புதன், 6 மார்ச், 2013

படிக்காசுப் புலவர்

படிக்காசுப் புலவர்


புலவர்கட்கும், இரவர்கட்டும் வரையாது கொடுத்துதவும் வள்ளல்களையும், தான் பிறந்த அல்லது வாழ்ந்த நாடுகளையும் புலவர்கள் சிறப்பித்துக் கூறுவது மரபு. அத்தகைய புலவர்களுள் ஒருவர் படிக்காசுப் புலவர். இவர் தொண்டை மண்டல சதகம் என்னும் நூலை இயற்றினார்.
 இவர் தொண்டை மண்டலத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் களத்தூர் என்னும் சிற்றூரில் செங்குந்தர் மரபில் தோன்றினார். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர். ஐந்து வயது முதல் தக்க ஆசிரியரின் உதவியுடன் கல்வி பயின்றார்.
 பல்லவ மன்னர்களுள் ஒருவரான சிவந்தெழுந்த பல்லவவரையர் என்னும் சிற்றரசர் சிறந்த கல்விமானாகவும், கொடையாளியாகவும் விளங்கினார். புலவர் அவரைக் கண்டு, அவர் மீது பிள்ளைத் தமிழும், உலாவும் பாடி அரங்கேற்றம் செய்தார்.
 கறுப்ப முதலியார் படிக்காசு புலவரின் சிறப்பினை அறிந்து அவரிடம் இத்தொண்டை நாட்டின் பெருமையினைக் கூறும் தண்டமிழ் நூலாக தருவீராக என்று வேண்டிக் கொண்டதற்கிணங்க தமது நாட்டிலுள்ள அனைவரும் படித்து இன்புறும் வண்ணம், தொண்டை மண்டல சதகத்தை இயற்றினார். பல சிவத் தலங்களுக்குச் சென்று தரிசித்து தோத்திரப் பாக்களை இயற்றினார். சீதக்காதி என்னும் செம்மலை அடைந்து அவனது வள்ளல் தன்மை, ஈகை, புகழ் முதலிய குணங்களை பற்றி இனிய பாக்களைப் பாடினார்.
 இறுதியாக, தேசிகரிடத்தில் உபதேசம் பெற்று, தொண்டுகள் ஆற்றி, சில பிரபந்தங்களை அருளிச் செய்து சிதம்பரநாதனது பத நிழலெய்தி இறைபதம் அடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக