செவ்வாய், 20 நவம்பர், 2012

அறிவு.



அறிவு - அறியாமை

இவை அறிவின் அமைப்புநிலைப் பகுப்பு. இவை இரண்டுமே அமைந்த இயல்புகள்ளவையே உயிர்கள் ஆகும். அவற்றுக்கு, முற்றறிவு இல்லை. ஆனால் சிற்றறிவு உண்டு.

:: அறிவு

தன்னுணர்வும் செயற்பாடும் விளக்கமுறுகின்ற நிலை.

:: அறியாமை

தன்னுணர்வும் செயற்பாடும் விளக்கமுறாத தெரியாநிலை.


2. அறிவு - பகுத்தறிவு - மெய்யறிவு - வாலறிவு

2.1 அறிவு

ஒருவர் அல்லது ஓர் உயிரானது தான் எனத் தனியாக ஒன்று இருப்பதை உணரப் பெறும்நிலை. ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையில் உள்ள பொறிபுலன்கள் வழியான தன்னுயிர், தான் என்று பற்றுடன் இருக்கும் நிலை. இதனைத் தன்னைத்தான் காதலன் ஆகிய நிலை என்பர் திருவள்ளுவர். இது ஐயுணர்வு அமைந்த புலனறிவு நிலை.

2.2 பகுத்தறிவு

தனக்கு ஏற்படுவனவற்றிலும் தான் ஏற்படுவற்றிலும் ஏற்படக் கூடிய நன்மைதீமைகளை பிரித்தரியும் அறிவின் செயல்நிலை வழங்கும் அறிவுநிலை. இது எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் அறிவுநிலை.

2.3 மெய்யறிவு

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்பொருள் காணும் ஐயமும் திரிபும் இல்லாத அறிவுநிலை. ஆரா(நிறைவு அடையாத) இயற்கை ( இயல்பு) கொண்ட அவாவை நீத்த முத்திநிலையில் விளங்கும் அரிவு நிலை. பொய்தீர் ஒழுக்கநெறி நின்று பொறிவாயில் ஐந்தவித்த மெய்யுணர்வு நிலை.

2.4 வாலறிவு

இறைவனுக்கும் தானும் என்று தனித்தனியாக வேறுபட சுட்டி அறியாமல் தான் அவன் ஆனநிலை. பேரா இயற்கை எய்திய சித்திநிலையில் விளங்கும் அறிவு நிலை. பேரறிவுப் பெருநிலை.

3. ஐம்பொறிவழி அமைந்த புலன் அறிவுகள்

உலகின் எல்லாவகை உயிர்களும் புலனறிவு கொண்டவையே. புலனறிவு என்பது ஓரறிவு முதல் ஆறறிவுவரை உள்ளது. இது அறிவின் பொறிபுலன் வழியான இயங்குநிலைப் பகுப்பு.

3.1ஓரறிவு

இது மெய்யாகிய பொறிவழி அறிய வரும் ஊறு-தொடுதலறிவு எனும் அறிவு. தொடுதலறிவு உள்ளவை புல், மரம், செடி, கொடி முதலியவை.

3.2 ஈரறிவு

வாய் எனும் பொறிவழி அறிவதாகிய சுவை என்னும் புலன். மெய், வாய் ஆகியவற்றின்வழி ஊரு,சுவை என்ற இரண்டுவகை அறிவுள்ள புழு, நத்தை, சங்கு, சிப்பி முதலியவை.

3.3 மூவறிவு

மூக்கு என்னும் பொறிவழி புலப்படும் மணம் அல்லது நாற்றம் எனும் அறிவு அல்லது புலன். எறும்பு, கறையான், பூச்சிகள் முதலியவை மெய்,வாய்,மூக்கு எனும் பொறிகள் வழி ஊறு,சுவை, மணம் என்னும் மூவகை அறிவுள்ள உயிர்களிற் சிலவாகும்.

3.4 நாலறிவு

கண் எனும் பொறிவழி புலப்படும் காணுதல்- ஒளி என்னும் அறிவு. நண்டு,தும்பி, பாம்பு முதலியவை மெய்,வாய்,மூக்கு, கண் எனும் பொறிகள்வழி ஊறு, சுவை, நாற்றம், ஒளி எனும் நால்வகை அறிவும் பெற்ற உயிர்களிற் சிலவாகும்.

3.5 ஐயறிவு

செவி அதாவது காது எனும் பொறிவழி புலப்படும் ஓசை என்னும் அறிவு. பறவை, விலங்குகள் முதலியவை மெய்,வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் வழி ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை எனும் ஐந்தறிவும் பெற்ற உயிர்களாகும்.

3.6 ஆறறிவு

மனம் எனும் அகக்கருவி வழியாக நல்லதுகெட்டது பிரித்தறியும் பகுத்தறிவு உடைமையே ஆறாவது அறிவு. இதுதான் ஆறாவது புலன். இதைப் பெற்றிருந்தும் பயன்படுத்தாதவர்கள் மக்கள் உருவில் இருக்கும் விலங்குநிலையினரே ஆவர். இந்த ஆறாம் புலனைப் பயன்படுத்தி அல்லவை நீக்கி நல்லவை ஆக்கி வாழ்பவரே மக்கள் எனப்படுவர். அல்லாத பிறர் அனைவரும் மாக்கள் (விலங்குகள்) எனப்படுவர்.

மரபுவழிப் பொருள்மறை தொல்காப்பியம் காட்டும் உயிரறிவு வகை

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
புல்லும் மரனும் ஓரறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

நந்தும் முரளும் ஈரறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

சிதலும் எறும்பும் மூவறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

நண்டும் தும்பியும் நான்கறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

மாவும் புள்ளும் ஐயறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

மக்கள் தாமே ஆறறி வுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

ஒருசார் விலங்கும் உளவென மொழிப.

ஓரறிவு முதலாக ஆறறிவு ஈறாக இதுவரையிலும் எடுத்துக் காட்டப்பெற்ற செய்திகள் அனத்தும் மேலே காணப்படும் நூற்பாக்களின் விரிவாக்கங்களாகும். இந்த அறிவியல் அறிவு தொல்காப்பியர்க்கும் முற்பட்ட பழந்தமிழ்ச் சான்றோர்களால் வரையறை செய்யப்பட்டதாகும்.

தமிழ்நெறியில் உயிர்களை வகைப்படுத்தும் நெறிக்கு அளவுமுறை எனப்படுவது யாதெனில், அது அவற்றிடம் இருந்து இயங்குகின்ற அறிவு ஆற்றல்களேயாகும். அறிவோடுதான் எல்லாவுர்களும் இருக்கின்றன. அறிவில்லாத உயிரே கிடையாது.

4. ஆறறிவில் மூவகை அறிவு.

4.1 காரறிவு - ஒளியறிவு - வெள்ளறிவு என்பவை அறிவின் பண்புநிலைப் பகுப்பு.

4.1.1 காரறிவு

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்றாகச் சூதும் சூழ்ச்சியும் கெடும்பும் கொடும்பும் ஏற்படுத்தும் கரவுசெய்து நன்னெறிக்கு மாறாகப் புன்னெறி புகுந்து இயங்கும் அறிவின் தன்மை.

4.1.2 ஒளியறிவு

உள்ளும் புறம்பும் வாய்மையும் தூய்மையும் நிரம்பப்பெற்று இறை அன்பும் அச்சமும் கொண்டு உறவு செய்து நன்னெறிக்கும் உக்கும் வண்ணம் நடுநிலையாக அமைந்து இயங்கும் அறிவின் தன்மை. இது ஒண்மை எனவும் சொல்லப்படும். ஒண்மை உடையவர் ஒளியார்-ஒள்ளியர் எனப்படுவர். நல்லோரால் அந்த ஒளி தொழுது ஏத்தப்படும்.

4.1.3 வெள்ளறிவு

காரறிவின் கள்ளம் கவடுக்கும், ஒளியறிவின் நேர்மைத்திறத்துக்கும் அப்பால் மூன்றாவது வகை அறிவு ஒன்றும் உள்ளது. அது சூதுவாது சூழ்ச்சிகள் புரியாதது; உலகநடப்பு விளங்காதது; கள்ளம் கவடுகள் இல்லாதது அதுவே வெண்மை எனப் படும் வெள்ளறிவு.

5. பட்டறிவு- நுகர்வறிவு

மேற்கூறிய காரறிவு - ஒளியறிவு - வெள்ளறிவு ஆகிய மூவகை அறிவினர்க்கும் அவரவர்தம் அறிவுவழி முயற்சிகளின் நுகர்வு நிலையில் ஏற்படும் இன்பதுன்பங்களில் பட்டுப்பெறும் அறிவு. இதனை நுகர்வம்(அனுபவம்) என்பர்.

6. சிற்றறிவு - பேறறிவு
இவை அறிவின் அடைவுநிலைப் பகுப்பு. பேரறிவு முற்றறிவு, மூதறிவு எனவும் கூறப்படும்

6.1 சிற்றறிவு

ஓர் எல்லைக்கு அல்லது சூழ்நிலைக்கு உட்பட்ட அறிவும் பகுத்தறிவும் இப்பிரிவில் அடங்கும்.

6.2 பேரறிவு

எந்த ஓர் எல்லைக்குள்ளும் அல்லது சூழ்நிலைக்குள்ளும் கட்டுப்படாத மெய்யறிவும் வாலறிவும் இப்பிரிவில் அடங்கும்.

7. சுட்டறிவு

ஒருநேரத்தில் ஒன்றையே குறித்து விளங்கிக் கொள்ளக்கூடிய அறிவின் அளவுபட்டுநிற்கும் செயல்நிலைப் பகுப்பு. இது ஒரு சூழல் வரம்புக்குள் கட்டுப்பட்டுள்ள அறிவுநிலை. இது இன்னது, இத்தகையது என்று ஒரு பொருளை தனித்துச் சுட்டியறிகின்ற அறிவுநிலை.

8. நூலறிவு

நூல்களின் வழிபெறும் கற்றறிவு. இது அபர ஞானம், எனவும் வாசக ஞானம் எனவும் சாஸ்திர ஞானம் எனவுன் வடநூல்களில் கூறப்படும். தமிழில், ஏட்டறிவு, படிப்பறிவு, சந்தைப் படிப்பு என்றெல்லாம் இது சொல்லப்படும்

8.1 நுவலறிவு

நூல்வல்லார் வழிபெறும் சொன்மதி ( சொல்புத்தி)

8.2 கருவியறிவு

உடலினுள் அமைந்துள்ள கருவிகரணங்களைக்கொண்டு அறியும் அறிவு புலனறிவு, பகுத்தறிவு முதலியவை.

8.3 கலையறிவு

கலைகளை அரியவற்றுள் நுழைந்து உண்மை தேறும் நுணுக்கப்பாடு உள்ள அறிவு.

8.4 கேள்வியறிவு
பலர்வாயிலாகக் கேட்பதன்வழி பெறப்படும் அறிவு.

8.5 உய்த்தறிவு

தகுந்த காரணகருமங்களால் ஊகித்துத் தானாக ஒன்றைத் தேர்ந்துகொள்ளும் அறிவுநிலை.

9.வாலறிவு

தன்மையறிந்த மூதறிவு. இதனை வடநூலார் பரஞானம் என்பர். வள்ளலார் போன்றோர் சொந்தப்படிப்பு - அயலறியா அறிவு ( அபேத ஞானம்) என்பர்.


ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக