இணையவழி தமிழ் கற்றல்-கற்பித்தலில் ஏற்படும்
சிக்கல்களும்,தீர்வுகளும்
தமிழ் இணையமாநாடு-2015-சிங்கப்பூர்
இன்றைய
காலகட்டத்திற்குஏற்ப துணைக்கருவிகளுடன்கூடிய செயல்வழிக்கற்றல்முறை, இணையவழி தமிழ்
கற்றல் என இரண்டுமுறைகளில் பலவிதமான புதுமைகளை இணைத்துக் கற்பித்தால்மட்டுமே
தமிழ்மொழி வளரும்நிலை காணப்படுகிறது. தமிழ்மொழி பயின்றவருக்கென வேலைவாய்ப்புகள்
மிகுதியாக உருவாக்கப்படாததால் தமிழ்மொழி கற்க மாணவர்கள் அதிக விருப்பத்துடன்
ஈடுபடுவதில்லை. இணையவழி தமிழ்கற்றல்-கற்பித்தலில்
ஏற்படும் சிக்கல்கள் குறித்தும்,தமிழ்மொழி வளர ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும்
இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது.
இணையத்தில் தமிழ்மொழி
வலைப்பூக்களிலும்,வலைத்தளங்களிலும் தமிழ்மொழியினை முறையாகப் பயின்றோர்மட்டுமே எழுதுவதில்லை. இதனால் தமிழ்மொழி குறித்தத்
தவறான பல செய்திகளை மாணவர்கள் படிக்க நேரிடுகிறது. இதனால் தமிழ்மொழி குறித்த இலக்கண நூல்களையும், இலக்கிய நூல்களையும்
இணைத்து அளிக்கவேண்டும். இதனால் கற்றல்திறன் மேம்படும். மொழியியல் ஆய்வு குறித்த விழிப்புணர்வினை
ஆசிரியர்கள் மாணவர்களிடம் அளித்திட இணையவழி கற்றல் சிறப்பானது. கல்லூரிகளில் கற்பிக்கும்
ஆசிரியருடைய தமிழ்ப்பணி ஒரு குறிப்பிட்டதுறையில் அடங்கிவிடுகிறது. ஆனால், பள்ளிக்கல்வி
அளவில் தமிழ்தொடர்பான அனைத்துத்துறைகளையும் உள்ளடக்கி ஆசிரியர் கற்பிப்பதால் அது குறித்த
பாடப்பொருளினையும்,மென்பொருள் உருவாக்கத்திறன் குறித்த செய்திகளையும் அறிந்திருத்தல்
அவசியமாகிறது. இது குறித்த பயிற்சிகளையே ஆசிரியர்களுக்குப் பல கல்வி நிறுவனங்கள் அளித்து
வருகின்றன.
மேசைக்கணினி, மடிக்கணினி, கையடக்க அறிவியல்கருவிகள் எனப்பல நிலைகளில் மாணவர்களின் கற்றலுக்குத் துணைக்கருவிகளாகப் பயன்பட்டுவருகின்றன. அதிக
அளவில் அறிவியல்சாதனங்களைப் பயன்படுத்துவதால் உடல்நலக்குறைபாடுகள் இன்றளவில்
ஏற்படுகின்றன. செல்லிடப்பேசியினை அதிக அளவில் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும்
நிலை அதிகரித்துள்ளது. இதனைச் சரிசெய்ய செல்லிடப்பேசி நிறுவனங்கள் சரிவர
வழிகாட்டுவதில்லை. இதனால் பல மாணவர்களின் கற்றல்திறனில்
இத்தகைய அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தாதநிலை காணப்படுகிறது. தொடுதிரைக் கணினி, தொடுதிரைச்செல்லிடப்பேசி
இவற்றைப் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து வலைத்தளங்களில் ஆராய்ச்சியாளர்கள்
வெளியிட்டுள்ளனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதனைச் சமுதாயம் உணர்ந்து
மிகக்குறைந்த அளவில் அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தித் தமிழ்மொழி கற்றல்திறனை வளர்க்க
ஆசிரியர்கள் வழிகாட்டவேண்டும். தமிழ்
கற்றுக்கொடுக்கும் பல வலைத்தளங்களும் அடிப்படைநிலையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. காலங்கள் மாறுவதற்கேற்றாற்போல இலக்கணப்பயிற்சியுடன்கூடிய தமிழ் வலைத்தளங்கள்
அமைக்கப்படவேண்டும். இவ்வலைத்தளங்களைப் பெரும்பான்மையாக அமைப்பவர்கள் அவர்களது
நாட்டின் வசதிக்கேற்றாற்போல அமைப்பதினால் மொழி உச்சரிப்பு, இலக்கண விதிமுறைகள்
இவற்றினைப் பின்பற்றுவதில்லை.
தமிழ்மொழிக்கென அமைக்கப்பட்ட
www.tamilcube.com
போன்ற வலைத்தளங்களில்
அளிக்கப்பட்டுள்ள ஆங்கில உச்சரிப்பு பலதரப்பட்டவையாகக் காணப்படுகிறது.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளமையால் குழப்பநிலையே ஏற்படும். மொழியியல் விதிகளுக்கேற்றபடி ‘பழையன
கழிதலும் புதியன புகுதலும்‘
என்பதற்கேற்பத் தரமான ஆங்கில-தமிழ் உச்சரிப்பு அட்டவணை அமைதல்வேண்டும். கேட்டல்,பேசுதல்,எழுதுதல்,படித்தல் போன்ற திறன்களில்மட்டுமே இணையங்களில்
பாடத்திட்டங்கள் அமைதல் இன்றைய காலகட்டங்களில் அவசியமாகிறது. அவரவர் மனதிற்கேற்றாற்போல தாம் நினைப்பதை அனைத்தும் வலைப்பூக்களில் தமிழ் தொடர்பான செய்திகளைத் தரவேற்றுதலினால்
தமிழ்மொழியின் பழமை அழிய நேரிடும்.
- எழுத்துகளின் வகைகள்
- இனஎழுத்துகள்
- வேற்றுநிலைமெய்மயக்கம்,உடனிலைமெய்மயக்கம்-எழுத்துகள்
- வடமொழி எழுத்துகள்
எனப்பிரிக்கப்பட்டு மாணவர்களின் கற்றல்திறனை வளர்க்கிறது.
கற்பித்தலில் ஆற்றவேண்டிய பணிகள்
இணையம் மேசைக்கணினி, மடிக்கணினி, கையடக்கக்கருவி எனப் பல வடிவங்களில்
மக்களிடையே இயங்கிவரினும், பாடப்பொருள் உருவாக்கம் என்ற நிலையில்
எம்எஸ்பவர்பாயிண்ட்(நழுவல்) அமைக்கப்படவில்லை. இம்முறை மாணவர்களுக்குப்
பயிற்சியளிக்க எளிமையானது.
- பொதுநோக்கங்கள்
- சிறப்புநோக்கங்கள்
- ஆர்வமூட்டல்
- துணைக்கருவிகள்
- பாடப்பொருள் தலைப்பு விளக்கம்
- பாடம் பற்றிய குறிப்புகள்
- மதிப்பீடு
என்ற அளவில் ஒளிக்காட்சிகளை வடிவமைக்கும்போது கற்றல்திறன் வளரும்.
இதற்குத் தேவைப்படும் பயிற்சித்தாள், கணினியில் விளையாடும் சில
விளையாட்டுகள், பயிற்சிவினாக்கள், மடிபுத்தகம்(ஃப்ளிப்புக்) போன்றவற்றைத் தரவேற்றும்போது
மாணவனே தனக்குரிய பாடத்தினைப் படித்து அறிந்துகொள்ள இயலுகிறது. தானே கற்றல் என்ற நிலையும்
உருவாகிறது. ப்ம்
கோட்பாட்டிற்கேற்றவாறு வினாக்களையும் அமைத்துக் கையடக்கக் கருவிகளில் அனைத்திலும்
அமைத்துக்காட்டினால் மாணவர்களும் அதனைப்போன்றே உருவாக்குவர். படைப்பாற்றல்திறன்
வளரும்போது தேவையற்ற சிந்தனைகள் மாணவர்களிடையே தோன்றாது. பயனற்ற வலைத்தளங்கள் தமது வாழ்க்கைக்கான பொருளல்ல என்பதை
உணரும்வகையில் ஆசிரியர்கள் தமது பாடத்தினை அமைத்திடல்வேண்டும்.
இணையவழி நூலகங்கள்,அகராதிகள்,தமிழ்மொழி
குறித்த பழமை,தமிழ்மொழிக்கும்,பிறமொழிகளுக்கும் அமைந்துள்ள வேற்றுமைகள் இவை
குறித்து அமைந்துள்ள வலைத்தளங்களைக் காட்டிப் பயிற்சியளிக்கவேண்டும்.
தமிழ்மொழியினை இணையவழி கற்பதால் அடையும் பயன்களையும் கருத்தில்கொண்டு
ஆசிரியர்கள் பாடப்பொருளினை அமைத்தல்வேண்டும். இன்றளவில் இணையத்தில் இலவசமாகப் பல மென்பொருட்கள்
கிடைப்பதைப் பயன்படுத்தி பாடங்களை உருவாக்கி மின்புத்தகங்களைச் சிறுஅளவில் மாணவர்களுக்கு
அளிக்கலாம். இதன்வழி மாணவர்களும் மின்புத்தகங்கள் உருவாக்கும் பலதொழில்முறைகள் போன்றவற்றைப்
பள்ளிஅளவிலும், கல்லூரிஅளவிலும் அறிந்துகொள்ளும்நிலை
உருவாகும். மாணவர்கள் உருவாக்கும் படத்தயாரிப்புகள் நீதிக்கருத்துகள் நிறைந்து அவரவர் பாடத்திட்டத்திற்கேற்றாற்போல இருப்பதால்
ஒளிக்காட்சிகளை உருவாக்குவதில் திறன்படைத்தவர்களாகின்றனர். இதற்குரிய பல மென்பொருட்கள்
குறித்து அவர்கள் அறிவதால் இதனைத் தமிழ்மொழியில் எவ்வாறு பயன்படுத்தமுடியும் என்பது
குறித்து அவர்களால் அறிந்துகொள்ள இயலுகிறது. உருவவடிவங்களைத் தமிழ் இலக்கியங்களில்
உருவாக்கும்நிலை வளரவேண்டும். எழுத்து,சொல்,செய்யுள் போன்றவற்றின் சொல் உச்சரிப்பினைப்
பதிவுசெய்து வலைப்பூக்கள்,இணையத்தளங்கள்,கையடக்கக்கருவிகள்போன்றனவற்றில் அளிக்கலாம்.
வகுப்பறைச்சூழலுக்கேற்ற பலவிதமான கற்பித்தல்முறைகளினையும் ஆசிரியர்கள்
பதிவுசெய்து அளித்திடும்போது மாணவர்களின் கற்றல்திறன்,பண்பாடு போன்றவை பாதுகாக்கப்படுகிறது.
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் கற்றல்-கற்பித்தல்
தொடக்கக்கல்விநிலை அளவில் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் தமிழ் கற்கும்
அளவில் இணையத்தில் தமிழ்ப்பாடங்கள் வரையறுக்கப்படவேண்டும்.
இப்பாடத்திட்டமுறைகளைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் பின்பற்றிவருகிறது. நடைமுறை மாற்றங்களுக்கேற்றாற்போல
மாணவர்களின் மனதைப் புரிந்துகொண்டு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய நிலையில்
அல்லாது தமிழ் இணையக் கல்விக்கழகம் அனைத்து நாடுகளில் இருந்தும் மாணவர்கள் பயில்வதற்கேற்றாற்போலப்
பாடத்திட்டங்களை அமைத்துள்ளது. கையடக்கக் கருவிகளிலும் பாடத்திட்டங்கள் அமைத்துள்ளவை
சிறப்பானது. இருப்பினும், அட்டைக்கணினியின் அளவுக்கேற்பப் பாடங்களின் ஒளிக்காட்சி அமையவில்லை.
மிகவும் சிறியதாகக் காட்சியளிப்பதால் மாணவர்களின் பார்வைத்திறன் பாதிக்கப்படும் நிலை
ஏற்படும். அவரவர் நாடுகளுக்கேற்ற பேச்சுத்தமிழ்மொழியினைக்
கருத்தில்கொண்டு வலைத்தளங்கள் அமைப்பதால் தமிழ்கற்றல் குறித்தான இணையவழிச்செயல்முறை
மட்டுப்படுத்தப்படுகிறது. இதனைப்போக்க ஆங்கிலவழியினில் உச்சரிப்பினை
அளிக்கவேண்டியநிலையில் இருப்பதால் இணையத்தளத்தில் கற்றல்நிலையினையும்,
தமிழ்தொடர்பான பாடப்பொருளையும் தெளிவாக்கிப் பதிவிடவேண்டும். குறிப்பிட்ட சில இணையத்தளங்களில் சில பகுதிகள்மட்டுமே பாடங்கள்
தெளிவுடன் அமைக்கப்பட்டுள்ளன.
சிக்கலுக்கான தீர்வுகளும்,வருங்காலத்தில் தமிழின்நிலையும்
எழுத்துகளைக் கற்றல்நிலையில்
- அடையாளம் காணுதல்
- புள்ளியிட்ட இடத்தில் எழுதுதல்
- வண்ணம் தீட்டுதல்
- நிழலிட்ட இடத்தில் எழுதுதல்
- எழுத்துகளை முறையாக எழுதும்முறை
- எழுத்துகளை வெட்டி மாற்றிச் சரியாக அமைத்துக்காட்டும் முறை
- எழுத்துகளுக்கேற்ற சொல் அமைவுகளுடன்கூடிய படங்கள்
போன்றவற்றைக்கருத்தில்கொண்டு பயிற்சித்தாள்களும்,ஒளிக்காட்சிகளும் அமைக்கவேண்டும்.
தமிழ் கற்றல்குறித்து வலைப்பூக்களில் இது தொடர்பான செய்திகள்குறித்து
அமைக்கும்போது உருவாக்கியவர்கள் தவறுகளைத் திருத்தாமல் பல வருடங்களாகியும் அதனை அவ்வாறே
தொடர்ந்து வருகின்றனர். கால மாற்றங்களுக்கேற்பத் தமிழ் கற்றல் தொடர்பான வலைத்தளங்களும்,
வலைப்பூக்களும் மாற்றம் செய்வது அவசியமாகும். நாம் காணும் இடங்கள் அனைத்திலும் மலர்கள் நிறைந்த பூங்காவாக
இருப்பதில்லை. அதுபோல இணையத்திலும் தேவையற்ற பல செய்திகள் இருப்பதை விலக்கிப் பண்பட்ட
வாழ்க்கைக்கான நெறிமுறைகளை விளக்கி அதன்வழி நடந்து இணையவழி கற்றல்,கற்பித்தலை வளர்க்க ஆசிரியர்கள்
முன்வரவேண்டும்.இணைய வழி கற்பித்தலால் பலவிதமான செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளஇயல்வதால்
மாணவர்களுக்குப் பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றன. இணையவழி தமிழ் கற்றலின்போது மாணவன்
விடுப்பு எடுக்கும் நாட்களிலும் பாடத்தினை ஆசிரியர் அளிக்கும் பாடப்பொருள்வழியாகக்
கற்றல்நிலையினை அடைய இயலுகிறது. கடின நடையுடன் கூடிய பாடப்பொருளுடன் அமைக்கப்பட்ட தமிழ்ப்பகுதியினை
மாணவ சமுதாயம் விலக்குவதால் எளியநடையுடன்கூடிய பாடப்பகுதிகளை அமைத்துக் கற்றல்திறனை
அமைக்கவேண்டும். இதனால் களஆய்வுப் பணியில் கிடைக்காத பல செய்திகள் இணையத்தில் நமது
வீட்டு வரவேற்பறையில் கிடைக்கும். தேடிக் கற்றல்நிலையினைக்
கிராமங்களில் காண இயலாது. இத்தகையநிலையினை இணைய வசதிகள் நமக்கு அளித்திடும்போது அதனை
நாம் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளுதல்வேண்டும்.
பலவிதமான புகைப்படங்களைத்
தரவேற்றுவது, வேண்டாதவர்களைப்பற்றிய அவதூறுகளைப் பதிவது போன்ற குற்றங்கள் இதனால் குறைவடையும்.
இதுபோன்ற பல குற்றங்கள் பெருகிவருவதால் இணையத்தளங்களில் ஆசிரியப்பணியை மேற்கொண்டுள்ள
பெண்கள் சமுதாயம் பங்குபெற முன்வருவதில்லை. நேரமின்மையும் பெண்களுக்கு இணையத்தில் ஈடுபடமுடியாமைக்குக்
காரணமாக அமைகிறது. சில பள்ளிகளில் இன்னமும் இணைய வசதி சரிவர அளிக்கப்படவில்லை. கையடக்கக்கருவியில்
அனைத்து வசதிகளும் இருப்பினும், ஆசிரியர்கள் பெரும்பான்மையாகப் பள்ளி அளிக்கும் வசதியினையே
எதிர்பார்த்துக்காத்திருப்பதால் நன்னூல் காட்டும் ஆசிரியர் சமூகம் மாறிவிட்டநிலையை
அறிய இயலுகிறது. இணைய வசதியற்ற பயிற்சித்தாள் உருவாக்கநிலை என்றநிலையில் மட்டும்
தங்களது கற்பித்தல்நிலையை மேற்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆசிரியப்பணியைப் பெரும்பான்மையாகப்
பெண்களே மேற்கொண்டு வாழ்ந்துவருகின்ற இக்காலகட்டத்தில் இந்நிலை மாறவேண்டும். முகநூல்
என்பது புகைப்படங்களை வெளியிடும் வலைத்தளமல்லாது பலவிதமான செய்திகளை உருவாக்கவல்லதாகவும்
இருக்கவேண்டும். ஆனால், இன்றைய மாணவர்கள் புகைப்படங்களை மட்டும் உருவாக்கி வெளியிடுவதில் காலத்தை வீணாக்குவதால் செல்லிடப்பேசியினைப் பள்ளிகளில்
பயன்படுத்த அனுமதிப்பதில்லை. இதனால், அவற்றில் காணப்படும் பிற நல்ல அறிவியல் கருத்துகளையும்
அறியமுடிவதில்லை. ஆசிரியர் எடுத்துரைத்தால்தான் அவற்றிலுள்ள வசதிகளை அறியஇயலும்நிலை
காணப்படுகிறது. ஆண்ட்ராய்டில் பலவிதமான ஆப்ஸ்களை(குறுஞ்செயலி) உருவாக்குவதன்வழி தமிழ்
கற்றல்நிலை விரைவாக வளர்ச்சியடையும். இதனைப் பலவிதமான படிநிலைகளில் அளிக்கலாம்.(www.appsgeyser.com-vanitamil)
- எழுத்துகளை அறிதல்
- பொருத்தமான படத்தினைத் தேர்க
- படத்திற்குப் பொருத்தமான
வாக்கியம் தேர்க
- பொருத்தமான படத்திற்குத் தகுந்த சொல்லைத் தேர்க
எனப் பல நிலைக்கல்விகளுக்குத் தகுந்தாற்போல இம்மென்பொருளைப்
பயன்படுத்தலாம்.
அனுபவமற்ற வயதில் மிகவும் இளைய கல்லூரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி கற்பித்தலில் அனுபவம்பெறாமல்
நேரிடையாகக் கற்பித்தலில் ஈடுபடுவதால் கல்லூரி மாணவர்களின் கற்பித்தல்திறன் பாதிப்படைகிறது.
தமிழ்மொழி வாழும் வாழ்க்கையின் பொருளிற்கேற்றாற்போல அமைக்கப்பட்டிருப்பினும் மாணவரின்
மனநிலைக்கேற்றாற்போலக் கற்பிக்கும் ஆசிரியர்கள் சமுதாயம் மிகவும் குறைந்தநிலையில் காணப்படுகிறது.
ஆங்கிலமொழித்தாக்கத்தின் வழியாகவும், தொழில்முறையின் காரணமாகவும்
தமிழ்மொழி கற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. தமிழ்மொழி அழியாமல்
இருக்க அறிவியலுடன் தொடர்புடைய தமிழ்மொழிக்கான அனைத்துத் தரவுகளும் ஒருங்கே தரவேற்றப்படுதல்வேண்டும்.
இது தமிழ்மொழி பேசும் அனைவரின் ஒருமித்த கடமையாகும். இவ்வாறு இணையத்தில் தமிழ்மொழி பணி சிறக்கும்போதுமட்டுமே
தமிழ்மொழி வருங்காலத்தில் சிறந்துவிளங்கும் என்பது இவ்வாய்வுக்கட்டுரையின் முடிவாகிறது.