திங்கள், 15 ஜூலை, 2013

நறுந்தொகை


நறுந்தொகையில் காணப்படும் தனிப்பாடல் ஒன்று இவ்வாறு கூறுகிறது.

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர்க்கொள்ளாதே.

பொருள்

நூறாண்டுகள் நெருங்கித் தொடர்பு கொண்டாலும் முன்கோபங்கொள்ளும் மூடர்களுடைய நட்பானது (ஓரிடத்தில் நிலைபெறாத) நீர்ப்பாசி போலாகும். அதாவது இப்பாடல் இலக்கியத் தரமுடைய தனிப்பாடல் இதனை விளக்கும் போது ஒருவர் நட்புக்குரியவராக விளங்குவதற்கு நல்ல அன்பும் சகிப்புத்தன்மையும் வேண்டும்; அதுவன்றி எதற்கெடுத்தாலும் முன்கோபம் கொண்டவராக இருந்தால் அத்தகையவரோடு நட்புகொள்வது நன்மையும் தராது; அதுவும் எத்தனை ஆண்டுகள் நட்பு கொண்டாலும் நட்புத்தன்மை நிலைக்காது.

நீரில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தாலும் பாசியானது நிலையான வேர்ப்பிடிக்காது என்பது பொருள். இதனை இந்த அளவிலே விளக்கிச் சொன்னாலே மாணவன் விளங்கிக் கொள்வான்.

புறநானூற்றுப் பாடல்

புறநானூற்றுப் பாடல்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துத் தமிழில் மோசிகீரனார் என்ற புறநானூற்றுப்புலவர் ஒருவர் மிகச் சிறந்த பாடல் ஒன்றை இயற்றியுள்ளார். அப்பாடல் இன்றும், எல்லா நாட்டவரும், எல்லா மதத்தவரும் ஏன் எல்லா ஆட்சியாளரும் நன்கு உணர்ந்து பார்க்க வேண்டிய பாடல் அது. இதோ பாடல்

நெல்லும் உயிர் அன்றே; நீரும்
உயிரன்றே;
மன்னன் உயிர்ந்தே மலர்தலை உலகம்;
அதனால் யான் உயிர் என்பது அறிகை
வேன்மிகு தாளை வேந்தர்க்குக் கடனே,” (புறம்: 186 / பாடியவர்: மோசிகீரனார்)

சொல் பொருள் விளக்கம்:

மலர்தலை உலகம் - பரந்து கிடக்கும் நாடு.

வேன்மிகு தானை - வேற்படை மிகுதியாக உடையசேனை

மன்பதை - மக்கள் வாழுமிடம்

விளக்க உரை

ஒரு நாட்டின் குடிமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமெனில், அங்கே நெல்லும் அதாவது சிறப்பான நெல்விளைச்சல் இல்லையென்றாலும், உயிர் வாழ்வதற்குத் தேவையான குடிநீரும் சிறப்புடன் அமையவில்லையென்றாலும் பரவாயில்லை. மன்னன் செங்கோல் பிறழாமல் சிறப்புடன் விளங்கி நல்லாட்சியை மக்களுக்கு வழங்க வேண்டும். அதுவே அந்நாட்டு மக்களுக்கு சிறப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனை மாணவர்களுக்கு எளிதில் விளங்குமாறு கூற வேண்டுமெனில் மக்களாட்சியில் மக்கள் எவ்வாறு சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்புகிறார்கள் என்பதை நடைமுறைகளைக் கொண்டு விளக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நாட்டுக்குப் பதிலாக வீட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். நாடுதான் வீடு, வீடுதான் நாடு என்று கூற வேண்டும். நாட்டுக்குத் தலைவன் மன்னன். வீட்டிற்குத் தலைவன் அதாவது வீட்டை ஆள்பவன் தந்தை. ஒரு தந்தை சரியில்லையென்றால் அந்த வீட்டில் எத்தகைய நலம் இருந்தும் அதனால் பயன் எதுவும் கிடையாது.

ஒரு தந்தை தன்மகனுக்கு மூன்று வேளையும் நன்றாக உணவு வழங்குகிறார். உடைகள் வாங்கித் தருகிறார்; எல்லாம் நன்றாக செய்கிறார்; ஆனால், தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து அடிக்கிறார். இப்போது சொல்லுங்கள். அந்த தந்தையின் மீது இந்த மகனுக்கு அன்பு இருக்குமா? அந்த தந்தையால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்குமா? என்பதை எண்ணிப் பாருங்கள். இதே நிலைதான் நாட்டிலும் ஏற்படும் என்பதை விளக்கினால் மேற்கண்ட புறநானூற்றுப் பாடல் மிகவும் எளிதில் மனதில் பதியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சனி, 29 ஜூன், 2013

குறிக்கோள்



                             குறிக்கோள்
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கென ஒரு குறிக்கோள் உண்டு. பணம் இருப்பவருக்குப் புகழ், வறுமையில் உழல்பவருக்குப் பணம், வசதி எனப் பலதரப்பட்ட வகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட இலட்சியங்கள், எண்ணங்கள் வாழ்க்கையில் உண்டு. ஒருவர் சொல்வதை மற்றொருவர் கேட்பதா! என்ற ஆணவம் ஒருவருக்கு இருக்குமேயானால் அவர் தன் வாழ்க்கையில் என்றும் முன்னேற இயலாது. அடுத்தவருடைய கருத்தை எவனொருவன் ஊன்றிக் கவனிக்கிறானோ, செயல்படுகிறானோ அவனே வாழ்க்கையின் முதல் வெற்றிப் படிக்கட்டின் காலடியின் நிற்கிறான். ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே ஒருவனுக்கு வெற்றிகள் வந்து சேரும். ஆனால் ஒருங்கிணைந்து ஊர் கூடித் தேர் இழுக்க, இழுக்கும் கைகள் தூயனவாக இருக்க வேண்டும். தன்னலம் பாராத் தூய மனப்பாங்கு கொண்டவையாக இருத்தல் வேண்டும். தன்னலம் கருதா ஆசிரியர் சமூகம் உருவாகத் தியாகச் சிந்தனைகள் உருவாக வேண்டும். முற்காலம்போல் எல்லாவற்றையும் எல்லோருக்கும் அளித்து விட்டு காந்திபோல் வாழவேண்டுமா! நமது தேசத்தலைவர்கள்போல் இருக்க வேண்டுமா! காலம் மாறிவிட்டதே எனக் கேள்விகள் எழலாம். ஒருவன் தனக்கென ஒரு இடம், தனது குடும்பத்திற்கென ஒரு இடம், தனது மதத்திற்கென ஒரு இடம், தனது நாட்டிற்கென ஒரு இடம் என வாழ்ந்தால் மட்டும் போதுமா? மனிதநேயம் மிகுந்தவர்களாக மாறுவது எப்போது? இத்தகைய சுயநல வட்டம் மாறும்போது விவேகானந்தர் காண விரும்பும் பாரதம் அமையும். ஆசிரியர்கள் கற்பிக்கும்போது பாடப் பொருளுடன் வாழ்க்கையில் வாழ்வதற்கான பண்பாட்டு நெறிமுறைகளையும் இணைந்து கற்பித்தல் வேண்டும். என்றோ ஒருநாள் இறக்கத்தான் போகிறோம்! அந்நாள் நாம் நாள்காட்டியில் நாம் கிழித்துக் கசக்கிப் போடும் ஒருநாள் தான். அத்தாளில் உள்ள பொன்மொழிகளைப் படிப்பவரும் உண்டு. கசக்கிப்போடுபவரும் உண்டு. அது போல்தான் நாம் வாழும் வாழ்க்கை.
பகுத்தறியும் திறன் படைத்தவர்களாகிய  நாம்  எவ்வாறு வாழ்தல் வேண்டும்? மின்னி மறைவது மானிட வாழ்க்கை. என்றும் மாறாதிருப்பது அவர்தம் படைப்புகள். வாழ்க்கையில் உருட்டி விளையாடும் கண்ணாடிப் பந்துகளான சுற்றம், நட்பு                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            உடல்நலம் இவற்றில் கவனம் கொள்ளவேண்டும். இறப்பது ஒரு முறைதான் அத்தகைய நாள் எது என நாம் அறிவதில்லை. அறிந்தவரும் இல்லை. அத்தகைய நாள் வருவதற்குள் வாழ்க்கைக்குப் பயனுள்ள நல்ல செயல்களைச் செய்யலாமே! நீ ஏன் வந்தாய்? எனது வீட்டு வேலைக்காகவே நான் இத்தகைய பணி என்ற பெயரில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என அடுத்தவரை அர்ச்சிக்கும் சுயநலம் மிகுந்த குணம் மென்மையான இதயத்திலிருந்து அகற்றப்படவேண்டும். சுயநல முள் ஆசிரியரிடம் இருந்தால் ஒளிமயமான மாணவர் சமுதாயம் என்ற ரோஜாவைப் பறிக்க இயலாது. பணம் சகடக்கால் போல் சுற்றி வரும். பழுத்த காலத்தில் மட்டுமே மரத்திலிருந்து கனிகள் விழுவதில்லை. இளம் வயதிலேயே இளங்காய்களும் விழுவதுண்டு. அதற்குள் நம்மாலான அறப்பணிகளைச் செய்தல் வேண்டும் என்ற நாலடியின் வழி வாழ வேண்டும். பாடத்துடன் அறிவியல் சார்ந்த கருத்துகளையும், பண்பாட்டையும்  இணைந்து கற்பிக்க வேண்டும்.
ஆசிரியரால் அற்புதமான மனிதநேயம் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். இறக்கைகள் பறவைகள் பறப்பதற்கு மட்டுமல்ல இதைப்போல் ஆகாயவிமானமும் தயாரித்து அதில் நாமும் பயணிக்கலாம் என்று வாழ்ந்து காட்டிய மனிதனாக வாழ வேண்டும்.  அப்துல் கலாம் காணப்போகும் அறிவில் உலகத்திற்குச் சுயநலமற்ற, நாட்டிற்குப் பெருமை தரக்கூடிய  நல்ல மாணவர்களை உருவாக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஆசிரியர் சமூகம் தன்னலம் கருதாத தொண்டு செய்து வாழப் பழகுதல் வேண்டும்.
   உண்மைக்கும், நேர்மைக்கும் என்றும் பிறருக்குத் தொண்டு செய்து வாழும் நல் உள்ளங்களுக்கு என்றும் அழிவு நேராது. ‘வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்ற குறளை நாம் அனைவரும் அறிவோம். வள்ளுவத்தின் வழி நிற்பதே ஆசிரியர்களுக்குப் பெருமை நிறைந்தது.

சில ஊர்-பெயர்கள்


சில ஊர்களின் இன்னாள் ,முன்னால் பெயர்கள்:


இன்னாள் முன்னால்

1)பழனி திருஆவினன் குடி

2)திருசெந்தூர் திருசீரலைவாய்

3)பழமுதிர் சோலை பழம் உதிர் சோலை.

4)திருத்தணி (அ) திருத்தணிகை செருத்தணிகை

5)மதுரை மாதுரையும் பேரூர்.

6)செங்கல்பட்டு செங்கழுநீர்ப்பட்டு!

7)பூந்த மல்லி பூவிருந்தன் வல்லி.

8)ஆர்காட் ஆருக் காடு!

9)சோளிங்கர் சோழ சிங்கபுரம்.

10)சிவகங்கை நாலுகோட்டை

11)சிதம்பரம் தில்லை

12)தருமபுரி தகடூர்

13)ஷ்ரிவில்லிபுதுர் நாச்சியார் கோயில்

14)அருப்பு கோட்டை திரு நல்லுர்

15)எக்மோர் எழுமூர்

16) சிந்தாதரி பேட்டை சின்ன தரி பேட்டை .

17) கோடம்பாக்கம் கோடலம் பாக்கம்

18)திருவல்லிகேணி திரு அல்லி கேணி

19) பழவந்தாங்கல் பல்லவன் தாங்கல்

20)தாம்பரம் குனசீல நல்லுர் (அ) தர்ம புரம்