர்ச்சிபெறும்.  பெண்களுக்கு நடைபெறும் வன்முறைகள்  நாள்தோறும் செய்திகளில் இடம்பெறுகின்றன. அவைகுறித்தே மக்களால் வாசிக்கப்படுகின்றன என்பதனை அறிந்து விழிப்புணர்வு பெறப் பல நாளேடுகள் பெண் பாலியல் கொடுமைகள் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இது சமுதாயத்தில் நல்ல எண்ணங்களைக் கொணர்தலின் பொருட்டு வெளிக்கொணரப்படுகின்றன. ஆனால், தனிமனிதத்துவத்தின் உணர்வினை வெளிக்கொணர்வது, பெண்ணின் சுதந்திர நிலையைப் படமெடுத்து வெளியிடுவது போன்ற சில  செய்தி நிகழ்வுகளினால் பெண் சமுதாயம் தாழ்வடையும்.
        பெண் என்பவள் ஒரு உயிரினை உயிர்ப்பிக்கும் வல்லமை பொருந்தியவள். பெண்கள் பகுதி எனக் குறிப்பிட்டு  சமையல், அழகுக்குறிப்புகள், வீட்டு அலங்காரம் போன்றவை மட்டுமே பெரும்பான்மையான நாளேடுகளில் இடம்பெறுகின்றன. உலகெங்கிலும் பெண் குறித்த கருத்துகள் மாறுபடவேண்டும். பத்திரிகையாளர்கள் பெண் குறித்த இதர  பாலியல் வருணனைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காது பெண்ணின் முன்னேற்றக் கருத்துகளுக்கு வழி வகை செய்யவேண்டும். விளம்பரங்களில் பெண்ணின் உடலமைப்பினை ஆபாசமாகக் காட்டும் விளம்பரங்கள் வெளியிடுதலைத் தடை செய்ய வேண்டும். அடித்தட்டு மக்கள் முதல் நாட்டின் முதன்மைப்பீடத்தில் இருக்கும் பெண்களைக்கூட நாளேட்டுச் செய்திகள் விட்டுவைப்பதில்லை. உலகநாட்டு நிகழ்வுகள் நடப்பதை வெளிக்கொணர்வது நாளேடுகளின் கடமை என்றாலும் அடிப்படை மனித உரிமைகளில் இருந்து தவறி விடுகின்றனர். இந்நிலை வருத்தத்திற்குரியது.  இத்தகைய நிலையினை மாற்றியமைக்க நாளேடுகள் ஒத்துழைப்பளிக்க வேண்டும். இதனால் பெண்களும் இணைய வசதியினை அதிக அளவில் பயன்படுத்த முன்வருவர். 
மொழிநடை
                     மொழிநடை என்பது காலமாற்றத்திற்கேற்ப மாறுபடுகிறது. நடைமுறையில் மக்கள் பேசும் மொழிக்கேற்ப இயல்பான நடையில், ஆங்கிலக் கலப்பில் நாளேடுகள் தங்களது மொழிநடையினை மைத்துக்கொள்கின்றன. சீனாவில் மொழிக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்துவத்தை இரா.சுப்பிரமணி வெளிக்கொணர்ந்துள்ளார். (ப.442.,13 ஆவது இணையத்தமிழ் மாநாடு,2014). பிறமொழிச்சொல் கலவாதிருத்தல் நடைமுறையில் கொண்டுவருவது மிகவும் கடினமான செயலாகக் கருதலாம். காரணம், தமிழ் தொடர்பான அறிவியல் கலைச்சொற்கள் தெளிவாக மக்களிடையே பரவவில்லை.
இருப்பினும் ஆங்கிலச்சொல்லை உட்தலைப்பிடாமல் அமைப்பது தமிழ்மொழியின் பெருமையை வெளிக்கொணர்வதாகும். மக்கள் பொது இடங்களில் பிறமொழிச்சொற்கள் கலப்பு  பயன்படுத்துவதைக்   கட்டுப்படுத்த வேண்டும்.
              இணையத்தில் வெளியாகும் நாளேடுகளின்  பங்களிப்பினால்  உலகில் பல இடங்களிலும் வாழும் மக்கள் செய்திகளை அறிந்துகொள்ள இயல்வதையும், அதனால் ஏற்படும் பயன்களையும் இக்கட்டுரை வெளிக்காட்டியுள்ளது. பலதரப்பட்ட முறையில் நாளேடுகள் வடிவமைக்கப்பட்ட முறைமை குறித்தும் இவ்வாய்வுக் கட்டுரையின்வழி அறிய இயலுகிறது.