வியாழன், 16 அக்டோபர், 2014

வகுப்பறையில் டேப்லட்வழி தமிழ் கற்றல்-கற்பித்தல்

                                வகுப்பறையில் டேப்லட்வழி தமிழ் கற்றல்-கற்பித்தல்
    முனைவர் பி.ஆர் லட்சுமி., எம்.ஏ., எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி., டிசிஇ.,  புலவர்.,(எம்.ஏ),,(பிஜிடிசிஏ).,
                                                  தமிழ்த்துறைவல்லுநர்.,
                                                   சென்னை
                                 புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்!
                                  குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்!
                                             -கவிக்கோ அப்துல் ரகுமான்
           மொழி நாம் நினைக்கும் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் முக்கியக் காரணி. வீட்டில் தாய்மொழி அறிவைக் குழந்தைகள் பெறினும், பள்ளியில் அக்கல்வி பயிலும்போதுதான் முழுமை பெறுகின்றனர்.இயந்திர உலகில் அறிவியல் வளர்ச்சியைத் தடுக்க இயலாது. அறிவியல் உலகின்வழி தமிழ்மொழியினை எடுத்துச்செல்ல வேண்டிய காலகட்டத்தில் இருப்பதால், டேப்லட் வழி தமிழ் கற்றல்,கற்பித்தல் முறையினை வெளிப்படுத்துதல் இவ்ஆய்வின் நோக்கமாகிறது.
தமிழ்மொழி கற்றல்நிலை
     தமிழ்மொழியின்பழமை ஏடுகளிலும், கல்வெட்டுகளிலும் காணப்பட்டாலும் வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள் பல நூல்களைத் தேடிக் கற்றல் மிகவும் குறைந்த அளவில் காணப்படுகிறது. கற்றல் திறன்களான
v    கேட்டல், பேசுதல்,படித்தல்,எழுதுதல் முறைகளை டேப்லட் வழி கல்விமுறை எளிதாக்குகிறது.ஒவ்வொரு மாணவனும் தம் மொழித்திறன் குறித்த படிமத்தை வளர்த்துக் கொள்வதற்கும், தன்னை உணர்ந்து வாழ்க்கையின் நிலைப்பாட்டினை அறிந்து வாழ்வதற்கும் டேப்லட் வழி தமிழ்கற்றல் உதவுகிறது.
 வகுப்பறையில் மாணவர்கள் எழுத்து வடிவம் அறிதல்,மொழித்திறன் பெறுதல், படைப்பாற்றல் திறன் வெளிப்படுத்துதல்
போன்றவற்றை வெளிப்படுத்த டேப்லட் அரிய கற்பித்தல் கருவியாகும்.
இதன்வழி செயல்திறன்கற்றல்நிலை மிகுந்து மாணவர்களின் அறிவாற்றல் தூண்டப்பெறுகிறது.
வகுப்பறையில்
v  மீத்திறன் மிகுந்தவர்
v  நடுத்தரக் கற்றல்திறன்
v  மீத்திறன் குறைந்தவர்
என்ற நிலைகளில் மாணவர்கள் இருப்பினும் கற்றல்நிலை மேம்பாடு பெறுவதற்கு டேப்லட் உதவும்.
டேப்லட்டின் பயன்கள்
டேப்லட் பயன்பாட்டின்போது
v  உற்றுநோக்குதல்
v  பயிற்சி செய்தல்
v  ஆழ்ந்த நுண்ணறிவுச் செய்திகளை வெளிக்கொணர்தல்
போன்ற நிலைகள் ஏற்படுகின்றன.
ஒரு  சிக்கலைப் பல கோணங்களில் தீர்க்க்க்கூடியது படைப்பாற்றல்திறன்.
படைப்பாற்றல்திறனை வெளிக்கொணரப் பல தடைகள் ஏற்படுகின்றன.
v  கவனமின்மை
v  உடல்நலமின்மை
v  கருத்து பற்றிய தெளிவான புரிதலின்மை
v  செய்திகளைப் பல கோணங்களில் ஆராய்ந்து படிக்கும் திறனின்மை
போன்றவை காரணங்களாக அமைகின்றன.
படைப்புத்திறனை எளிதில் வெளிக்கொணர அணுகுமுறை மாற்றங்கள் செய்தல் அவசியம். அத்தகைய அணுகுமுறைத்திறனை டேப்லட்வழிகல்விமுறை அளிக்கிறது.
ஒரு நாட்டின் எதிர்காலமே வகுப்பறையில்தான் தீர்மானிக்கப்படுகிறது.
காமினியஸ் வெளியிட்ட கல்வி நோக்கங்கள்
1.       வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குரிய அறிவைப் பெற்றுக் கொடுத்தல்
2.       அறம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த மேம்பாடுகளுக்குரிய அறிவை வழங்குதல்
3.       மனிதர்களிடையே தெய்வீக ஈடுபாட்டை ஏற்படுத்துதல்
போன்றவையாகும்.
மேற்கூறப்பட்ட நோக்கங்கள் அனைத்தும் தாய்மொழிக்கல்விவழி ஏற்படக்கூடியவையாகும்.மொழியினை மூன்று நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகக் கூறுவர்.
1.       கருத்துகளைக் கூறுதல்
2.       மகிழ்வித்தல்
3.          பிறரை நம் பக்கம் திருப்புதல்
இம்முறைகளை டேப்லட்வழி கற்றல் தெளிவாக்குகிறது.
மொழித்திறன் குறைவதற்கான காரணங்கள்
v  மொழி கற்றுக்கொள்வதில் ஆர்வமின்மை
v  விடாமுயற்சியின்மை
போன்றவையாகும். காரணம் இன்றைய கல்விநிலையில் தமிழ்மொழிகற்றலினால் கிடைக்கும் பணிவாய்ப்புகள்  மிகவும் குறைவாக உள்ளன. இதனால் மாணவர்களிடையே தமிழ் கற்றல் மிகவும் குறைந்து வருகிறது.
ஒரு மொழி வளர பின்பாட்டுப் பணிப்புலம் அவசியமாகிறது. இத்தகைய நிலையினை டேப்லட்வழி  கல்விநிலை அளிக்கிறது.வேற்றுமொழித்தாக்கத்தினால் வலுவிழந்து கொண்டிருக்கும் தமிழ்மொழி தழைத்தோங்க வகுப்பறையில் புதுமைகளைப் புகுத்த டேப்லட் சிறந்த கற்பித்தல் கருவியாகிறது. தெரிந்தவற்றிலிருந்து தெரியாத நிலைக்குச் செல்லுதல்முறை மொழித்திறனை வளர்க்கும்.  தமிழ்மொழியில் எழுத்துகள் கற்பித்தல்,எழுதுதல் நிலையில் ஏற்படும் சிக்கல்களை எழுத்து.காம் தெளிவாக அசைவூட்டம் வழி விளக்கியுள்ளது. MS-OFFICE-இன்வழியாக பாடப்பொருள் தொடர்புள்ளவற்றைத் தயாரிக்கலாம்.
இதற்குத் தேவையான பாடங்களைத் தயாரிக்க Tamil virtual academy.com, Tamil unltd.com,Californian academy.com.,balamithra.com போன்ற இணையத்தளங்களில் பார்வையிடலாம்.
vdraw, kidspainter, pencil, photoshop போன்ற மென்பொருட்களின் வழி தமிழ்பாடப்பொருள் தொடர்பான செயல்முறைப்பயிற்சிகள்,பயிற்சித்தாள் போன்றவற்றை மாணவர்கள் உருவாக்கும் நிலை வளரவேண்டும்.


மேற்காணப்படும் வரைகலை நிலையில் படைப்புத்திறன் வளரும்போது மாணவர்களின் கற்றல்திறன் வளர்கிறது. அனுபவபூர்வமான செயல்முறைகளினாலும், ஆய்ந்து கற்பதினாலும் மொழியின் சிறப்பினைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும்.
 இவ்வரைபடங்களின்வழி பாடத்துடன்கூடிய இலக்கணப்பயிற்சி கிடைப்பதால்  எளிமையான கற்றல் பயிற்சியுடன் மொழித்திறனையும் அடைகின்றனர்.
தொலைநோக்குச் சிந்தனை
புலன்கள் வழியாகத்தான் கற்பித்தல் நிகழவேண்டும் என்றும், குழந்தைகளை மையமாகக்கொண்டும் கற்பிக்கவேண்டும் என்றும் ரூசோ கூறியதற்கேற்ப தமிழ்க்கல்வி கல்விமுறை உலகெங்கும் அமையவேண்டும். கல்வியின் இறுதி சிறந்த மாணவர்களை உருவாக்குவதே என்ற விவேகானந்தர் வாக்கின்படி இன்னமும் தமிழ்மொழி கற்பித்தல் புதுமையாக்கப்படவேண்டும்.
               குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை
               கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை
               நிலம் மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
               உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்
                அமைபவன் நூலுரை ஆசி ரியன்னே.
                                              நன்னூல்-பவணந்தி முனிவர்
இத்தகைய சிறப்புமிக்க பெருமை பெற்ற ஆசிரியர் சமுதாயம் அறிவியல் உலகிற்கேற்ப தமிழ்மொழியில் புதுமைகளைப் புகுத்திக் கற்பிக்க முன்வரவேண்டும். எளிமையாக டேப்லட்வழி தமிழ்மொழி கற்றல்-கற்பித்தல் முறை இவ்ஆய்வுக்கட்டுரையின்வழி தெளிவாக்கப்பட்டுள்ளது.


 pondichery-2014-(International tamil  internet conference)
GRAMMAR-PART-WORKSHEET
LETTERS WRITING IN PICTURE ROUTE GAME METHOD
VOCABULARY IMPROVEMENT,SENTENCE FORMATION,CLOSURE-METHOD

புதன், 15 அக்டோபர், 2014

அர்த்த நாரீஸ்வரர் ஆன கதை


அர்த்த நாரீஸ்வரர் ஆன கதை

பிருங்கி முனிவர் அதிதீவிர சிவபக்தர். ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன். கயிலைநாதன் தான் என்றும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்றெல்லாம் கூறி உள்ளார்ந்த பக்தியுடன் சிவனை மட்டுமே வணங்குவார்.
http://www.thinakaran.lk/2012/10/29/r3.jpgசிவனைத் தவிர வேறு யாரையும் சிந்திக்காத அவரது போக்கு பிற கடவுளரை அவமதிக்கும் வகையில் அமைந்ததுண்டு. அப்படி ஒருநிலை பார்வதிக்கே ஏற்பட்டது. கயிலையில் தன் கணவருடன் அமர்ந்திருக்கும்போது அங்கு வரும் பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னை திரும்பியே பார்க்காமல் போவதும் கண்டு பார்வதி மனம் வருந்தினாள்.
எப்படியாவது பிருங்கி முனிவர் தன்னையும் வணங்கவேண்டும் என்று எண்ணிய பார்வதி இறைவனை நெருங்கி அமர்ந்துகொண்டாள். வழக்கம்போல கயிலாயம் வந்த பிருங்கி முனிவர் சிவனுடன் நெருக்கமாக பார்வதி அமர்ந்திருந்ததைக் கண்டு கலங்கவில்லை. வண்டு உருவம் எடுத்து இருவருக்கும் இடையில் புகுந்து சிவனை மட்டுமே வலம் வந்தார்.
பார்வதியின் சாபம்
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த பார்வதி, தன்னை அவமதித்த முனிவரின் கால்கள் முடமாகிப் போகட்டும் என்று சபித்தாள். உடனே அது பலிக்கவே நடக்க சக்தியில்லாமல் முனிவர் தடுமாறினார். ஆனால் தனது பக்தருக்கு நேர்ந்த கதியை கண்ட இறைவன் பிருங்கி முனிவர் ஊன்றி நடக்க ஒரு குச்சியை அளித்தார்.
முனிவருக்கு ஆதரவாக சிவன் நடப்பது கண்டது பொறுக்காத பார்வதி அவரை விட்டு விலகி பூலோகம் வந்தாள். தன் கணவரை விட்டு ஒரு கணமும் பிரியா வரம் வேண்டும் என்று தவமிருந்தாள். கடுமையான தவத்திற்கு இளகிய இறைவன் பார்வதியை காண பூலோகம் வந்தார். சிவனை கண்ட பார்வதி ஒரு நாளும் உமை விட்டு பிரியாக வரம் வேண்டும் என்று வேண்டினாள்.
பார்வதியின் எண்ணத்தை உணர்ந்த இறைவனும் தன்னுடலுடன் பார்வதியை இணைத்து அர்த்தநாரீஸ்வரராய் ஆனார். இவ்வாறு அம்பிகை இறைவனின் உடலில் ஒரு பாதியாகி, கணவரிடம் இருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக் கொண்ட நாள் தான் கேதார கெளரி விரதநாள்.
கணவன் மனைவியிடையே மாறாத அன்பை வளர்த்துக்கொள்ளும் பண்டிகை தான் இந்த கேதார கெளரி விரதம். 21 நாள் விரதம் இருந்து தீபாவளி தினத்தன்று சிவனை வேண்டி வணங்கினால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும். தம் மாங்கல்யபலம் நீடிக்கவும் கணவரின் மீதான அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டியும் கேதார கெளரி விரதத்தை சுமங்கலிகள் கடைபிடிக்கின்றனர்.
அன்றைய தினத்தில் தீபாவளிப் பண்டிகைக்கான பூஜைகள் முடிந்த பின்னர், பூஜையறையில் விளக்கேற்றி சிவ பார்வதியின் படத்தின் முன்பு அமர்ந்து தியானம் செய்யவேண்டும். ஓம் நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை நாள் முழுவதும் துதிக்க வேண்டும்.
மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டும் என்றும் மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இதனை அனுஷ்டிப்பர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதுண்டு.
விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலின் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்துகொள்வர். மேலும் முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் பாரணம்பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.
பிரம்மா, விஷ்ணு, இந்திரன்
இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக்கூற இயலாது.
இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை. இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி எம்பெருமானே இவ்விரதத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்என்று கேட்டுக்கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார். எனவே நாமும் இவ் அரிய நோன்பினை நோற்று பரம் பொருளின் பூரண கடாட்சத்தினைப் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோமாக!