சனி, 29 ஜூன், 2013

குறிக்கோள்



                             குறிக்கோள்
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கென ஒரு குறிக்கோள் உண்டு. பணம் இருப்பவருக்குப் புகழ், வறுமையில் உழல்பவருக்குப் பணம், வசதி எனப் பலதரப்பட்ட வகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட இலட்சியங்கள், எண்ணங்கள் வாழ்க்கையில் உண்டு. ஒருவர் சொல்வதை மற்றொருவர் கேட்பதா! என்ற ஆணவம் ஒருவருக்கு இருக்குமேயானால் அவர் தன் வாழ்க்கையில் என்றும் முன்னேற இயலாது. அடுத்தவருடைய கருத்தை எவனொருவன் ஊன்றிக் கவனிக்கிறானோ, செயல்படுகிறானோ அவனே வாழ்க்கையின் முதல் வெற்றிப் படிக்கட்டின் காலடியின் நிற்கிறான். ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே ஒருவனுக்கு வெற்றிகள் வந்து சேரும். ஆனால் ஒருங்கிணைந்து ஊர் கூடித் தேர் இழுக்க, இழுக்கும் கைகள் தூயனவாக இருக்க வேண்டும். தன்னலம் பாராத் தூய மனப்பாங்கு கொண்டவையாக இருத்தல் வேண்டும். தன்னலம் கருதா ஆசிரியர் சமூகம் உருவாகத் தியாகச் சிந்தனைகள் உருவாக வேண்டும். முற்காலம்போல் எல்லாவற்றையும் எல்லோருக்கும் அளித்து விட்டு காந்திபோல் வாழவேண்டுமா! நமது தேசத்தலைவர்கள்போல் இருக்க வேண்டுமா! காலம் மாறிவிட்டதே எனக் கேள்விகள் எழலாம். ஒருவன் தனக்கென ஒரு இடம், தனது குடும்பத்திற்கென ஒரு இடம், தனது மதத்திற்கென ஒரு இடம், தனது நாட்டிற்கென ஒரு இடம் என வாழ்ந்தால் மட்டும் போதுமா? மனிதநேயம் மிகுந்தவர்களாக மாறுவது எப்போது? இத்தகைய சுயநல வட்டம் மாறும்போது விவேகானந்தர் காண விரும்பும் பாரதம் அமையும். ஆசிரியர்கள் கற்பிக்கும்போது பாடப் பொருளுடன் வாழ்க்கையில் வாழ்வதற்கான பண்பாட்டு நெறிமுறைகளையும் இணைந்து கற்பித்தல் வேண்டும். என்றோ ஒருநாள் இறக்கத்தான் போகிறோம்! அந்நாள் நாம் நாள்காட்டியில் நாம் கிழித்துக் கசக்கிப் போடும் ஒருநாள் தான். அத்தாளில் உள்ள பொன்மொழிகளைப் படிப்பவரும் உண்டு. கசக்கிப்போடுபவரும் உண்டு. அது போல்தான் நாம் வாழும் வாழ்க்கை.
பகுத்தறியும் திறன் படைத்தவர்களாகிய  நாம்  எவ்வாறு வாழ்தல் வேண்டும்? மின்னி மறைவது மானிட வாழ்க்கை. என்றும் மாறாதிருப்பது அவர்தம் படைப்புகள். வாழ்க்கையில் உருட்டி விளையாடும் கண்ணாடிப் பந்துகளான சுற்றம், நட்பு                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            உடல்நலம் இவற்றில் கவனம் கொள்ளவேண்டும். இறப்பது ஒரு முறைதான் அத்தகைய நாள் எது என நாம் அறிவதில்லை. அறிந்தவரும் இல்லை. அத்தகைய நாள் வருவதற்குள் வாழ்க்கைக்குப் பயனுள்ள நல்ல செயல்களைச் செய்யலாமே! நீ ஏன் வந்தாய்? எனது வீட்டு வேலைக்காகவே நான் இத்தகைய பணி என்ற பெயரில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என அடுத்தவரை அர்ச்சிக்கும் சுயநலம் மிகுந்த குணம் மென்மையான இதயத்திலிருந்து அகற்றப்படவேண்டும். சுயநல முள் ஆசிரியரிடம் இருந்தால் ஒளிமயமான மாணவர் சமுதாயம் என்ற ரோஜாவைப் பறிக்க இயலாது. பணம் சகடக்கால் போல் சுற்றி வரும். பழுத்த காலத்தில் மட்டுமே மரத்திலிருந்து கனிகள் விழுவதில்லை. இளம் வயதிலேயே இளங்காய்களும் விழுவதுண்டு. அதற்குள் நம்மாலான அறப்பணிகளைச் செய்தல் வேண்டும் என்ற நாலடியின் வழி வாழ வேண்டும். பாடத்துடன் அறிவியல் சார்ந்த கருத்துகளையும், பண்பாட்டையும்  இணைந்து கற்பிக்க வேண்டும்.
ஆசிரியரால் அற்புதமான மனிதநேயம் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். இறக்கைகள் பறவைகள் பறப்பதற்கு மட்டுமல்ல இதைப்போல் ஆகாயவிமானமும் தயாரித்து அதில் நாமும் பயணிக்கலாம் என்று வாழ்ந்து காட்டிய மனிதனாக வாழ வேண்டும்.  அப்துல் கலாம் காணப்போகும் அறிவில் உலகத்திற்குச் சுயநலமற்ற, நாட்டிற்குப் பெருமை தரக்கூடிய  நல்ல மாணவர்களை உருவாக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஆசிரியர் சமூகம் தன்னலம் கருதாத தொண்டு செய்து வாழப் பழகுதல் வேண்டும்.
   உண்மைக்கும், நேர்மைக்கும் என்றும் பிறருக்குத் தொண்டு செய்து வாழும் நல் உள்ளங்களுக்கு என்றும் அழிவு நேராது. ‘வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்ற குறளை நாம் அனைவரும் அறிவோம். வள்ளுவத்தின் வழி நிற்பதே ஆசிரியர்களுக்குப் பெருமை நிறைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக