முனைவர் க.துரையரசன்
நோக்கம்:
இலக்கணத்தைக் கற்பிக்கும்
ஆசிரியர் மாணவரிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. இலக்கணம் கணக்கு
மாதிரிக் கடுமையானது. கணக்கைப் படிநிலை (Steps) தவறாமல் தொடர்ந்து
கவனித்தால்தான் புரியும். அது போலத் தான் இலக்கணமும்; கணக்கு பிணக்கு
ஆமணக்கு; இவை போன்று கூறி தமிழ் இலக்கணத்தைத் தொடங்குகின்ற ஆசிரியர்கள்தான்
இன்று நிரம்ப உள்ளனர். இவ்வாறு கூறினால் ஆர்வமுடன் பயில்வதற்கு எவரும்
முன் வரார். எனவே, தமிழ் இலக்கணத்தை மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் – அதே
நேரத்தில் மரபுக்கு இழுக்கு நேராத வண்ணம் கற்பிக்க வேண்டியது காலத்தின்
கட்டாயமாகும். அவ்வகையில் தொல்காப்பியம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்
குறித்து இங்கு எடுத்துரைக்கப்படுகிறது.
இன்றைய சூழ்நிலையில்
இலக்கண நூற்பாக்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல், எழுதுதல், நூலில் உள்ள
உதாரணங்களேயே எழுதச் சொல்லுதல் ஆகிய நிலையில் மட்டுமே தமிழிலக்கணம்
கற்பித்தல் நின்று போய் விட்டது. ‘இலக்கணம் என்பது பழைய மொழிக்கு விளக்கம்
கூறும் மரபிலக்கண நூற்களின் செய்திகள் மட்டுமல்ல. அன்றாடம் நாம் பேசும்
எழுதும் மொழியின் அமைப்பையும் ஒழுங்கு நெறியையும் கூறுவதாகும்’ என்பது மொழி
வல்லுநர்களின் கருத்தாகும்.
மேலும், காலந்தோறும் மொழியானது
மாறுதலுக்குட்பட்டது. எனவே மரபிலக்கணத்தைச் சொல்லிக் கொடுக்கும்போதே,
தற்போது மொழியின் நிலை என்ன என்பதையும் விளக்கி மாணவர்களுக்கு வேறுபாட்டை
உணரும் திறனை ஏற்படுத்த வேண்டும்.
புதிய அணுகுமுறைகள்
இலக்கணம் கற்பித்தலில் பழைய அணுகுமுறைகளை விடுத்துக் கீழ்க்கண்ட புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றலாம்.
- நடைமுறை எடுத்துக்காட்டுகளைக் கூறுதல்
- மாணவர்களுக்குப் புரிகிற மாதிரியான உதாரணங்களைத் தருதல்
- மாணவர்களை எடுத்துக்காட்டுகள் கூறச் செய்தல்
- திரைப்பாடல்களைக் கூறி விளக்குதல்
- மாணவர்களுக்கு ஆர்வத்தையும் அறிவையும் ஊட்டும் வகையில்
- சமகாலத்தோடு இலக்கணத்தைப் பொருத்திக் கற்பித்தல்
- இணைய மூலங்களைப் பயன்படுத்திக் கற்பித்தல்
விரவுப் பெயர்:
உயர்திணைக்கும் அஃறிணைக்கும்
பொதுவாய் வரும் பெயர் விரவுப்பெயர் எனப்படும். (எ.கா.) சாத்தன், சாத்தி.
சாத்தன் வந்தான், சாத்தி வந்தாள், சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள் என்பன
உயர்திணைப் பெயர்கள். சாத்தன் வந்தது, சாத்தி வந்தது என்பன அஃறிணைப்
பெயர்கள். இங்ஙனம் சாத்தன், சாத்தி என்பன இரு திணைகளுக்கும் பொதுவாய்
வருவதால் இவை விரவுப் பெயர்களுக்குக் காலங்காலமாய் எடுத்துக்காட்டுகளாகக்
கூறப்படுகின்றன.
தாய் வந்தாள், தாய் வந்தது. இங்கு
தாய் என்பது விரவுப்பெயராய் வந்துள்ளது. இலட்சுமி வந்தாள், இலட்சுமி (பசு)
வந்தது. இங்கு இலட்சுமி என்பது விரவுப் பெயராய் நின்றது. இது போல் நம்
செல்ல (Pet Animals) விலங்குகளுக்கு இடுகின்ற உயர்திணைப் பெயர்கள் எல்லாமே
விரவுப் பெயர்களாய்ப் பெரிதும் அமைந்துள்ளன. எனவே விரவுப் பெயருக்கான
எடுத்துக்காட்டான சாத்தன், சாத்தியை விட்டு சற்று நகர்ந்து தாய், இலட்சுமி –
இன்னும் இது போன்ற விரவுப் பெயர்களைக் கூறவும் கண்டறிந்து கற்பிக்கவும்
முற்பட வேண்டும்.
ஆகுபெயர்:
ஒன்றன் பெயர் மற்றொன்றுக்குத்
தொன்றுதொட்டு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும். ஊர் சிரித்தது என்பது இடவாகு
பெயருக்கு எடுத்துக்காட்டாகும். இதனையே கூறிக் கொண்டிராமல், கல்லூரிக்குப்
பேருந்தில் வருகின்ற மாணவர்கள் கல்லூரியின் பெயரைச் சொல்லியும், திரைப்படம்
பார்க்கச் செல்வோர் திரையரங்கின் பெயரைச்சொல்லியும், எந்த ஊருக்குச்
செல்கிறோமோ அவ்வூரின் பெயரைச் சொல்லியும் பேருந்துகளில் பயணச்சீட்டுப்
பெறுவது வழக்கம். இவற்றையே இடவாகு பெயருக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
எ.கா. ‘காலேஜ் ஒன்னு கொடு’. இதில் காலேஜ் என்பது இடவாகு பெயராகும். இதனைப்
போலவே வகுப்புக்குக் காலதாமதமாக வரும் மாணவனை, ‘லேட்டு இங்க வா’ என்று
விளையாட்டாக அழைக்கலாம். இங்கு ‘லேட்டு’ என்பது காலவாகு பெயராகும்.
வெள்ளையா இங்க வா என்பது பாண்பாகு பெயர் ஆகும். வத்தல் இங்கு வா என்பது
தொழிலாகு பெயர் ஆகும்.
தொகைச் சொற்கள்:
- வினைத்தொகை: ‘ஊறுகாய்’ என்பது வினைத்தொகைக்கு விளையாட்டாக ஆசிரியர்கள் கூறும் எடுத்துக்காட்டாகும். இது போன்றே சுடுசோறு, சுடுநீர், இடுகாடு, சுடுகாடு, அரிவாள், வெட்டுகத்தி போன்ற எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இத்தகு வினைத்தொகை சொற்களை மாணவர்களிடத்துக் கேட்டால் நிறைய எடுத்துக்காட்டுகள் கிடைக்கும்.
- உம்மைத்தொகை: இரவு பகல், தாய் தந்தை, அண்ணன் தம்பி, அக்கா
தங்கை, பேனா பென்சில், நோட்டு புத்தகம், பூரி கிழங்கு, சட்னி சாம்பார், டீ
காபி போன்றவற்றை உம்மைத்தொகைக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
- வேற்றுமைத்தொகை: ‘கல் எறிந்தான்’ – கல்லை எறிந்தான் (இரண்டாம்
வேற்றுமைத் தொகை), கல்லால் எறிந்தான் (மூன்றான் வேற்றுமைத் தொகை)
உரையாசிரியர்கள் காட்டும் உதாரணம். ஆசிரியர் பாடம் நடத்தினார், மாணவர்
பாடம் கேட்டார், தயிர்ப் பானை, மோர்ப்பானை, பால்சட்டி போன்ற
எடுத்துக்காட்டுகளை இரண்டாம் வேற்றுமைத் தொகைக்கும், அரிவாள் வெட்டு,
கத்திக்குத்து, பொற்குடம், தங்கத்தாலி, தங்கத்தோடு, வெள்ளித்தட்டு போன்ற
எடுத்துக்காட்டுகளை மூன்றாம் வேற்றுமைத் தொகைக்கும் சான்றாகக் காட்டலாம்.
வயிற்று வலி, கழுத்து வலி, பல் வலி, அவன் தம்பி போல்வன நான்காம்
வேற்றுமைத்தொகைக்கு எடுத்துக்காட்டுகளாகும். பிறவற்றிற்கும் இங்ஙனம்
எடுத்துக்காட்டுகளைத் தரலாம்.
தொடை நயங்கள்:
முதல், இரண்டு, கடைசி எழுத்துகள்
ஒன்றி வருவது முறையே மோனை, எதுகை, இயைபு எனப்படும். இதற்குச் செய்யுட்
பகுதிகளிலிருந்து மட்டுமே எடுத்துக்காட்டுகள் கூறும்பொழுது மாணவர்களுக்கு
சலிப்பு ஏற்படும். எனவே, கீழ்க்காண்பவைப் போன்று சுவையான
எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
மோனை:
ராக்கு முத்து ராக்கு – புது
ராக்குடியை சூட்டு
கண்ணோடு காண்பதெல்லாம் – தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
மாணவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டி அவர்கள் புரிந்து கொண்ட பிறகு,
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
போன்ற இலக்கியச் சான்றுகளைக் காட்டினால் எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்வார்கள்.
எதுகை:
பாண்டியனின் இராஜ்ஜியத்தில் உய்ய லாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்ய லாலா
கண்ணோடு காண்பதெல்லாம் – தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
இயைபு:
ராக்கம்மா கையத் தட்டு – புது
ராகத்தில் மெட்டுத் தட்டு
ஊதா கலரு ரிப்பன் – யாரு
உனக்கு அப்பன்
முரண்:
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனிமழை பொழிகிறது
அந்தாதி:
வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்குக் காமனவன் மலர்க்கணைகள்
அடி வகைகள்:
அடி வகைகளை விளக்குவதற்குச் செய்யுள்களை உதாரணம் காட்டுவதற்கு முன்பாக சாதாரண வாக்கியங்களைக் காட்டலாம்.
நான் வந்தேன் – குறளடி
நான் கலலூரிக்கு வந்தேன் – சிந்தடி
நான் இன்று கல்லூரிக்கு வந்தேன் – அளவடி
நான் இன்று எங்கள் கல்லூரிக்கு வந்தேன் – நெடிலடி
நான் இன்று எங்கள் கல்லூரிக்கு வந்து சென்றேன் – கழிநெடிலடி
விளி வேற்றுமை:
அன்னை – அன்னாய், தந்தை – தந்தாய், நங்கை – நங்காய், மங்கை – மங்காய் என்று அழைப்பது விளியாகும்.
அண்ணன் – அண்ணா, தம்பி – தம்பீ, அண்ணி – அண்ணீ, கண்ணன் – கண்ணா என்பன போன்ற உதாரணங்களைக் கூறலாம்.
அணி:
இயல்பாய் நடக்கும் ஒரு செயலில் கவிஞன் தன் கற்பனையை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி ஆகும். இதற்கு ஆசிரியர்கள் பெரிதும்
‘போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட’ என்ற சிலப்பதிகார வரியையே மேற்கோள் காட்டுவார்.
முகிலினங்கள் அலைகின்றன
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தொலைந்ததனால்
அழுதிடுமோ அது மழையோ?
என்ற திரைப்பாடலைக் கூறினால் மாணவர்களுக்குத் தற்குறிப்பேற்ற அணி வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருக்கும்.
- சொற்பொருள் பின்வருநிலை அணி – ஒரு செய்யுளில் ஒரே சொல் திரும்பத் திரும்ப ஒரே பொருளில் வருவது.
அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
உன்னைப்போல் பெண்ணல்லவோ
சின்ன சின்ன ஆசை
சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து விட்ட ஆசை
முடிவுரை:
இன்றைய தலைமுறை மாணவர்கள்
புதிய புதிய செய்திகளை நாடிச் சென்று கொண்டுள்ளனர். அவர்களிடத்து தமிழ்
மொழியின் மரபையும் மாண்பமையும் கூறி அவற்றைக் காத்திட வேண்டியதன்
இன்றியமையாமையைச் சுட்டிக்காட்ட வேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பது
போலவும், யானையால் யானை யாத்தற்று போலவும் (கும்கி யானை போல) அவர்கள்
விரும்புகின்ற வழியில் – பாதையில் சென்று அவர்களுக்குத் தமிழ் இலக்கணத்தைப்
பயிற்றுவிப்பதுதான் சாலச்சிறந்தது. அதே வேளையில் அவர்களுக்குத் தமிழ்
இலக்கணத்தில் ஈடுபாடும் புரிதலும் ஏற்பட்ட பிறகு மரபார்ந்த
எடுத்துக்காட்டுகளைக் கூறி மரபு வழி இலக்கணம் கற்றல் கற்பித்தல் முறையைப்
பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான்,
ஏடன்று கல்வி சிலர் எழுதும் பேசும்
இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும்
வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த
விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில்
என்ற கவிஞர் குலோத்துங்கனின் கவிதை வரிகள் உண்மையாகும்.