திங்கள், 4 நவம்பர், 2013

ஆசிரியர் கவனிக்க வேண்டிய பண்பு



- உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம்
அணிலுக்கு அதன் முதுகில் இருக்கும் மூன்று கோடுகள் எப்படி வந்தன தெரியுமா?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு, அதற்கான பதிலும் உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட எல்லா இந்தியனுக்கும் இந்தக் கதை தெரிந்திருக்கும்.
இலங்கைக்குச் செல்ல இருந்த இராமனுக்கு உதவியாக சேதுப்பாலம் கட்டப்பட்டபோது தன் பங்குக்கு அணில் தன் உடலில் மணலை ஒட்டிக் கடலில் கொண்டு கரைத்ததாகவும், அதனைப் பாராட்டி இராமன் அணிலைத் தன் கையில் எடுத்து அதன் முதுகில் தடவிக் கொடுத்ததாகவும், அதுதான் மூன்று கோடுகளாகப் பதிந்து விட்டதாகவும் சொல்லப்படும் கதைதான் அது!
இது கதைதான். ஆனால் இந்தக் கதை ஓர் ஆழமான பொருளைச் சொல்கிறது. யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்; மனமுவந்து பாராட்டுங்கள்’, என்பதே அது.
செய்கிற வேலைக்குக் கிடைக்கும் பாராட்டு எவரையும் ஊக்கப்படுத்தும்; இன்னும் சற்று அதிகமாக உழைக்க வைக்கும். தன்னுடைய முயற்சியும் உழைப்பும் அங்கீகரிக்கப்படுகிறது’, என்ற எண்ணம் நம்பிக்கையை வார்க்கிறது. இன்னும் நன்கு செயலாற்ற வேண்டும் என்கிற வேட்கையை உண்டாக்குகிறது.
குறிப்பாகக் கல்வியிலோ, பொருளாதார நிலையிலோ, பணி நிலையிலோ, வயதிலோ அல்லது சமூக அங்கீகாரத்திலோ சற்றுக் குறைவான நிலையில் உள்ளவரை அங்கீகரித்துப் பாராட்டுவது அவசியம். அவர்களுக்கு அதைவிட ஊக்கமருந்து இல்லை. வாழ்க்கை என்னும் விளையாட்டில், தடைசெய்யப்பட முடியாத ஊக்க மருந்து இது!
கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டம் ஒன்றின் குக்கிராமத்தில் ஒருநாள் காலைச் சிற்றுண்டி சாப்பிடும்படி ஆயிற்று. எவ்வளவு மறுத்தும் கேட்காத அன்புத் தொல்லையில் அந்த வீட்டில் சாப்பிட அமர்ந்தோம். தரையிலேயே அடுப்பை வைத்து, கீழே அமர்ந்து பூரி செய்யலானார் வீட்டுப் பெண்மணி. வாழ்நாளில் அத்தனை வித்தியாச வடிவங்களில் பூரியை நான் பார்த்ததில்லை. வட்டம் தவிர எல்லா வடிவங்களிலும் அவை இருந்தன. அந்த வீட்டில் என்றோ ஒரு நாள்தான் இவற்றையெல்லாம் செய்வார்கள் என்ற எடுத்துக்காட்டுடன் பூரிகளும் அதற்கான கூட்டும் வந்தன. உபசரித்த அன்பு காரணமாக, சுவையைப் பெரிதாக மனம் எண்ணவில்லை.
இந்த மாதிரி பூரி சாப்பிட்டதே இல்லை அம்மா. ரொம்ப பிரமாதம்என்று உடன் வந்த நண்பர் சொன்னதும், அந்தப் பெண்ணின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியும், மகிழ்ச்சியும் பாராட்டப்படுவதன் பலனைக் காட்டின. பொய்மையும் வாய்மையிடத்தேஎன்று வள்ளுவன் சொல்லவில்லையா என்ன?
தகுதியானவர்களைக் கூட பாராட்ட பல நேரங்களில் நாம் தவறிவிடுகிறோம். மனப் பூர்வமாக அடுத்தவரைப் பாராட்டுவது என்னும் உயரிய குணத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களிடம் இந்தக் குணம் இருந்தால், அது நல்ல மாணவர்களை உருவாக்குகிறது. அலுவலகப் பொறுப்பாளரிடம் இந்தக் குணம் இருந்தால், அது நல்ல ஊழியர்களை உருவாக்கு கிறது. ஒரு தலைவனிடம் இந்த நல்ல குணம் இருந்தால், அது வெற்றியைத் தேடித்தரும் தொண்டர்களை உருவாக்குகிறது. ஒரு குடும்பத் தலைவரிடமும் தலைவியிடமும் இந்தக்குணம் இருந்தால் அது நல்ல தலைமுறையை உருவாக்குகிறது.
மனத்தில் பொறாமையும், தன் திறமையைப் பற்றி தாழ்வான எண்ணமும் அதனால் தோன்றிய உள்அச்சமும் கொண்டவர்களே அடுத்தவர் களைப் பாராட்ட மறுக்கிறார்கள். தன்னம்பிக்கை கொண்டவர்களும் தன் நிலைமை மீறி ஆசைப் படாதவர்களும் அடுத்தவரைப் பாராட்டத் தயங்குவதே இல்லை. இந்த இரு பிரிவினரில் நாம் எந்தப் பிரிவில் இருக்கிறோம் என்பது மிக முக்கியம்.
அடுத்தவரைப் பாராட்டும் பழக்கம் இல்லாமல் போனால், வேறு ஒரு நோயும் நம்மிடம் வந்து சேரும். தற்பெருமைஎன்னும் நோயே அது. இன்று கற்றறிந்த பெரியோர்களிடமும், வழிகாட்ட வேண்டிய தலைவர்களிடமும் இந்த நோய் தலைவிரித்தாடுவதன் காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்? அடுத்தவரின் திறமையைப் பாராட்டி மகிழாமல், ‘அது அவர்களுக்குத் தான் போட்ட பிச்சைஎன்று எண்ணிக் கொள்வதுதான்.
மகாபாரதத்தில் சொல்லப் படும் பல கிளைக் கதைகளுள் ஒன்று தற்பெருமையின் கீழ்மையைப் பற்றிப் பேசுகிறது. தனது வில்லான காண்டீபத்திடம் அளவற்ற அபிமானம் வைத்திருந் தான் அர்ச்சுனன். காண்டீபத்தைக் குறை சொல்லிப் பேசுபவர் எவராயிருந்தாலும், அவரை நான் கொல்வேன். அப்படி கொல்ல முடியாமல் போனால் தற்கொலை செய்து கொள்வேன்என்று சபதம் ஏற்றிருந்தான் அவன்.
குருஷேத்ர போர் நடந்து கொண்டிருந்த போது, ஏதோ ஒரு விரக்தியில், காண்டீபத்தை சற்றுக் குறைவாகப் பேசிவிட்டான் தருமன். தான் மிகவும் மதிக்கும் அண்ணனைக் கொல்ல அர்ச்சுனனால் எப்படி இயலும்? அதற்காக காண்டீபத்தைக் குறைத்துப் பேசியதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? எனவே, தனது சபதத்தின்படி, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தான் அர்ச்சுனன். எவர் தடுத்தும் அவன் மனத்தை மாற்ற முடியவில்லை. வழக்கப்படி எல்லோரும் கண்ணனிடம் ஓடினார்கள். கண்ணனும் அர்ச்சுனனை எவ்வளவோ சமாதானப்படுத்திப் பார்த்தான். அவன் மனம் மாறுவதாக இல்லை.
ஆமாம், காண்டீபத்தைக் குறை சொன்னால் கொலை அல்லது தற்கொலை என்று சபதம் எடுத்திருக்கிறாயேஅந்தக் காண்டீபத்தைப் பயன்படுத்தி நீ செய்த சாதனைகளையெல்லாம், விரிவாக சொல்லேன்என்று கேட்டான் கண்ணன். உனக்குத் தெரியாதா?” என்றான் அர்ச்சுனன். அதெல்லாம் இருக்கட்டும். நீ செய்த சாதனைகளையும் பெற்ற வெற்றிகளையும் உன் வாயால் நீயே சொல்என்றான் கண்ணன். அர்ச்சுனன், தனது வெற்றிகளைப் பற்றியும் தனது வில்லாற்றலைப் பற்றியும் விரிவாகச் சொல்லி முடித்தான்.
சரி. எல்லாம் ஆயிற்று. எல்லோரும் கிளம்புங்கள்என்றான் கண்ணன்.
ஆனால், நான் தற்கொலை செய்து கொள்வது உறுதிஎன்றான் அர்ச்சுனன்.
ஒருவன் எப்படி இருமுறை தற்கொலை செய்து கொள்ளமுடியும்என்று கேட்டான் கண்ணன்.
என்ன பிதற்றுகிறாய் கண்ணா? நான் எப்போது தற்கொலை செய்து கொண்டேன்?” என்று எரிச்சலுடன் கேட்டான் அர்ச்சுனன். கண்ணன் சொன்னான். அர்ச்சுனா! எப்போது ஒருவன் தனது பெருமைகளைத் தானே பேசிக் கொள்கிறானோ, அவன் தற்கொலை செய்து கொள்கிறான் என்று பொருள். தற்பெருமை பேசுவது என்பது தற்கொலை செய்து கொள்வது தான். எப்போது உனது பெருமையை நீயே பேசினாயோ, அப்போதே நீ தற்கொலை செய்து கொண்டாய்என்றான் கண்ணன். இந்த அடிப்படையில் பார்த்தால், இன்று எத்தனைபேர் நம்மில் உயிர் வாழ்கிறோம்?
ஒரு பள்ளி மாணவி, கம்ப இராமாயணத்தின் பால காண்டத்தை முழுவதும் மனனம் செய்திருந்தாள். பெருமையுற்ற அப்பள்ளி. அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் பாடல்களை அவள் ஒப்பிக்கவும், அவளை பாராட்டவும் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தது. சில பாடல்களை அந்த மாணவி ஒப்பித்த பின்னர், சிறப்பு அழைப்பாளர் வாழ்த்திப் பேசுவதாகவும் மாணவிக்கு சால்வையும் பரிசும் அளித்துவிட்டு அவர் கிளம்பிய பின்னர் தொடர்ந்து மாணவி பாடல்களை ஒப்பிப்பதாகவும் நிகழ்ச்சியை அமைத்திருந்தார்கள். ஏற்பாட்டின்படி சில பாடல்களை மாணவி ஒப்பித்த பின்னர், அவளை வாழ்த்திப் பேச சிறப்பு அழைப்பாளரை அழைத்தார்கள்.
இந்தப் பெண் ஒப்பித்தபோது எனது பள்ளிப் பருவ நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்ததுஎன்று ஆரம்பித்த சிறப்பு அழைப்பாளர், மாணவப் பருவத்திலேயே நிறைய பாடல்களை அவர் மனனம் செய்து வைத்திருந்ததாகவும், சிறந்த பேச்சாளராக இன்று அவர் நாட்டு மக்களால் போற்றப்படுவதற்கு காரணம் அதுதான் என்று சொல்லி, அவர் மனப்பாடம் செய்த சில பாடல்களையும் ஒப்பித்து, கடைசியாக அவர் போல் அந்த மாணவியும் வெற்றி பெறுவாள் என்று நம்புவதாக வாழ்த்தி விடை பெற்றார்!
தன்னை வியந்தான், விரைந்து கெடும்”, என்கிறான் வள்ளுவன். இந்த குறளுக்கு நான் எவ்வளவு அழகாகப் பொருள் சொல்லிப் பேசுவேன் தெரியுமா?” என்பவர்களை என்னென்பது……?
ஆனால் இப்படிப்பட்டவர்கள், தங்களது சுய ஆதாயத்துக்காக தகுதியில்லாதவரையும் போற்றிப் புகழத் தயங்க மாட்டார்கள். மனத்தில் மறை பொருள் கொண்டு தகுதியில்லாதவரைப் புகழ்ந்து பாராட்டுவதும் நம்மிடம் பெருகித்தான் விட்டது. பணம் இருப்பவரையும், பதவியில் இருப்பவரையும் சுயலாபத்துக்காகப் புகழ்வதும் இழிநிலைதான். கற்றவர்களும் இன்று இந்த நிலையில் இருப்பதுதான் வேடிக்கையானது, வேதனையானதும் கூட.
மனம் மகிழ்ந்து உளப்பூர்வமாக பிறரைப் பாராட்டுவது என்பது ஓர் உயர்ந்த நிலை. அது இருவரையுமே உயர்த்துகிறது. தற்புகழ்ச்சி பேசுவது என்பது கீழ்மை நிலை. பேசுபவரையே அது தாழ்த்துகிறது. தற்புகழ்ச்சியும் பொய் புகழ்ச்சியும் தவிர்க்கப்பட வேண்டியவை.
சின்னச் சின்ன செயலுக்குக்கூட அடுத்தவரைப் பாராட்டிப் பழக வேண்டும். வீட்டையோ அல்லது அலுவலகத்தையோ நன்றாக பெருக்கித் துடைக்கும் வேலையாளை; விரைந்து சமைத்து சாப்பிடத் தரும் தாயை அல்லது மனைவியை; சொன்ன நேரத்தில் தனது வேலையை செய்து முடிக்கும் நண்பனை; அவன் நேர்த்தியாக உடை உடுத்தும் பழக்கத்தை; தேர்வு நேரத்திலாவது சீக்கிரம் எழுந்து படிக்க அமர நினைக்கும் பிள்ளையை; குழந்தையின் அழகான கையெழுத்தை என்று எதையும் பாராட்டலாம்.
மனம் விட்டுப் பாராட்டும்போது, பாராட்டப்படுபவர்களின் திறமையை மூடியிருக்கும் தயக்கமும் கூச்சமும் தாழ்மை உணர்ச்சியும் விலகுகின்றன. திறமைகள் மேலும் வெளிப்படுகின்றன.
வளர வேண்டியவர்களுக்கு வெளிச்சமும் உரமும் இத்தகைய பாராட்டு மழைதான். இந்த மழை திறமைகளை வளர்க்கிறது. தகுதியான வர்களைப் பாராட்டுவது என்பது நமது சமூகக் கடமை. அதனால் பயன்பெறுவது நாமும்தான்.

3 கருத்துகள்:

  1. இன்றைய சமூகத்துக்கு தேவையான அறிவுரை

    கட்டுரை மிக நன்றாக உள்ளது

    பதிலளிநீக்கு
  2. இன்றைய சமூகத்துக்கு தேவையான அறிவுரை

    கட்டுரை மிக நன்றாக உள்ளது

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமையான பதிவு.... நன்றி

    பதிலளிநீக்கு