அர்த்த நாரீஸ்வரர் ஆன கதை
பிருங்கி
முனிவர் அதிதீவிர சிவபக்தர். ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன். கயிலைநாதன் தான்
என்றும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்றெல்லாம் கூறி உள்ளார்ந்த பக்தியுடன்
சிவனை மட்டுமே வணங்குவார்.சிவனைத் தவிர வேறு யாரையும் சிந்திக்காத அவரது போக்கு பிற கடவுளரை அவமதிக்கும் வகையில் அமைந்ததுண்டு. அப்படி ஒருநிலை பார்வதிக்கே ஏற்பட்டது. கயிலையில் தன் கணவருடன் அமர்ந்திருக்கும்போது அங்கு வரும் பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னை திரும்பியே பார்க்காமல் போவதும் கண்டு பார்வதி மனம் வருந்தினாள். எப்படியாவது பிருங்கி முனிவர் தன்னையும் வணங்கவேண்டும் என்று எண்ணிய பார்வதி இறைவனை நெருங்கி அமர்ந்துகொண்டாள். வழக்கம்போல கயிலாயம் வந்த பிருங்கி முனிவர் சிவனுடன் நெருக்கமாக பார்வதி அமர்ந்திருந்ததைக் கண்டு கலங்கவில்லை. வண்டு உருவம் எடுத்து இருவருக்கும் இடையில் புகுந்து சிவனை மட்டுமே வலம் வந்தார். பார்வதியின் சாபம் இதனைக் கண்டு ஆத்திரமடைந்த பார்வதி, தன்னை அவமதித்த முனிவரின் கால்கள் முடமாகிப் போகட்டும் என்று சபித்தாள். உடனே அது பலிக்கவே நடக்க சக்தியில்லாமல் முனிவர் தடுமாறினார். ஆனால் தனது பக்தருக்கு நேர்ந்த கதியை கண்ட இறைவன் பிருங்கி முனிவர் ஊன்றி நடக்க ஒரு குச்சியை அளித்தார். முனிவருக்கு ஆதரவாக சிவன் நடப்பது கண்டது பொறுக்காத பார்வதி அவரை விட்டு விலகி பூலோகம் வந்தாள். தன் கணவரை விட்டு ஒரு கணமும் பிரியா வரம் வேண்டும் என்று தவமிருந்தாள். கடுமையான தவத்திற்கு இளகிய இறைவன் பார்வதியை காண பூலோகம் வந்தார். சிவனை கண்ட பார்வதி ஒரு நாளும் உமை விட்டு பிரியாக வரம் வேண்டும் என்று வேண்டினாள். பார்வதியின் எண்ணத்தை உணர்ந்த இறைவனும் தன்னுடலுடன் பார்வதியை இணைத்து அர்த்தநாரீஸ்வரராய் ஆனார். இவ்வாறு அம்பிகை இறைவனின் உடலில் ஒரு பாதியாகி, கணவரிடம் இருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக் கொண்ட நாள் தான் கேதார கெளரி விரதநாள். கணவன் மனைவியிடையே மாறாத அன்பை வளர்த்துக்கொள்ளும் பண்டிகை தான் இந்த கேதார கெளரி விரதம். 21 நாள் விரதம் இருந்து தீபாவளி தினத்தன்று சிவனை வேண்டி வணங்கினால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும். தம் மாங்கல்யபலம் நீடிக்கவும் கணவரின் மீதான அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டியும் கேதார கெளரி விரதத்தை சுமங்கலிகள் கடைபிடிக்கின்றனர். அன்றைய தினத்தில் தீபாவளிப் பண்டிகைக்கான பூஜைகள் முடிந்த பின்னர், பூஜையறையில் விளக்கேற்றி சிவ பார்வதியின் படத்தின் முன்பு அமர்ந்து தியானம் செய்யவேண்டும். ஓம் நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை நாள் முழுவதும் துதிக்க வேண்டும். மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டும் என்றும் மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இதனை அனுஷ்டிப்பர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதுண்டு. விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலின் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்துகொள்வர். மேலும் முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் “பாரணம்” பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும். பிரம்மா, விஷ்ணு, இந்திரன் இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக்கூற இயலாது. இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை. இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரதத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார். எனவே நாமும் இவ் அரிய நோன்பினை நோற்று பரம் பொருளின் பூரண கடாட்சத்தினைப் பெற்று “வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோமாக!” |
புதன், 15 அக்டோபர், 2014
அர்த்த நாரீஸ்வரர் ஆன கதை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக