அன்று விடாது மழை பெய்து கொண்டிருந்தது. சுகுணா வாழ்க்கையில் தான் கடந்து
வந்த பாதையை மெல்ல சுழற்றிக் கொண்டிருந்தாள். யாருக்காக வாழ்கிறோம் என்ற நினைவு
பலமுறை சுழன்று கொண்டிருக்க, வானொலியில் அவள் மனதுக்குப் பிடித்த காற்றினிலே வரும்
கீதம் வந்ததை இரசித்துக் கேட்டு மெய்மறந்திருந்தாள். பாட்டு பாடியவர் வரலாற்றை
யாரும் யோசிக்கறதில்ல.....அவங்க எப்படி வாழறாங்கன்னு மட்டும்தான் இந்த உலகம் பாக்கறது..........என
யோசித்தபடி இருந்தாள்.
வழக்கம்போல அவளருகில் ஒரு பல்லி அவளைச் சுற்றிக் கொண்டிருந்தது. ஏன்
என்று அவளுக்குப் புரிபடவில்லை. அன்று கட்டிலில் தூங்கும்போதும், அது வந்திருந்தது.
வீடு மாற்றியும் அந்தப் பிரச்னை.
கடிகார முள்ளிலிருந்து வந்த டக் டக்கென்ற ஓசை கூட அவள் அம்மாவின்
சிரிப்பாய் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நேற்று நூலகத்தில் படித்த செய்தி குறித்து அவள் முன்னரே பலசமயம் அவள்
பலருடன் விவாதித்திருக்கிறாள். ஆனால், அவள் தன் வாழ்க்கைக்கு ஒத்து வரும் எனக்
கனவிலும் நினைக்கவில்லை.
கனவு மறைந்து விடும். ஆனால் நடந்து முடிந்தவை அவள் வாழ்க்கைப் பாதையை
மாற்றி விட்டது. அந்த இடத்திற்குச் சென்று பார்த்து விடுவது என முடிவு செய்து
சன்னலோரத்தில் மழைத்தண்ணீரில் தான் செய்து விட்ட காகிதக்கப்பல் தண்ணீரில் மூழ்கி
விட்டதை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டாள். ஊஞ்சல் ஆசையினால் அவள் வாங்கி
வைத்திருந்த கூடை ஊஞ்சல் அவள் மனதைப் போல காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. குழந்தை
இல்லாதவர்களுக்கு மறு பிறவி கிடையாதாம் எனச் சிரித்த கணவனின் முகத்தைக் கவலையுடன் பார்த்த
ஞாபகம் அவள் மனதை வதைத்தது. மறுபிறவி குறித்துத் தான் படித்தவற்றை நினைத்துப்
பார்த்தாள்.
கடமை ஒவ்வொரு விதங்களிலும் இருப்பதை அவள் நிறைவேற்றிக் கொண்டிருந்ததை
டைரியை வைத்துச் சரி பார்த்தாள். முடிக்க வேண்டியவை இன்னமும் இரண்டு மட்டுமே என
மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். மழைத்
தண்ணீரில் குளித்த காக்கைகள் இரைக்காக அலைந்து ஏங்குவதைப் பார்த்தபடி உள்தட்டில்
இருந்த பிஸ்கட்டை எடுத்து வீசினாள். பறந்து வந்த அடுத்த காக்கையை விரட்டி
பிஸ்கட்டை அலகில் திணித்துக் கொண்டேயிருந்த அந்த காக்கையை வினோதமாக உற்றுப்
பார்த்தாள். காக்கையும் மனிதனைப் போல மாறிவிட்டதா என்ன? என நினைத்தாள்.
மீதி இருந்த பிஸ்கட் பாக்கெட்டை ஹேண்ட்பாகில் திணித்தாள். 50 வயதில்
இதெல்லாம் தேவையா? என்று கூடச் சிந்தனை எழுந்தது. ஆனால் பார்த்து விடுவோம் என மனம்
கூக்குரலிட்டது. கண்ணாடியில் சித்தப்பா பார்த்தால் கவலைப் படுவார் என மறைத்த
ஹேர்டை தலையை அழுத்தமாக வாரிப் பின்னலிட்டாள். இரண்டு வருடங்களுக்குள் ஹூம்!
என்னென்ன மாறுதல்! மனம் கவலையில் ஒருநிலையில் இல்லை. இப்பல்லாம் சித்தப்பா சாப்பிட்டுக்கறார். முன்னாடியெல்லாம் அப்பிடி இல்லை. அப்பாவிற்காக என வைத்த
மல்லிகைப்பூ எடுக்க ஆளின்றி தோட்டத்தை மணக்கச் செய்து கொண்டிருந்தது. இருட்டி
விட்டால் பஸ் இருக்குமோ! என்னவோ தெரியவில்லையே! கணவன் நேற்று ஸ்கைப்பில் பேசியபோதுகூடச்
சொல்லவில்லை. ப்ச்! அவருக்கு இது புரியாது. அவருலகம் தனி.கம்ப்யூட்டர், யுஎஸ் என
அட்லஸில் உள்ள அத்தனை நாட்டிற்கும் செல்பவருக்கு மனைவியிடம் உட்கார்ந்து பேச நேரம்
கிடையாது. அவ்வளவு பிசி.
தெரியாத ஊர் தான் பார்க்காத இடம் தான். இருந்தாலும் அப்பா சொன்ன
குறிப்பும், கனவில் வந்த நினைவும் அவளைப் பஸ் ஸ்டேண்டிற்கு வர வைத்தது. எப்படியும்
அந்த இடத்தைப் பார்த்து விடுவோம் என முடிவு செய்து ஞெமிலிப்பட்டினம் போற பஸ் எது?
எனக் கேட்டு அமர்ந்தாள். அது தாங்க முடியற இடம் எனக் கூறிய கண்டக்டரைத் திரும்ப
ஒருமுறை பார்த்து மனதிற்கு ஏதோ புரிவது போல் தெரிந்தது. சின்னச்சின்ன பாண்டில்
மண்ணைச் சுமந்து வீட்டிற்குள் கொண்டு சேர்த்தது ஏனோ நினைவுக்கு வந்தது. எதற்கும்
ஒருமுறை செக் புக் இருக்கிறதா எனச் சோதித்துக் கொண்டாள். அட்வான்ஸ் கொடுத்து எப்படியும்
வாங்கி விடுவது என முடிவு செய்தாள். யாருமே இல்லாமல் தனிமரமாகி விட்ட தனது நிலை
குறித்து அவள் என்றுமே வருத்தப்பட்டது கிடையாது. பெற்றோரும்,உடன் பிறந்தோரும்
ஒருவர் பின் ஒருவராக இறந்தபோது கூட அவள் அழவில்லை. படிப்பு அவளுக்கு இழப்புகளைச்
சரிக்கட்டக் கற்றுத் தந்திருந்தது. யாருக்கும் சுமையாகக்கூடாது என்பதில் அவள் கவனமாக
இத்தனை வருடமாக வாழ்ந்து முடித்து விட்டாள். பஸ்ஸில் கர்ப்பிணி ஒருவள் வளையல்கள்
அடுக்கியிருந்ததை அழகாக ரசித்தாள். அப்பா உனக்காக வளையல் போடணுமேன்னு வாங்கி வச்சிருக்காரும்மா!
நீ போனதுக்கப்புறம் கடைக்கே போறதில்ல! நீ போட்ட வளையெல்லாம் அதோ
கூடையில் கிடக்குது. எடுத்துட்டுப் போய்டு........கனவினில் கூறியதுபோல அவளுக்குத்
தோன்றியது. திருமணத்திற்குப் பிறகு அவள் கண்ணாடி வளையலே அணிவதில்லை என
அவர்களுக்குப் பாவம் தெரியாது. மனசு சந்தோஷமா இருக்கறதை மட்டும்தான் யாரிடமும்
பகிர்ந்துக்கணும். துக்கத்தை பெரியப்பா கிட்ட மட்டும் தான் என குழந்தை உள்ளம் மனதிற்குள்
அழுதது.
அப்பா வாங்கி வச்ச வளையல் போட மனமின்றி லாக்கரில் தூங்குகிறது.
சே! கண்களை மூடினாலும் பழைய ஞாபகம். எழுத்தாளரிடம் பேட்டி கண்டபோது
அவர் சொன்னாரே! வயதான பிறகுதாம்மா சின்னவயது ஞாபகம் வந்து பாடாய்ப் படுத்தும்னு!
இப்பத்தான் உணர்றேன். ஞெமிலிப்பட்டினம் வந்துடுச்சா! அதற்குள்ளாகவா! எனக் கண்ணைத்
திறந்தாள். ஒரு வெளிநாட்டுத் தம்பதி இறங்கிச் செல்வதைப் பார்த்தாள். கண்டக்டரிடம்
ஞெமிலிப்பட்டினம் வந்துடுச்சா! என்றாள். இல்லம்மா! அவர்கள் ஏதோ அனாதை ஆஸ்ரம் போக
வேண்டுமாம்! ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி இருக்கு! நடந்தே போறாங்க என்ற கண்டக்டரை
வெறித்து நோக்கினாள். ரோடில் மடிசார் மாமி டூவீலரில் வேகமாகச்
செல்வதை வெறித்தாள். வண்டியில் பத்மாவதி என்று எழுதியிருந்தது மின்னல்போல் பளிச்செனத் தெரிந்தது. ரோல் மாடல் ஆசிரியர்கள் அவள் நினைவுக்கு வந்தது.சாதி மதங்களைப் பாராத ஆசிரியர்களை ஏனோ அவள் மனம் அப்போது நினைத்தது. நாங்கள்லாம் பெரியவங்களாகி ரிட்டயர்டாயிட்டோம். இனி நீங்கதான் வழிநடத்துவீர்கள் என சிரித்தபடி சொன்ன விலங்கியல் அழகுதேவதையின் குழந்தை போன்று என் மடியில் போட்ட ரோஸ் கலர் கவுன் குழந்தை நினைவுக்கு வந்து சென்றது.
இந்நேரம் குழந்தை பெரிய பெண்ணாகி திருமணம் செய்து கொடுத்திருப்பார்கள். யார்
வீட்டிற்குச் சென்றதோ! தெய்வம் தந்த பூவே! என்றா பாடித் தேடவா முடியும். எனக்கு
ஒண்ணு! பொது நலத்துக்குன்னு ஒண்ணு போதுண்டா! எனச் சொன்ன கணவனின் நாட்டுநலம் அவளை
அவன்பால் கொண்டு சென்றது. இருவரின் கருத்துகளும் ஏன் ஒரே போல் உள்ளது. ஆனால்,
நமக்குக் கொஞ்சம் தைரியம் ஜாஸ்தி! அவருக்கு அது போறாது! அப்பவே அவனை பளார்னு ரெண்டு
அறை அவர் விட்டிருக்கணும். அவன் வழிக்குப் போகக் கூடாதுன்னு தான் தள்ளி நின்னேன்.
வம்பு பண்ணி அவரை வண்டில ஏத்திட்டான். எதுக்காக அப்பிடி செஞ்சான். பிடிச்சுத்
தள்ளியிருந்தா இவர் அம்மாவுக்கு யார் பதில் சொல்வா! கேட்டதற்கு அவருக்கு காக்கா
வலிப்பாம்! பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு கிடையாது. நீ ஏண்டா அவனை வண்டில ஏத்தின! என்று சொன்ன மனைவி போலீஸின் கன்னத்தில்
பளாரென அறையலாம் போல இருந்தது. சேது மனைவி வக்கீல் சொன்னது போல கம்ளெய்ண்ட்
பண்ணியிருக்கணும்.இந்த சேது இருக்கானே! ஊரு விட்டு வந்திருக்கோம்னு உணர்வே கிடையாது. எவ்வளவு திமிருன்னு அருணாவும், அவனும் பண்ணதுக்கு...........வசந்த முல்லை போலே வந்து அசைந்தாடும் வெண்ணிலாவே.........யாரோ பாடிக் கொண்டே சென்றதைப் பால்கனியிலிருந்து பார்த்தாள். இவனையெல்லாம் உள்ளே வச்சிருக்காங்க பாரு அவங்களச் சொல்லணும். இதுல வேற பத்திரப் பொறுப்பு வேறு............தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்.யாரு நல்லவன்னு தேடுனா ஒருத்தன்கூட மிஞ்ச மாட்டான். புத்தர்சொன்ன கடுகு கதையாயிடும்னு நாடகம் பசங்க நடிச்சுட்டு இருந்ததைப் பால்கனில யாரோ பார்ப்பது போல ஒரு உணர்வு. அன்னைக்கும் இதே போலத் தான். திரும்பிப் பாத்தா
ஸ்கிரீன் மட்டுமே ஆடும். என் வாழ்க்கைப் பாதையே மாறியிருக்காது. இருட்டுல அவன்
எதுக்காக நைட் லைட்டெல்லாம் ஆஃப் செஞ்சுட்டு நிக்கறான். யாருக்காக நிக்கறான்? மேல்
மாடியிலும் யாருமில்ல. பல தடவை சொல்லியாச்சு. அன்னைக்கு நைட் தான் அதை நான்
கண்டுபிடிச்சேன். மறுநாள் சித்தப்பாகிட்டயும் போகலை. எப்படியெல்லாம் மாத்தி பிளான்
செஞ்சான் ராஸ்கல். கள்ளநோட்டு,பிராத்தல்,புலிமுகமூடி வேற......... வீட்டை விட்டுப்
போய்டுவோம்னு பதிலிறுத்த கணவனின் முகத்தை வெறித்துப் பார்த்தாள். அப்போ நான் பட்ட
வேதனை......... நீ பொண்ணு.......யாருக்கு அசிங்கம். வாயை பேசாம மூடிக்கோ. நான்
உன்னை எதுவும் நினைக்கல. படித்த பொண்ணு தானே நீ...... படித்த பட்டங்கள் கழிவுநீர்த்
தண்ணீர்குழாயில் அடைபட்ட குப்பையாய்த் தோன்றியது அவளுக்கு.குழந்தை குறித்துப்
பலரும் பேசி எல்லார் வாயையும் அடைத்த அவள் நெஞ்சம் ஆசைப்பட்ட குறிக்கோளை எட்டிய
சந்தோஷத்தைக் கண்ணாடித் துகளாய் மாற்றியது. கஷ்டப்பட்டு வாங்கிய பணி, அதனால்
வாழ்க்கையில் குழப்பங்கள்! 2 வருடங்களாய் மாறுதல்கள்! ஞெமிலிப் பட்டினம் வந்துடுச்சும்மா!
இறங்கிக்கிறீங்களா! கண்டக்டர் குரலுக்கு பதினைந்து வருடக் கனவிலிருந்து வெளியில்
வந்தாள். இறங்கி வந்தவளுக்கு ஏதோ ஊர் மிகவும் பரிச்சயமான ஒன்றாகத் தென்பட்டது. அதோ!
ஒரு கோவில். அப்படியே நடந்து போனால் என்ன... எனத் தோன்றியது. கால்கள் நேராக ஒரு
கடையில் பேப்பர் வாங்க நின்றது எதிரே இருந்த அவர்கள் வீடு என்பதை அறியாமலேயே. இந்த
ஊருக்குப் புதுசாம்மா......
இல்ல..... இந்த ஊருல இடம் இருக்கான்னு பாக்க வந்தேன்.
ப்ச்.....தோ தெரியுதே.... எதுத்தாப்ல இருக்கற வீடு, கடை அது கூட 4
வருஷத்துக்கு முன்னாடி தான் வித்தாங்க. நீங்க வேணும்னா பாருங்க.
கொடுக்கறாங்களான்னு....
கொடுக்கறாங்களான்னு தெரியல.....என்று முணுமுணுத்தார்.
கடை என்றதும் வேகமாகச் சென்று அந்தக் கடையில் மோர் கொடுங்க! எனக்
கேட்டுக் குடித்தாள். கடையில் 3 குழந்தைகள் அமர்ந்து வியாபாரம் பார்த்துக்
கொண்டிருப்பதைப் பார்த்தாள். சுற்றி என்ன அந்தக் குழந்தைகள் செய்தன என்பதையும்
பார்த்தாள். ஹேண்ட்பேகிலிருந்த செக் காணாமல் போய் விட்டதாக நினைத்துக் கொண்டு வீட்டைச்
சுற்றி வந்தாள். உரிந்து போன செங்கல் கட்டிடத்தையும், தான் உட்கார்ந்து விளையாடிய
சன்னல் ஓரத்து ஊஞ்சல் இருந்த இடத்தையும், வானத்து சூரியன் புதராய் வளர்ந்த
புல்லுக்கு அறிவொளி கொடுத்துக் கொண்டிருந்ததையும் பார்த்தபடி நடந்தாள். காலில் ஏதோ இடறியது. அவள் தூக்கிச்
சுமந்த தம்பி விளையாடிய மாக்கல் செப்புச் சாமானாய் அவள் கலங்கிய கண்ணில் தெரிந்தது.
எடுக்க மனம் கட்டளையிட்டாலும், இது இன்று வேறொருவருடையது எனத் தோன்றிய மனதின்
மறுபக்கத்தினை அவள் மிகவும் மதித்தாள். எலும்புக்கூடாய் அவள் தந்தையின் உடல்
போன்று இடிந்து போய் கட்டிடம் இருந்ததை மொபைலில் படம் பிடித்தாள்.
பஸ் ஸ்டேண்ட் நோக்கி வேகமாக நடைபோட்டாள். என்னம்மா! விலை எவ்வளவுன்னு
கேட்டீங்க! பேசுங்கன்னு சொன்னேன். ஆனா கிளம்பிட்டீங்க! அந்தக் கடையில மாணவர்கள்
இருக்காங்க! ரெண்டும் பொண்ணு! நான் வாங்கிட்டன்னா கஷ்டம்! நாங்களும் பிஸினஸ்
பண்ணவங்க தான். இன்னைக்குப் படிச்சதால புனிதமான ஆசிரியத்துறைல இருக்கேன். எனக்கு
வேணும்கறதுனால யாருடைய வாழ்க்கையும் பாழாக்கக்கூடாது. கடைய மாத்தறது எவ்வளவு
கஷ்டம்னு எனக்குத் தெரியும். அதோ பஸ் வந்துடுச்சு! நான் வர்றேன்னு கிளம்பியவளை
வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த முதியவர்.
வினா
1. கதையின் கதாபாத்திரம் குறித்துத் திறனாய்வு செய்க.
2. கதையின் நடை குறித்து விளக்குக.
3. ஆசிரியர் இக்கதையில் பயன்படுத்திய உத்தி குறித்து விளக்குக.
4. கதைக்குத் தகுந்த தலைப்பினை எழுதுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக