செவ்வாய், 21 மே, 2013

தொல்காப்பியரின் வனப்புக் கோட்பாடும் பிற்கால வளர்ச்சியும்

தொல்காப்பியரின் வனப்புக் கோட்பாடும் பிற்கால வளர்ச்சியும்


தொல்காப்பியரின் வனப்புக் கோட்பாடும் பிற்கால வளர்ச்சியும்
முனைவர் இரமேஷ் சாமியப்பா,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
அரசினர் கலைக்கல்லூரி(தன்.),
கும்பகோணம்.
தமிழ் இலக்கணத்தைத் தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என மூன்று வகையாகக் கொண்டு யாப்பு அணி என்பனவற்றைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்துள் முறையே செய்யுளியல், உவமவியல் என்பவற்றுள் அடக்குவர். பிற்காலத்தார் இலக்கணங்களை வடநூல் முறையைப் பின்பற்றி ஐந்தாகக் கொண்டனர். தொல்காப்பியர்காலத்துக்கு முன்னும் பின்னும் யாப்பு  நூல்கள் பல தமிழில் இருந்தன. அவிநயம், காக்கைப்பாடினியம், சிறுகாக்கைப்பாடினியம், நற்றத்தம், பல்காயம், மயேச்சுவரம் முதலான யாப்பிலக்கண நூல்கள் யாப்பருங்கல விருத்திக்கு முன்னரே பல்கியிருந்தன. யாப்பருங்கலமும் யாப்பருங்கலக்காரிகையும் தோன்றிய பின்னர் அவை யெல்லாம் வழக்கொழிந்தன. அவற்றுள் தொல்காப்பியச் செய்யுளியல் ஒன்றே எஞ்சி நிற்கின்றது.
   தொல்காப்பியர், செய்யுளியலில் முதல் நூற்பாவில் செய்யுள் உறுப்புகளாக முப்பத்து நான்கு உறுப்புகளைப் பட்டியலிடுவார்.(செய்.313). இவற்றுள் எழுத்து, அசை, சீர் முதலான இருபத்தெட்டு உறுப்புகளைச் செய்யுள் அடிப்படை உறுப்புகள் என்றும் அம்மை முதலான எட்டினைச் செய்யுள் பொருள் புலப்பாட்டுக்கு உதவும் உறுப்புகள் என்றும் வகைபடுதற்கியலும்.
வனப்புக் கோட்பாட்டு வளர்ச்சி.
            தொல்காப்பியர் அம்மை முதலிய எட்டினையும் செய்யுள் உறுப்புகளாகக் கூறுகின்றார். பின்னர் வந்த உரையாசிரியர்கள் அவ்வெட்டினையும் அலங்காரமாகக் கருதினர். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரின் உரைப்பாயிரவழி இதனை அறிகின்றோம்.
இதனுள் முற்கூறிய வனப்பென்பது(தொல்காப்பியம் சுட்டும் அம்மை முதலிய எட்டு) பெரும்பான்மையும் பலவுறுப்பும் திரண்டவழிப் பெறுவதோர் அழகாதலில் பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர்நிலைச் செய்யுட்கு இவ்வெட்டும் அலங்காராமாயின. ஆகவே, இக்காப்பியத்திற்கு தோலென்பது ஒரு சொல் அலங்காரமாகவே வுணர்க.(1)
தொல்காப்பியத்திற்கு பின்னர் எழுந்த அவிநயம், காக்கைப்பாடினியம், சிறுகாக்கைப்பாடினியம், நற்றத்தம், பல்காயம், மயேச்சுவரம் முதலான மறைந்து போன யாப்பிலக்கண நூல்களில் கிடைக்கப்பெற்ற நூற்பாக்களுள் வனப்பு பற்றிய குறிப்புகள் கிட்டில.
        கி.பி பத்தாம் நூற்றாண்டினதாகக் கருதப்படுகின்ற அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்னும் இரு நூல்களிலும் வனப்பு என்னும் சொல் ஆளப்பெறவில்லை. யாப்பருங்கல விருத்தியுரையில் செய்யுட்களின் வகைகளைக் குறிப்பிடும்,
செய்யுட்  டாமே  மெய்பெற  விரிப்பின்
பாவே   பாவினம்  எனவிரண்   டாகும் (2)
என்னும் நூற்பாவினுரையில்,அம்மை முதலான வனப்பு அலங்காரம் செய்யுட்களைச் சிறப்பிக்க வருவன என்று பொருளுரைப்பர். பின்னரும், நிரல்நிறை முதலிய பொருட்கோள் பகுதியும் எனத் தொடங்கும் ஒழிபியல் புறநடை நூற்பா, அம்மை முதலிய ஆயிரு நான்மையும் என்னும் நூற்பா வரிகளுக்கு விளக்கம் தரும் போது அம்மை முதலிய எட்டு யாப்பு அலங்காரமும் என்று இவ்வெட்டினையும் அலங்காரமாகக் கொண்டு விளக்கம் எழுதிச் செல்வர்.
      தொல்காப்பிய நூற்பாக்களை மேற்கோள் காட்டி எண்வகை வனப்புகளையும் யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் குணசாகரர் விளக்குகின்றார்.    வனப்பு என்னும் தலைப்பின்கீழ் இந்நூலுள் காணப்படும் சூத்திரங்கள் தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியளில் காணப்படும் சூத்திரங்களைச் சொல்லமைப்பில் தழுவியும் பொருளமைப்பில் வேறுபட்டும் காணப்படுகின்றன.
குணசாகரரைத் தொடர்ந்து அம்மை முதலான எட்டு உறுப்புகளையும் வனப்பு என்னும் கலைச்சொல்லால் பேராசிரியர் அழைப்பர். இவரது உரையில்தான் ’வனப்பியல் தானே வகுக்குங் காலை’ என்னும் அடிகள் அம்மையை விளக்கும் நூற்பாவுடன் இணைத்துக் கூறுகின்றார். இத்தொடர், இளம்பூரணர் மற்றும் நச்சினார்க்கினியரின் உரைகளில் காணப்படவில்லை. இளம்பூரணர் அம்மை முதலான எட்டுவுறுப்புகளும் செய்யுளுறுப்பு என்னும் கருத்தினர். வனப்பு என்னும் சொல்லினைப் பேராசிரியரும்(நூ.எண். 227) அவரைத் தொடர்ந்து நச்சினார்க்கினியரும் எடுத்தாள்கின்றனர்.
      தொல்காப்பிய உரையாசிரியர்களில் பேராசிரியர் வனப்பு என்ற சொல்லினை முதன்முதலில் ஆள்கின்றார். நச்சினார்க்கினியரும் இவரைத் தழுவி உரை எழுதிப் போந்தனர். அவரவர் காலங்களில் கிடைக்கப்பெற்ற மேற்கோள் பாடல்களை இருவரும் சிற்சில இடங்களில் சான்று காட்டியும் பெரும்பான்மை குணசாகரர் உரை மேற்கோளினை எடுத்தாண்டுள்ளனர் என்பதும் உரைவழி அறிய முடிகிறது. உரையாசிரியர்களின் காலத்திற்குப் பின்னர் எழுந்த வீரசோழியம், முத்துவீரியம் போன்ற யாப்பிலக்கணம் நுவலும் நூல்களும் பாட்டியல் நூல்களும் வனப்பு குறித்து யாதொன்றும் கூறிற்றில. வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கணவிளக்கம் நூல் தொல்காப்பிய வனப்பிற்கு உரிய இலக்கண நூற்பாக்களைத் தொகுத்து ஒரே நூற்பாவாகவும் வரிகளில் சிற்சில சொற்மாற்றத்தோடும் உரைக்கின்றது.
வனப்பு: விளக்கம்.
தமிழில் அழகைக் குறிக்க பலசொற்கள் உள. அவற்றுள் வனப்பு, சாயல், எழில் என்பன முழுமையைக் குறிப்பன. வனப்பு என்னும், சொல்லுக்குப் பொதுவாக அழகு என்பது பொருள். தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர், செய்யுள் உறுப்புகளை இரு கூறாகக் கொண்டு எழுத்து, அசை, சீர் முதலான இருபத்து நான்கும் தனிநிலைச் செய்யுட்கு உரியது என்றும் அம்மை முதலிய எட்டும் தொடர்நிலைச் செய்யுட்கு உரியது என்றும்  'வனப்பென்பது, பெரும்பான்மையும் பல உறுப்பும்  திரண்டவழிப் பெறுவதோர் அழகு' (தொல்.பொருள். நூ. 547 உரை) என்றும் அடியார்க்கு நல்லார் கருத்தினைத் தழுவி விளக்கம் தருவார். அதாவது, பல செய்யுட்கள் சேர்ந்து அமைந்த ஒரு பெரும் பிரிவு அல்லது நூலின் தன்மையைக் குறிப்பது வனப்பு ஆகும்.  செய்யுட்களில் அவற்றின் அமைப்பு,   சொல்லப்படும் முறை,  சொல்லும் பொருள் ஆகியவை காரணமாக வனப்பு அமையும் என்பர். 
 அம்மை வனப்பு

                                                சின்மென் மொழியால் சீர்புனைந் தியாப்பின்
அம்மை தானே அடிநிமிர் வின்றே(தொல்.செய்.227)
மென்மையான சில சொற்களைக் கொண்டு உயர்ந்த பொருள்களைக் கூறுவது;   அடி எண்ணிக்கையில் குறைந்த செய்யுட்களைக் கொண்டது. இதற்குப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை எடுத்துக் காட்டாகக் கூறுவர் உரையாசிரியர்,
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை. 
(திருக். 315)
சில எளிய சொற்களால், பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போலக் கருதி நீக்க வேண்டும் எனும் உயர்ந்த பொருள் இப்பாடலில் சொல்லப் பட்டிருப்பதால் அம்மை வனப்பு என்பர். இதனுள் வந்துள்ள “தாய பனுவலொடு” என்ற அடையுடன் கூடிய பகுதி அறம் பொருள் இன்பமென்னும் முன்றிற்கும் இலக்கணம் கூற வந்த நூல்களைப் பற்றியதாகும்.
வனப்பு அடிப்படை சார்ந்த அம்மை பற்றித் தொல்காப்பியர் வகுத்துக் கூறும் பொழுது, சிலவாகிய மெல்லியவாகிய மொழியினால் தொகுக்கப்பெற்ற அடிகள் மிகுதியில்லாமல் வரும் செய்யுட்கள் அம்மையாகும் என்கிறார். தொல்காப்பியர் கூறும் “அம்மை” எனும் வனப்பில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இடம் பெறுகின்றன.இவ்விலக்கணமே தொல்காப்பிய அடிப்படையில் நீதி நூல்களுக்கானது ஆகும். எனவே நீதி நூல்கள் அடி அளவில் மிகுதிப்படாமல் இருக்க வேண்டும் என்ற வடிவ வரையறை தொல்காப்பிய அடிப்படையில் அமைந்ததனால் நீதி நூல்களின் பாடல்கள் சுருங்கிய அளவில் அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.
 அழகு வனப்பு 
செய்யுள் மொழியால்  சீர்புனைந்தி  யாப்பின்
அவ்வகை  தானே  அழகெனப்  படுமே(தொல்.செய்.228)
     செய்யுளுக்குரிய திரிசொற்களால்  சிறப்பாகப் புனைந்து கூறுவது அழகு.   கற்றார்க்கன்றி மற்றவர்க்கு எளிதில் பொருள் விளங்கா சொல் திரிசொல்.பல்வேறு செய்யுட்கள் தொகுக்கப்பட்ட தொகை நூல்களைஅழகு எனும் வனப்புக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.   தொல்காப்பிய உரையாசிரியர் எட்டுத்தொகை நூல்களின் தன்மையை அழகு எனும் வனப்பாகக் கூறுகிறார். 
துணியிரும் பௌவம் குறைய வாங்கி
அணிகிளர்
அடுக்கல் முற்றிய எழிலி
காலொ
டு மயங்கிய கனையிருள் நடுநாள்
யாங்குவந் தனையோ
ஓங்கல் வெற்ப
நெடுவரை மருங்கின் பாம்பென
இழிதரும்
கடுவரல்
கலுழி நீந்தி
வல்லியம் வழங்கும் கல்லதர் நெறியே.                       (யா. காரிகை, உரை மேற்கோள்,ப.-419 ) 
மேற்காட்டிய பாடலில் இரும், பௌவம், அடுக்கல், எழிலி, கால், கனை, ஓங்கல், கடுவரல், கலுழி, வல்லியம் எனச் செய்யுட் சொற்கள் பல வந்துள்ளன. அழகான ஒரு புனைவைத் தருகிறது பாடல். இது போன்ற பாடல்களின் தொகை அழகு எனும் வனப்பாகும்.
தொன்மை வனப்பு
தொன்மை  தானே  சொல்லுங்  காலை
உரையோடு  புணர்ந்த  பழமை  மேற்றே (தொல்.செய்.229)
     தொன்மைபழங்கதை நூல்.தொன்மை என்பது செய்யுளும் உரைநடையும் கலந்து வந்த பழைய கதை போன்றவற்றைக் குறிக்கும். குணசாகரர், தகடூர்யாத்திரை,  சிலப்பதிகாரம் ஆகியவற்றையும் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுவர். மேலும், பாரதமும் இராமயணமும் கொள்க என்பர். தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், இராம சரிதம்,  பாண்டவ சரிதம் முதலியவற்றைத் தொன்மைக்கு எடுத்துக் காட்டாகக் கூறுகிறார்.  பெருந்தேவனாரால் பாடப்பட்ட பாரதமும், தகடூர் யாத்திரையும் போல்வன தொன்மை என்பது பேராசிரியர் கருத்து. சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை, உரைப்பாட்டுமடை என்பன போன்ற உரைநடைப் பகுதிகளை இடையே கொண்டுள்ளது. இது உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்  ஆகவே அது தொன்மை என்னும் வனப்புடையது என்பது நச்சினார்க்கினியர் கருத்து.
 தோல் வனப்பு
இழுமென் மொழியால் விழுமியது நுவலினும்
பரந்த மொழியால் அடிநிமிர்ந் தொழுகினுஞ்
தோலென மொழிப தொன்னெறி புலவர். (தொல்.செய்.230)
சிறந்த ஓசை இனிமையுடைய மென்மையான சொற்களால் விழுமிய (உயர்வான)  பொருளைச் சொல்வதும், எல்லாச் சொற்களும் கலந்து பல அடிகளும் மயங்கி வருவதும் தோல் எனப்படும். இது பல்வேறு வகைச் சொற்களால் பல அடிகளும் கலந்து வருவது. ஆற்றொழுக்கான நடையைஇழுமென் மொழிஎன்பர். இதற்கு மார்கண்டேயனார் காஞ்சி என்னும் நூலிலிருந்து, பாயிரமும் பரப்பகம் புதையப் பாம்பின் என்னும் பாடலடிகளை எடுத்துக்காட்டுவர்.  ‘திருமழை தலைஇய இருள்நிற விசும்பு’  எனத் தொடங்கும் கூத்தராற்றுப் படையைக் குணசாகரர் பரந்த மொழியால் அடி நிமிர்ந்து ஒழுகும் நூல் என  மலைபடுகடாம்  என்னும் நூலைக் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறார். இளம்பூரணரும் இவரது மேற்கோளினையே எடுத்தாள்வர். இழுமென் மொழியால் விழுமியது கூறும் நூல் என்பது கதை சொல்லும் ஆசிரியப்பாவாலான ஒரு கதைமேல் தொடுக்கப்பட்டன: அவை பொருட்டொடர்நிலை  எனப் பேராசிரியர் குறிப்பிடுகிறார். பழைய கதையைச் சொல்லும் தொன்மொழி தோல் ஆயிற்று என்றும் தேவபாணியும் காமமும் அல்லாதனவற்றின் மேல்வருவது பிற்காலத்து வந்தன கொள்க என்றும் கூறுவர்.
இறைவன்  மாணடி  சேரி  னன்றி
அறுமே பற்றொடு பகையு முறவு
நன்மையுந் தீமையு மவர்க்கோ வில்லை
நன்றுதீ  தில்லா  நிலையில்
இன்பமோ வாழ்க்கை யிலெய்த வருமே
என்னும் இவ்வாசிரியம் தோலின் முதல் வகைக்கு எடுத்துக்காட்டாகும்.
 விருந்து வனப்பு
புதிவராக வீட்டுக்கு வருபவரை விருந்து என்போம்.அது போல  மரபுவழிமேல் புதிதாக வரும் நூல்களை விருந்து என்னும் வனப்பு  என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
விருந்தே தானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே(தொல்.செய்.231)
விருந்து என்ற சொல்லுக்குப் புதுமை என்பது பொருள். ‘அவை இப்பொழுதுள்ளாரைப் பாடுவன’ என்கிறார் காரிகை உரையாசிரியர். ‘புதிதாகச் சொன்ன யாப்பு’ என்கிறார் இளம்பூரணர். சொல்லும் முறையாலும், சொல்லும் பொருளாலும் புதுமையாக வருவது விருந்து எனலாம். இதற்கு உரையாசிரியர் எடுத்துக்காட்டுத் தரவில்லை.  பேராசிரியர், முத்தொள்ளாயிரம் பொய்கையார் செய்த அந்தாதிச் செய்யுள் கலம்பகம் ஆகியவை விருந்து வனப்பு நூல்கள் என குறிப்பிடுகிறார்.பல்வகையாக அமைந்த நாட்டுப்பாடல்கள்,    கூத்துப்பாக்கள், உரைக்கவிதைகள் ஆகியனவற்றைப் பாலசுந்தரம் எடுத்துக்காட்டாகத் தருவர். ஆயினும் பின்னர்த் தோன்றிய சிற்றிலக்கியங்களையும், உரைநடை இலக்கியங்களான புதினம், சிறுகதை ஆகியவற்றையும் நாடகம், புதுக்கவிதை ஆகியவற்றையும் விருந்து எனக் கருதுதற்கிடனுண்டு.
 இயைபு வனப்பு
ஞகார முதலா னகார ஈற்றுப்
புள்ளி இறுதி இயைபெனப் படுமே(தொல்.செய்.227)
ஞணநமன யரலவழள என்னும் பதினொரு மெய்யும் ஈறாக வந்த பாட்டை இயைபு என்பர். உதாரணம் வந்தவழிக் கண்டு கொள்க என குணசாகரர், உரையாசிரியர் இருவரும் கூற, பேராசிரியர், இயைபென்றதானே பொருளும் இயைந்து, சொல்லும் இயைந்து வருமென்பது கருத்து என்று கூறி மணிமேகலை, பெருங்கதையினை(னகர ஈறு) எடுத்துக்காட்டாகக் கூறுவர். தோல், இயைபு ஆகியனவற்றுக்கு இடையேயான வேற்றுமையைப் பேராசிரியர் எடுத்துரைக்கும் போது,
அவை உயிரிற்றாதல் பெரும்பான்மை ஆதலான் வேறுபாடுடைய சொற் தொடரான் வருதலும் உடைய என்பது. சொற்றொடரென்பது, அந்தாதி யெனப்படுவது: என்றதனால் உயிரீற்று சொற்கள் சிறுபான்மை யென்பது கொள்க. (3)  
அதாவது, தோலானது உயிரீறு கொண்டு பெரும்பான்மை முடிய இயைபு சிறுபான்மை உயிரீறு பெற்று முடியும்.
 புலன் வனப்பு
தெரிந்த மொழியாற்  செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலனுணர்ந் தோரே. (தொல்.செய்.227)
சேரி மொழியால்என இந்த நூற்பாவினுக்குப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் பாடம் கொள்வர்.ஓதல்வேண்டாது என்பது நச்சரின் பாடமாகும்.
சேரிமொழி என்பதுபாடிமாற்றங்கள்என்கிறார்.( இது ஊர்மக்கள் பேசும் மொழி). ‘விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள்எனப் புலன் வனப்புக்கு எடுத்துக்காட்டும் தருகிறார்.வழக்கில் உள்ள சொற்களால் அமைக்கப்பட்டு,   முயன்று ஆராய வேண்டாமல் பொருளை எளிமையாகப் புலப்படுத்துவது புலன் என்னும் வனப்பு ஆகும்.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
      அன்பினில் விளந்த ஆரமுதே
பொய்மையை பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
      புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே யாய சிவபதம் அளித்த
      செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
      எங்கெழுந் தருளுவது இனியே.(திருவருட்பா)
 சேரிமொழிகள் கலந்து வந்த குறம், குறவஞ்சி, பள்ளு, ஏற்றப் பாட்டு ஆகியவற்றைப் புலன் எனும் வனப்புக்கு எடுத்துக் காட்டாகக் குறிப்பிடுகிறார் உ.வே.சா. அறிவுரைப்பாக்கள், குழந்தைப்பாடல்கள் உதாரணமாகத் தருவர் ச.பாலசுந்தரம். 
 
இழைபு வனப்பு
ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடங்காது
குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து
ஓங்கிய மொழியான் ஆங்கவண் மொழியின்
இழைதான் இலக்கணம் இயைந்த தாகும்(தொல்.செய்.227)
வல்லின மெய்கள் வராமல், தொல்காப்பியர் எழுத்து எண்ணிக்கை அடிப்படையில் வகுத்த குறளடி முதலாக ஐந்தடியும் உடையதாக,  ஓங்கிய சொற்களால் வருவது இழைபு என்னும் வனப்பு. தொல்காப்பியர் நாற்சீரடியையே எழுத்தெண்ணிக்கை அடிப்படையில் ஐவகை அடிகளாக வகுத்துள்ளார்.எழுத்துகளை எண்ணும் போது ஒற்று, ஆய்தம், குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளக் கூடாது.  
ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து இயைந்து வராமல் பாடி நூல் இயற்றுவது இழைபு என்னும் நூல்-வனப்பு ஆகும். அதாவது க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்றஎன வரும் சொற்கள் பாடலில் வராமல் நூல் செய்வது இழைபு வனப்பாகும்.(முத்தைத்திரு) இது இருசீர்-அடி, முச்சீர்-அடி, நாற்சீர்-அடி, ஐஞ்சீர்-அடி,  -அடி, எழுசீர்-அடி கொண்ட பாடல்களால் அமைந்திருக்கும்.உதாரணம், குறளடி முதல் ஐந்தடி என்பது 4-எழுத்து அடி முதல் 17-எழுத்து அடி வரையில் உள்ள 5 வகைப் பாடலடி என்பது இளம்பூரணர் கருத்தாகும். இதற்கு எடுத்துக்காட்டாக,
போந்து போந்து சார்ந்து சார்ந்து
தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து
வண்டு சூழ விண்டு நீங்கி
நீர்வாய்க் கொண்ட நீலம் ஊர்வாய்
ஊதை வீச ஊர வாய
மணியேர் நுண்தோள் ஒல்கி மாலை
நன்மணம் கமழும் பன்னல் ஊர
என்னும் பாடலினைச் சான்றாகத் தருவர்.இது கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன என்றும், இழைபு அவிநயத்துக்கு உரியது என்றும் பேராசிரியர் குறிப்பிடுகிறார்.  
4 முதல் 6 எழுத்து வரை வருவது - குறளடி 
     `போந்து போந்து சார்ந்து சார்ந்து
எழுத்து 4
     தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து
5
     வண்டு சூழ, விண்டு வீங்கி
6




  7 முதல் 9 எழுத்து வரை வருவது - சிந்தடி 
     நீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம்,
7
     ஊர்வாய் ஊதை வீச, ஊர்வாய்
8
     மதியேர் வண்டோடு ஒல்கி மாலை
9
  10 முதல் 14 எழுத்து வரை வருவது - அளவடி 
     நன்மணம் கமழும் பன்னெல் ஊர !
10
     அமையேர் மென்தோள், ஐஅரி நெடுங்கண்,
11
     இணைஈர் ஓதி, ஏந்துஇள வனமுலை,
12
     இறும்புஅமல் மலரிடை எழுந்த மாவின்
13
     நறுந்தழை துயல்வரூஉம் செறிந்துஏந்து அல்குல்,
14
   
15 முதல் 17 எழுத்து வரை வருவது - நெடிலடி  
    அணிநடை அசைஇய வரிஅமை சிலம்பின்,
15
     மணிமருள் வணர்குழல், வளர்இளம் பிறைநுதல்,
16
     ஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளிரொடு,
17
  18 முதல் 20 எழுத்து வரை வருவது - கழிநெடிலடி 
     நளிமுழவு முழங்கிய அணிநிலவு மணிநகர்,
18
     இருந்தளமலரளவு சுரும்புலவு நறுந்தொடை
19
     கலனளவு கலனளவு நலனளவு நலனளவு
20
     பெருமணம் புணர்ந்தனை என்ப; அஃது
     ஒருநீ மறைப்பது ஒழிகுவது அன்றே'
- யா. கா. 45 மே.
தொகுப்புரை
1.   எழுத்து, அசை, சீர் முதலான இருபத்தெட்டு உறுப்புகளைச் செய்யுள் அடிப்படை உறுப்புகள் என்றும் அம்மை முதலான எட்டினைச் செய்யுள் பொருள் புலப்பாட்டுக்கு உதவும் உறுப்புகளாக அமைகின்றன.
2.   அம்மை முதலிய எட்டினையும் அலங்காரமாகக் கொள்ளும் மரபு யாப்பருங்கலக் காரிகை உரையாசிரியரைப் பின்பற்றி எழுந்ததாகும்.
3.   உரையாசிரியர்களில் அடியார்க்கு நல்லாரும் தொல்காப்பிய உரையாசிரியர்களில் பேராசிரியரும் வனப்பு என்ற சொல்லினை ஆள்கின்றனர்
4.   தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியளில் காணப்படும் சூத்திரங்களைச் சொல்லமைப்பில் தழுவியும் பொருளமைப்பில் வேறுபட்டும் பின்னர் வந்த இலக்கணிகள் உரை எழுதிப் போந்தனர்.
அடிக்குறிப்புகள்
1.   சிலப்பதிகாரம் மூலமும் அடியார்க்கு நல்லாருரையும், 1944, கழக வெளியீடு, சென்னை, முதற் பதிப்பு, பக். 8-9.
2.   யாப்பருங்கல விருத்தியுரை, நூ.எண்.54,
3.   ஆ.சிவலிங்கனார்(தொ.ஆ), தொல்காப்பியம், செய்யுளியல் உரைவளம், பேராசிரியர் உரை, பக். 159