வெள்ளி, 11 நவம்பர், 2011

பேச்சுத் தமிழை வளர்ப்பதில் பள்ளி ஆசிரியர்களின் பங்கு

முனைவர் மா. தியாகராஜன்


3. பேச்சுத் தமிழை வளர்ப்பதில் பள்ளி ஆசிரியர்களின் பங்கு

முன்னுரை

இக்காலம் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் நன்கு வளர்ந்துள்ள காலம். இக்காலத்தில் பேசவும் எழுதவும் பழக்கமும்; பயிற்சியும் உடைய ஒருவர் எதையும் நினைத்தவுடன் காட்சிப்படுத்துகிறார். அதற்குப் பேச்சு வடிவம் தருகிறார். எழுத்து வடிவமும் தருகிறார். எனவே, சிந்தைனையும் வளர்ச்சியும் மொழி வழியாகவே நடக்கிறது. மொழி இல்லாமல் சிந்திக்க முடியாது. சிந்திப்பதற்கு மொழியே அடிப்படையாய் - அடிப்படைக் கருவியாய் இருக்கிறது. அந்த அடிப்படைக் கருவியான மொழி இரு வடிவங்களை உடையது என்பது தெளிவு. அவை பேச்சு வடிவம், எழுத்து வடிவம் ஆகும். பேச்சு வடிவம் முன்னது. எழுத்து வடிவம் பின்னது. பேச்சு வடிவம் இருந்தால்தான் எழுத்து வடிவம் சிறப்புறும். எனவே ஒரு மொழியின் பேச்சு வடிவத்தை - ஒருவர் தனது பேச்சுத் திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ள இயலும் என்பதையும் பேச்சுத் தமிழில் ஒரு மாணவர் எவ்வகையில் திறன் பெறலாம் என்றும் தமிழாசிரியர் எவ்வகையில் அம்மாணவர்க்கு உதவலாம் என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குழந்தைகளின் பேச்சு நிலைகள்

ஒரு குழந்தை மூன்றாவது மாதத்தில் புன்னகை புரியும். பிறர் குரலை உற்று நோக்கும். அ, உ என்று ஒலிக்கும்.

4-
ஆவது மாதத்திலிருந்து 6-ஆவது மாதத்திற்குள் சத்தமிட்டுச் சிரிக்கும். கெக்கே பிக்கே என்று சத்தமிடும்; கூச்சலிடும்.

6-
ஆவது மாதத்திலிருந்து 9-ஆவது மாதத்திற்குள் பிற ஓசைகளைத் தானும் பின்பற்ற முயலும்;. தொடர்ந்து கூச்சலிடும். நாம் பேசுவதை உற்று நோக்கித் தானும் திரும்பச் சொல்ல முனையும்.

10-
ஆவது மாதத்திலிருந்து 12-ஆவது மாதத்திற்குள் வாவா, போபோ, மாமா, காகா என்று இரண்டிரண்டு எழுத்துக்களை உடைய சொற்களைச் சேர்த்துப் பேசும். கைக் கொட்டிப் பேச முயற்சி செய்யும். பெரியவர்களுடைய பேச்சுக்கு எதிர்க்குரல் கொடுக்கும்.

12-
ஆவது மாதத்திலிருந்து 18-ஆவது மாதத்திற்குள் நடைமுறையில் இருக்கும் சொற்களுக்குப் பதிலாகத் தானாகச் சில சொற்களைப் பேசும். எடுத்துக்காட்டாகப் பால் வேண்டும் என்பதற்குப் பதிலாக இங்கா என்று சொல்லும். மேலும் பெரியவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளும்.

12-
ஆவது மாதத்திலிருந்து 24-ஆவது மாதத்திற்குள் சிறு சிறு சொற்களை இணைத்துப் பேசும். எடுத்துக்காட்டு, இது பொம்மை. என் சட்டை, மிட்டாய் வேணும். பல வினைச் சொற்களை உச்சரிக்கும். எடுத்துக்காட்டாக, போ, வா, கொடு, தூக்கு, நட, தா. இந்த நிலையில் உச்சரிப்புகள் தெளிவாகப் புரியாமல் இருக்கும். அதே சமயம் இனிமை ததும்பும் காலத்தைத் தவறாகக் கூறும். எடுத்துக்காட்டு, நாளைக்கு நீ வந்தீயா நேத்து கொடுப்பேன். நிறையச் சொற்களைப் புதிதாக அடிக்கடி உச்சரிக்கும்.

24-
ஆவது மாதத்திலிருந்து 30-ஆவது மாதத்திற்குள் சில வார்த்தைகளைத் தொடர்ந்து அடிக்கடிப் பேசும். புதிய சொற்களை நிறையப் பேசும்.

30-
ஆவது மாதத்திற்குள் சில வார்த்தைகளைத் தொடர்ந்து வாக்கியங்களைப் பேச முயலும். பேசவும் செய்யும். சில வாக்கியங்களை முழுமையாகப் பேசி முடிக்கத் தெரியாது. பெரியவர்களைப் போலவே பேசுவது வியப்பாக இருக்கும்.

பார்த்துப் பழகுதல்

பெரியவர்கள் பேசுவதை, செய்வதைப் பார்த்து, கவனித்துத் தானும் செய்வது குழ்நதைகளின் மாணவர்களின் இயல்பு ஆகும். திறமை பெற்ற ஒருவரைப் பலமுறை கவனித்துக் கற்றுக் கொள்ளும்; போது அவருடைய சிந்தனை, நடவடிக்கை ஆகியன மாணவனுக்குத் தெரிய வரும். அவற்றையே தானும் கற்றுக் கொண்டு செயல்படுத்த முனைவான். எடுத்துக்காட்டாக, ஆசிரியர் பேசுவதைப் போலவே பேச முற்படுவான். பேசுவான். ஆசிரியர் எழுதுவதைப் போலவே எழுத முற்படுவான். எழுதுவான்.

எனவே ஒரு தமிழாசிரியர் தன் மனதில் ஒன்றை உறுதியாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்;. அதாவது தன்னை - தன் பேச்சை மாணவன் பின்பற்றுகிறான். ஆதலால் தன்னுடைய பேச்சு, உச்சரிப்பு பேசும் முறை ஆகியன தெளிவாக இருக்க வேண்டும் என்று பதிய வைத்துக் கொண்டு பேசும் போது தெளிவும் சரியான முறையும் இருக்கும் வகையில் பேச வேண்டும். மாணவன் பேச்சுத் தமிழைச் சிறப்புறக் கையாள ஆசிரியர் ஊன்றுகோலாகவும் தூண்டுகோலாகவும் இருக்க வேண்டும்.

எழுதுதலும் பேசுதலும்

மொழி கற்றல் கற்பித்தலில் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய நான்கு திறன்களும் இன்றியமையாத இடம் பெறுகின்றன. இவற்றுள் கேட்டலும், படித்தலும் கொள்திறன்கள் ஆகும். பேசுதலும், எழுதுதலும் ஆக்கத் திறன்கள் ஆகும். கொள்திறன்களான கேட்டலையும், படித்தலையும், உணர்திறன்களாகவும், ஆக்கத் திறன்களான பேசுதலையும், எழுதுதலையும் உணர்த்தும் திறன்களாகவும் கருதலாம்.

தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலை என மூன்று நிலைகளிலும் மாணவர்கள் படித்தாலும் பேச்சுத் திறனில் பின் தங்கியே உள்ளனர். அதே நேரத்தில் எழுத்துத் திறனில் ஓரளவு முன்னேறி உள்ளனர். காரணம் எழுதும் போது சிந்தித்துக் கருத்தை உணர்த்த நேரமும் வாய்ப்பும் உண்டு. ஆனால் பேசும் போது உடனடியாகக் கருத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலை இருப்பதால் மாணவர்கள் தயங்குகின்றார்கள். பயமும் சொற்கோவைப் பற்றாக்குறையும் ஏனைய காரணங்கள் ஆகும். அவர்கள் தயக்கத்தைப் போக்க அதிகமான பேச்சுப் பயிற்சி தரப்படுதல் வேண்டும்.

தமிழின் இரட்டை வழக்குத் தன்மை

தமிழைப் பொறுத்த அளவில் பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இரட்டை வழக்குகளை உடையது. எழுத்து மொழிக்கும், பேச்சு மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மொழி கற்பித்தலில் அதிக செல்வாக்கும் செலுத்துகின்றன. இவை தொடர்பான மொழியியல் உளவியல், சமூகவியல் அம்சங்கள் நமது மொழி கற்பித்தலில் அறிவியல் ரீதியாக நோக்குவது இல்லை.

ஆரம்ப வகுப்புகளில் தமிழ் கற்பித்தலைப் பொறுத்தவரை இவை மிகவும் முக்கியமானவை ஆகும். பேச்சுத் தமிழ் தரம் குறைந்தது. கொச்சையானது. இலக்கணம் அற்றது. எழுத்துத் தமிழே செம்மையானது. உயர்ந்தது. இலக்கணம் உடையது என்ற பொதுவான மனப்பாங்கே நமது மொழிக் கல்வியாளர்களிடம் நிலவுகிறது. இதனால் மாணவர்கள் கிளைமொழிப் பழக்கத்தை முற்றிலும் களைந்துவிட்டு எழுத்துத் தமிழில் அவர்களைப் பேசவும் எழுதவும் பயிற்றுதல் வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் வெவ்வேறு கிளை மொழிகளைப் பேசுவவோருக்கு எழுத்துத் தமிழைக் கற்பிப்பதில் உள்ள பிரச்சனைகளுக்கும் சபையான தீர்வு காண முடியவில்லை. பிரச்சனைகள் இருப்பதாக உணரப்படவில்லை. எனவே, கிளை மொழிப் பழக்கத்தை, புழக்கத்தை அறவே களைய வேண்டும் என எண்ணுவது அறிவீனமாகும். ஆதலின், கிளை மொழிகளை இணைத்தே பேச்சுத் தமிழை வளர்க்க வேண்டும். மாணவர்களுக்குக் கற்றுத் தருதல் வேண்டும்.

தமிழில் உரையாடல்

தமிழாசிரியர்கள் வீட்டிலும் பிற இடங்களிலும் தனித் தமிழில் ( பேச்சுத் தமிழில்) உரையாட வேண்டும். இதனை நோக்கும் எத்தனையோ குழந்தைகள் அவரைப் பின்பற்ற வாய்ப்பு உள்ளது. பள்ளிகளில் மாணவர்களை உரையாடவிட்டு, அந்த உரையாடலில் காணப்படும் உச்சரிப்புப் பிழைகள், ஆங்கிலம் போன்ற அயல்மொழிச் சொற்களைக் களையலாம். - பேச்சுத் தமிழை வளப்படுத்தலாம்.

பேச்சுப் போட்டி போன்றவற்றை வகுப்பறை அளவில், சுருக்கமான முறையில் அடிக்கடி நடத்தி பேச்சுத் தமிழில் பேசக் கற்றுக் கொடுக்கலாம். பேசுந்திறனை வளர்க்கலாம். எழுத்துத் தமிழில் பேசுவதுதான் தமிழ்ச் சொற்பொழிவு என்ற எண்ணத்தைப் போக்கி மற்றவர்க்கு கேட்பவர்க்குப் புரியும் வகையில் பேசுவதே சிறப்பு என்பதை உணர்த்தலாம்.

மழலைக் குழந்தைகளிடையே படம் பார்த்துக் கதை சொல்லச் செய்யலாம்.

எ-டு காகமும் நரியும், சிங்கமும் சுண்டெலியும் என பேச்சுத் தமிழிலேயே சொல்லச் செய்யலாம்.

உச்சரிப்பும் நாநெகிழ் பயிற்சியும்

பேச்சுத் தமிழைக் கற்பிக்கும் பொழுது உச்சரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துதல் வேண்டும். தமிழின் சிறப்பே உச்சரிப்பின் உள்ளடக்கம் ஆகும். குறிப்பாக ல, , ழ ஆகியவற்றை முறையாகக் கையாள வேண்டும் - முறையாக உச்சரிக்க வேண்டும். இல்லையெனில் பொருளே உச்சரிக்க வேண்டும். இல்லையெனில் பொருளே மாறுபட்டு விடும். குறிப்பாக ழகரத்தைச் சரியாகப் பயன்படுத்தப் பழக்க வேண்டும்.

பழம் கொண்டார் என்பதைப் பலம் கொண்டார் என்றால் பொருள் மாறுவிடும். அத்தோடு வாக்கியமும் மாறிவிடும். எனவே பேச்சுத் தமிழைக் கற்பிக்கும் பொழுது உச்சரிப்புக்கு உரிய இடம் தர வேண்டும்.

இதற்கு நாநெகிழ் பயிற்சியும் தரலாம். இதற்கு கீழ் கண்ட பாடலைப் போன்ற படைப்புகள் பெரிதும் கை கொடுக்கும்.

ஓடுற நரியில ஒருநரி கிழநரி
கிழநரி முதுகில ஒருபிடி நரைமயிர்

அவ்வப்போது நகைச்சுவைத் துணுக்குகளையும், பேச்சுத் தமிழில் கூறச் செய்யலாம். இதனால் சலிப்பு ஏற்பட்டது. ஆர்வம் கூடும்.

முதல் வகுப்பில் பேச்சுத் தமிழைக் கற்பித்தல்

1. எளிய சொற்றொடர்களைத் திரும்பத் திரும்ப மாணவர்களைச் சொல்லச் செய்தல்

2.
எளிய பாடல்களைத் திரும்பத் திரும்பச் சொல்லச் செய்தல், குழுவாகவும் சொல்லச் செய்தல்

3.
பாடல்களை உரிய செய்கைகளுடனும் (நடித்தல்) உடல் அசைவுகளுடனும் ஒப்புவிக்கும். திறனை வளர்த்தல்

4.
ஆம் அல்லது இல்லை என்று பதில் வருமாறு எளிய வினாக்களுக்கு விடை கூறும் திறனை வளர்க்கும் வகையில் கற்பிக்க வேண்டும்.
இரண்டாவது வகுப்பில் வந்து ஐந்தாவது வகுப்பு வரை பேச்சுத் தமிழைக் கற்பித்தல்

நாடக உரையாடல்கள் போல் பாடல்களை அமைத்து ஆசரியர் நன்கு பேசி, நடித்துக் காட்டி, பின்னர் மாணவர்களைப் பேசி நடிக்கச் செய்ய வேண்டும்.

உரையாடல்களை அமைக்கும் போது எழுத்துத் தமிழில் அடைக்காமல் பேச்சுத் தமிழ்த் திறனை வளர்க்கலாம். பேச்சுத் தமிழையும் வளர்க்கலாம்.

எடுத்துக்காட்டாக,

''
சாலையில் மையத்தில் நடக்காதே!என்பதை இன்று எல்லோரும் குறிப்பாக மாணவர்கள் ''ரோட்ல சைன்ட்ரல்ல நடக்காத‘‘ என்று பேசுகிறார்கள்.

சாலையில் மையத்தில் நடக்காதேஎன்று எழுத்துத் தமிழில் பேச வேண்டும் என்பது பொருள் அல்ல.

சாலையில் மையத்தில் நடக்காத!என்று பேச்சுத் தமிழில் கலப்பின்றுப் பேசுவதே ஆகும்.

எனவே, ஆசிரியர் முதலில் கலப்பின்றிப் பேசி மாணவர்களையும் அது போலவே பேசப் பழகுவது சிறப்பாகும். மேலும் இது தமிழுக்கு அந்த ஆசிரியர் செய்த பெருந்தொண்டும் ஆகும்.

ஆங்கிலத் தாக்கம்

பேச்சுத் தமிழை வளர்ப்பதில் பெரிய இடர்பாடு என்னவென்றால் ஆங்கிலத் தாக்கமே ஆகும். உண்மையில் இன்றையப் பேச்சுத் தமிழ், தனித் தமிழாக இல்லை. ஆங்கிலமும் தமிழும் கலந்த ஒரு கலப்பு மொழியாகவே உள்ளது. இதற்குக் காரணங்கள்

1.
ஆங்கில ஆட்சியினால் ஏற்பட்ட விளைவு என்பது தெளிவு

2.
படித்தவர்கள் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதுதான் தங்களுக்கு மதிப்பு (கெளரவம்) எனக் கருதி ஆங்கிலச் சொற்களைக் கலந்து கலந்து பேசியது.

3.
படிக்காதவர்களும் இவர்களுடன் பழகிப் பழகி ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசியது, பேசுவது.

4.
இதனால் தமிழ் இன்று ஒரு கலப்பு மொழி ஆகிவிட்டது கவலைக்குரியதே.

இதனால் ஆங்கிலத்தைக் களைந்து தமிழைத் தனித் தமிழாக்க வேண்டியது தமிழாசிரியர்களுடைய கடமை ஆகும். முதலில் தமிழாசிரியர்கள் பேசும் பொழுது தனித் தமிழில் பேச வேண்டும். இதற்காக எழுத்துத் தமிழில் பேச வேண்டும் என்பது பொருள் அல்ல. பேச்சுத் தமிழிலேயே கலப்பின்றிப் பேசுவதாகும்.

முடிவுரை

தமிழ் மொழியில் எழுதுவது போல் ஒலிப்பது பேசுவது இல்லை. ஒலிப்பது போல் பேசுவது போல் எழுதுவது இல்லை. க, , , , ப போன்ற எழுத்துகளை எழுதும் போது ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரே ஒலியை மட்டும் எழுதுகிறோம். உச்சரிக்கும் போது வெவ்வேறாக உச்சரிக்கிறோம். இத்தகைய வேறுபாட்டை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்துதல் வேண்டும்.

எடுத்துக்காட்டாக, கப்பல், சிங்கப்பூர், முகப்பு போன்ற சொற்களில் உள்ள க, கர வேறுபாடுகள் சூழ்நிலையால் தோன்றுகின்றன என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். இந்த வகையில் எல்லாம் பேச்சுத் தமிழைப் பள்ளகளில் வளர்க்கலாம்.

பார்வை நூல்கள் விவரம்

1.தமிழ் பயிற்றும் முறை, டாக்டர் ந.சுப்பு ரெட்டியார், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, சிதம்பரம், டிசம்பர்’2000.

2.
நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, 2002.

3.
கார்த்திகேயன் கம்பெனி, (1970), கற்பித்தல் பொது முறைகள், ஏசியன் பிரிண்டர்ஸ், சென்னை.

4. Skinner, B.F., (1967), “A Functional Analysis Of Verbal Behaviour”.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக