வியாழன், 11 டிசம்பர், 2014

பெண்களும்,இணையத்தளமும்

 பெண்களும், இணையத்தளமும்

முனைவர் இலட்சுமி
தமிழ்த்துறை வல்லுநர்

    இன்றைய உலகைப் பொறுத்த அளவில் பெண் ஒரு பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டவளாகவே நோக்கப்படுகிறாள். காரணம் பெண் குறித்தான தவறான கண்ணோட்டங்கள் அவளது முன்னேற்றத்தைத் தடை செய்கின்றன. இதற்குப் பெண் உலகளாவிய அளவில்ஒரே மாதிரியான சிந்தனையுடன் இயங்கவேண்டும். பாலியல் வன்முறைகள் பெருகி வருவதால் பெண்கள்  அணியும் உடைகளைப் பிறர் கவரத்தக்கமுறையில் ஆபாசமாக அணிதல் கூடாது. உடை சுதந்திரம் என்று பெண் பேச முற்படும்போது அவள் பேசும்,செய்யும் காரியங்கள் அனைத்தும் இக்காரணத்தினால் பயனற்றுப்போய்விடுகின்றன. உடை சவுகர்யம் என்பது இன்றைய காலகட்ட உலகில் ஆண் சமூகம் இன்னமும் மாற வேண்டியிருப்பதால் இயலாத ஒன்றுதான்.இதனால் இணையத்தளத்திலும் பெண்கள் வரத் தயங்குகின்றனர். இத்தகைய நிலை மாறுபட பெண்கள், புகைப்படங்கள்,குடும்பச் செய்திகள் இவற்றை வெளியிடுதலைத் தவிர்க்கவேண்டும். நெருப்பு என்பதற்காக நாம் அதனைப் பயன்படுத்தாமல் இருக்கிறோமா? அதைப்போலத்தான் இணையமும் . இணையவழி கற்றல்திறன் மேம்பட பலமென்பொருட்கள்,அறிவார்ந்த செய்திகள் மிகுந்துள்ளன. வெறும் பொழுதுபோக்குசாதனங்களல்ல இணையம் என்பதை உணர்ந்து பெண்கள் பணியாற்றவேண்டும்.

இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட  பின்வரும்  பரிசு பெற்ற கவிதையினை நோக்கும்போது பெண்கள் எந்தஅளவு சிந்திக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இத்தகைய நிலை வளரவேண்டும்.அதற்குப் பெண்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.இச்சமூகம் பலதரப்பட்ட கருத்துகளைக் கொண்டு இயங்குகிறது. இவ்வுலகில் பெண் குறித்த சிந்தனைகளும் மாறுபட்டு இருப்பதனால் ஏற்படும் அவலநிலை மாறுபடவேண்டும். பெண்கல்வி வலுப்பெற இணையவழிக்கல்வி இன்றியமையாதது.

                 தாய் தந்தை அன்பு

            நன்றி-     எழுத்து.காம்


நேற்றுவரை உயிர்ப்பும்
ஊர்மெச்சும் வனப்பும்
குறையாத சிறப்பும்
கொண்டதொரு ஜோடி மரங்கள்

சீமந்த அழகு கொண்டு
சிங்கார புன்னகை வீசி
சீமாட்டியாய் சில பூக்களையும்
சீமானாய் சில விதைகளையும்
பெற்றெடுத்தது பெண்மரம்

சித்திரையில் நிழலும்
செருக்கில்லா சிறப்பும்
செருப்பில்லா பாதத்தோடு
செம்மண்காட்டு நீர்உறிஞ்சி
சேயிற்கு சேமிக்கும்
வேராய் நின்றதந்த ஆண்மரம்.

மொட்டுக்கள் விரியும் வரை
மௌனம் காத்தன
விதைகள் விடியும் வரை
விளையாடி சிரித்தன
பிள்ளைகளின் பெருங்களிப்பில்
பெருமை கொண்டன ஜோடி மரங்கள்

வசந்த காலத்தின் வளமையால்
வாரிசுகள் வளைந்து கொடுத்தன
வயதில் மூத்தோர் என
வணங்கி வரம் பெற்றன

இலையுதிர் காலம் கண்டு
இனி பயனில்லை என்று
ச(சொ)த்துக்களை சுருட்டிக் கொண்டு
சொல்லாமல் சென்றன.

உடலின் சுருக்கம் வயதை காட்ட
உயிரின் இறுக்கம் நோயை கூட்ட
உழைக்க உறுதியின்றி
உறவுகள் ஏதுமின்றி
ஊனுடம்பு நொந்தன இருமரங்கள்

இருமரங்களின் இறுதிக்கிளையில்
இளைப்பாற ஒரு பறவை வர
இதுதான் இறுதி நாளென
இரு இதயங்கள்
இரங்கல் செய்தி சொல்லிவிட
இருப்பிடம் தந்த மரத்தின்
இறுதி சடங்கில்
இறகுளர்த்திய பறவைகள்
இழப்புணர்ந்து அழ
இரு மரங்களின்
இறுதி மூச்சாய்
ஒற்றை சருகு ஓயாமல் ஆடியது
அது,
பெற்ற பிள்ளையை காண ஏங்கியது...


V.Seethaladevi
BCA 3rd year Swami Dayananda Arts&Science College
Manjakkudi Kodavasal(tk) Thiruvarur(dt)

செவ்வாய், 18 நவம்பர், 2014

கதை எழுதும் பயிற்சி



ஒரு தடவை சொன்னா புரிஞ்சுக்கணும்
படித்த படிப்பு கடவுள் கொடுத்தது.
அதை கல்யாணம் முடிஞ்சபின்னாடி நிறைய பேருக்கு ஃபாலோ அப் பண்ண முடியறதில்ல.மறந்து போய்டுது.பிள்ளைகள் எல்லாம் பெரிசான பிறகு தனிமை வாட்டுகிற நேரத்துல படிச்ச டிகிரி மட்டும்தான் ஞாபகம் இருக்கும்.தாய்மொழி ஞாபகம் இருக்கும்.அதுக்கா தாய்,தகப்பன் கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க.......இதுக்கா அத்தனை செலவு....... என்னதான் கணவனுக்கு சேவை செய்யுற மனைவிதான் என்றாலும் வீட்டுவரை படித்த படிப்பினை மறக்காமலிருக்க ஏதாவது செய்ய வேண்டாமா? சொன்னவளையும் ஞாபகம் இல்லை......வெறும் வெற்றுப் புகழுக்காக கிறுக்கல்கள் யாருக்காக?......எங்கோ பார்த்தபடி சொன்ன திவ்யாவை வெறித்தாள் அனுஷா. நான் என்ன வச்சிருக்கிறேனோ அந்த வரிசையெல்லாம் வச்சுக்கற கணக்குப் பாக்கற நீ என் படிப்பையும் ஃபாலோ பண்ணனும்ல....அதுல மட்டும் போட்டி கிடையாதா? எட்டு மணிக்கு எருமைமாடுமாதிரி எந்திரிச்சு ஆஃபிஸ் போக வேண்டியது...பல் தேய்க்க பிரஷ் எடுத்து வைக்க ஒரு ஆளு, குளிக்க வெந்நீர் வைக்க ஒரு ஆள்,ஷூ மாட்ட ஒரு ஆளு, ஸ்கூலுக்கு கொண்டு போய் விட ஒரு ஆளு இப்படியே பழக்கப்பட்ட மாதிரி வாழ்நாள் ஃபுல்லா ஓட்ட முடியாது.ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு குறிக்கோள் இருக்கும்னு தெரியும். அதுக்காக என்ன செய்யலாம்னு யோசிச்சதுண்டா? பணம் என்ன பணம்,இன்னைக்கு ஒருத்தர் கைல! நாளைக்கு வேறாருத்தர் கைல!பத்து வருஷம் கஷ்டப்பட்டா போற வழி கரெக்டா இருந்தா பணம் யார் காலடியில் வேணுமானாலும் கிடைக்கும்.உடல் ஆரோக்யமும்,பாசமும் கிடைக்குமா?கொஞ்சம் பொது வாழ்க்கைக்கு என்ன செய்யணும்னு யோசிக்கணும். சின்ன வயசுப்பாடமும் பெரிசானதுக்கப்புறமும் வரணும். அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை இவங்களோட பிறந்த நீ வாழ்க்கையில் யாருக்கு பயன்பட்டிருக்கிறாய்? செக் நோட்டுல் ஒண்ணு எழுதறதுக்கே டுவிஸ்ட் டேன்ஸ் ஆடும் பென்சில். அப்போ எனக்கென்னன்னு தூக்கிப்போட்டுட்டு  என் படிப்பை நான் பார்க்க ஓடியிருந்தா என்ன பண்ணியிருப்ப? இதுக்கா உனக்கு நான் உள்ளங்கை வேர்க்க அரிச்சுவடி பாடம் சொன்னேன்? ஏதோ பக்கத்துல இருக்க! சொல்லிட்டேன். என்னைத் திட்டுறமாதிரி நீ என்ன எனக்கு அட்வைஸ் பண்ணறதுன்னு சொன்னே பல்லு எகிறிடும். முன்னாடி இருக்கற அப்பா தேச்சு விட்டஅணில்பல் நாலும் காணாமல் போயிடும்.  பணம் மட்டும்தான் வாழ்க்கையில்லை.புரிஞ்சுக்க..சொல்லிவிட்டு விடு!விடுவென நடந்து உனக்குப் பிடிச்ச கேரம்போர்டுல கேம் விளையாடலாம் வர்றியா! என போர்டில் அருகே அமர்ந்த திவ்யாவை சிரித்தபடி அவளை நோக்கி ஓடினாள் அனுஷா.
கதையைத் தொடர்ந்து எழுதுக.
கதைக்குப் பொருத்தமான தலைப்பு எழுதுக.

வியாழன், 16 அக்டோபர், 2014

வகுப்பறையில் டேப்லட்வழி தமிழ் கற்றல்-கற்பித்தல்

                                வகுப்பறையில் டேப்லட்வழி தமிழ் கற்றல்-கற்பித்தல்
    முனைவர் பி.ஆர் லட்சுமி., எம்.ஏ., எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி., டிசிஇ.,  புலவர்.,(எம்.ஏ),,(பிஜிடிசிஏ).,
                                                  தமிழ்த்துறைவல்லுநர்.,
                                                   சென்னை
                                 புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்!
                                  குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்!
                                             -கவிக்கோ அப்துல் ரகுமான்
           மொழி நாம் நினைக்கும் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் முக்கியக் காரணி. வீட்டில் தாய்மொழி அறிவைக் குழந்தைகள் பெறினும், பள்ளியில் அக்கல்வி பயிலும்போதுதான் முழுமை பெறுகின்றனர்.இயந்திர உலகில் அறிவியல் வளர்ச்சியைத் தடுக்க இயலாது. அறிவியல் உலகின்வழி தமிழ்மொழியினை எடுத்துச்செல்ல வேண்டிய காலகட்டத்தில் இருப்பதால், டேப்லட் வழி தமிழ் கற்றல்,கற்பித்தல் முறையினை வெளிப்படுத்துதல் இவ்ஆய்வின் நோக்கமாகிறது.
தமிழ்மொழி கற்றல்நிலை
     தமிழ்மொழியின்பழமை ஏடுகளிலும், கல்வெட்டுகளிலும் காணப்பட்டாலும் வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள் பல நூல்களைத் தேடிக் கற்றல் மிகவும் குறைந்த அளவில் காணப்படுகிறது. கற்றல் திறன்களான
v    கேட்டல், பேசுதல்,படித்தல்,எழுதுதல் முறைகளை டேப்லட் வழி கல்விமுறை எளிதாக்குகிறது.ஒவ்வொரு மாணவனும் தம் மொழித்திறன் குறித்த படிமத்தை வளர்த்துக் கொள்வதற்கும், தன்னை உணர்ந்து வாழ்க்கையின் நிலைப்பாட்டினை அறிந்து வாழ்வதற்கும் டேப்லட் வழி தமிழ்கற்றல் உதவுகிறது.
 வகுப்பறையில் மாணவர்கள் எழுத்து வடிவம் அறிதல்,மொழித்திறன் பெறுதல், படைப்பாற்றல் திறன் வெளிப்படுத்துதல்
போன்றவற்றை வெளிப்படுத்த டேப்லட் அரிய கற்பித்தல் கருவியாகும்.
இதன்வழி செயல்திறன்கற்றல்நிலை மிகுந்து மாணவர்களின் அறிவாற்றல் தூண்டப்பெறுகிறது.
வகுப்பறையில்
v  மீத்திறன் மிகுந்தவர்
v  நடுத்தரக் கற்றல்திறன்
v  மீத்திறன் குறைந்தவர்
என்ற நிலைகளில் மாணவர்கள் இருப்பினும் கற்றல்நிலை மேம்பாடு பெறுவதற்கு டேப்லட் உதவும்.
டேப்லட்டின் பயன்கள்
டேப்லட் பயன்பாட்டின்போது
v  உற்றுநோக்குதல்
v  பயிற்சி செய்தல்
v  ஆழ்ந்த நுண்ணறிவுச் செய்திகளை வெளிக்கொணர்தல்
போன்ற நிலைகள் ஏற்படுகின்றன.
ஒரு  சிக்கலைப் பல கோணங்களில் தீர்க்க்க்கூடியது படைப்பாற்றல்திறன்.
படைப்பாற்றல்திறனை வெளிக்கொணரப் பல தடைகள் ஏற்படுகின்றன.
v  கவனமின்மை
v  உடல்நலமின்மை
v  கருத்து பற்றிய தெளிவான புரிதலின்மை
v  செய்திகளைப் பல கோணங்களில் ஆராய்ந்து படிக்கும் திறனின்மை
போன்றவை காரணங்களாக அமைகின்றன.
படைப்புத்திறனை எளிதில் வெளிக்கொணர அணுகுமுறை மாற்றங்கள் செய்தல் அவசியம். அத்தகைய அணுகுமுறைத்திறனை டேப்லட்வழிகல்விமுறை அளிக்கிறது.
ஒரு நாட்டின் எதிர்காலமே வகுப்பறையில்தான் தீர்மானிக்கப்படுகிறது.
காமினியஸ் வெளியிட்ட கல்வி நோக்கங்கள்
1.       வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குரிய அறிவைப் பெற்றுக் கொடுத்தல்
2.       அறம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த மேம்பாடுகளுக்குரிய அறிவை வழங்குதல்
3.       மனிதர்களிடையே தெய்வீக ஈடுபாட்டை ஏற்படுத்துதல்
போன்றவையாகும்.
மேற்கூறப்பட்ட நோக்கங்கள் அனைத்தும் தாய்மொழிக்கல்விவழி ஏற்படக்கூடியவையாகும்.மொழியினை மூன்று நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகக் கூறுவர்.
1.       கருத்துகளைக் கூறுதல்
2.       மகிழ்வித்தல்
3.          பிறரை நம் பக்கம் திருப்புதல்
இம்முறைகளை டேப்லட்வழி கற்றல் தெளிவாக்குகிறது.
மொழித்திறன் குறைவதற்கான காரணங்கள்
v  மொழி கற்றுக்கொள்வதில் ஆர்வமின்மை
v  விடாமுயற்சியின்மை
போன்றவையாகும். காரணம் இன்றைய கல்விநிலையில் தமிழ்மொழிகற்றலினால் கிடைக்கும் பணிவாய்ப்புகள்  மிகவும் குறைவாக உள்ளன. இதனால் மாணவர்களிடையே தமிழ் கற்றல் மிகவும் குறைந்து வருகிறது.
ஒரு மொழி வளர பின்பாட்டுப் பணிப்புலம் அவசியமாகிறது. இத்தகைய நிலையினை டேப்லட்வழி  கல்விநிலை அளிக்கிறது.வேற்றுமொழித்தாக்கத்தினால் வலுவிழந்து கொண்டிருக்கும் தமிழ்மொழி தழைத்தோங்க வகுப்பறையில் புதுமைகளைப் புகுத்த டேப்லட் சிறந்த கற்பித்தல் கருவியாகிறது. தெரிந்தவற்றிலிருந்து தெரியாத நிலைக்குச் செல்லுதல்முறை மொழித்திறனை வளர்க்கும்.  தமிழ்மொழியில் எழுத்துகள் கற்பித்தல்,எழுதுதல் நிலையில் ஏற்படும் சிக்கல்களை எழுத்து.காம் தெளிவாக அசைவூட்டம் வழி விளக்கியுள்ளது. MS-OFFICE-இன்வழியாக பாடப்பொருள் தொடர்புள்ளவற்றைத் தயாரிக்கலாம்.
இதற்குத் தேவையான பாடங்களைத் தயாரிக்க Tamil virtual academy.com, Tamil unltd.com,Californian academy.com.,balamithra.com போன்ற இணையத்தளங்களில் பார்வையிடலாம்.
vdraw, kidspainter, pencil, photoshop போன்ற மென்பொருட்களின் வழி தமிழ்பாடப்பொருள் தொடர்பான செயல்முறைப்பயிற்சிகள்,பயிற்சித்தாள் போன்றவற்றை மாணவர்கள் உருவாக்கும் நிலை வளரவேண்டும்.


மேற்காணப்படும் வரைகலை நிலையில் படைப்புத்திறன் வளரும்போது மாணவர்களின் கற்றல்திறன் வளர்கிறது. அனுபவபூர்வமான செயல்முறைகளினாலும், ஆய்ந்து கற்பதினாலும் மொழியின் சிறப்பினைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும்.
 இவ்வரைபடங்களின்வழி பாடத்துடன்கூடிய இலக்கணப்பயிற்சி கிடைப்பதால்  எளிமையான கற்றல் பயிற்சியுடன் மொழித்திறனையும் அடைகின்றனர்.
தொலைநோக்குச் சிந்தனை
புலன்கள் வழியாகத்தான் கற்பித்தல் நிகழவேண்டும் என்றும், குழந்தைகளை மையமாகக்கொண்டும் கற்பிக்கவேண்டும் என்றும் ரூசோ கூறியதற்கேற்ப தமிழ்க்கல்வி கல்விமுறை உலகெங்கும் அமையவேண்டும். கல்வியின் இறுதி சிறந்த மாணவர்களை உருவாக்குவதே என்ற விவேகானந்தர் வாக்கின்படி இன்னமும் தமிழ்மொழி கற்பித்தல் புதுமையாக்கப்படவேண்டும்.
               குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை
               கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை
               நிலம் மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
               உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்
                அமைபவன் நூலுரை ஆசி ரியன்னே.
                                              நன்னூல்-பவணந்தி முனிவர்
இத்தகைய சிறப்புமிக்க பெருமை பெற்ற ஆசிரியர் சமுதாயம் அறிவியல் உலகிற்கேற்ப தமிழ்மொழியில் புதுமைகளைப் புகுத்திக் கற்பிக்க முன்வரவேண்டும். எளிமையாக டேப்லட்வழி தமிழ்மொழி கற்றல்-கற்பித்தல் முறை இவ்ஆய்வுக்கட்டுரையின்வழி தெளிவாக்கப்பட்டுள்ளது.


 pondichery-2014-(International tamil  internet conference)
GRAMMAR-PART-WORKSHEET
LETTERS WRITING IN PICTURE ROUTE GAME METHOD
VOCABULARY IMPROVEMENT,SENTENCE FORMATION,CLOSURE-METHOD