செவ்வாய், 20 நவம்பர், 2012

புணர்ச்சி



புணரியல் என்பது மொழியில் வழங்கும் ஒலியன்கள் (phonemes) அவற்றின் பகிர்வு (phonemic distribution) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருபன்களுக்குரிய (morphemes) அடிப்படை வடிவங்களையும், அடிநிலைக் கிளவிகளையும், அக் கிளவிகள் மாற்றம் பெற்றுவரும் மாற்றுருபுகளையும் (allomorphs) விளக்குவதாகும்.

இன்றைய தமிழில் ஒலியன்கள், ஒலியன்களின் வருகை, அடிநிலைக் கிளவிகள், மாற்றுருபுகள் ஆகியன எல்லா நிலைகளிலும் புது விதிகள் தோன்றி வருவதைச் சில சான்றுகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
எழுத்துகளின் எண்ணிக்கை புணரியல் இலக்கணத்தோடு தொடர்புடையது. சான்றாக வல்லெழுத்துகளில் (,,,,ப) சகரம் நீங்கலாக ஏனைய நான்கு வல்லெழுத்துகளைச் சொல்லுக்கு இறுதியில் குரல் இலா ஒலியையும், குரல் உடைய ஒலியையும் குறிப்பதாகப் பயன்படுத்துவதால் புணர்ச்சியில் இரண்டு ஒலிகளுக்கும் வேறுபாடு காணப்படுகிறது.
சான்று:

டேப்’ (குரல் இலா ஒலி) [te:p] /tape/

பல்ப்’ (குரல் உடைய ஒலி) [balb] /bulb/


4.2.1
புணரியல் பற்றி ஒரு குறிப்பு
தமிழ் இலக்கணத்தில் புணரியல் பெறும் இடம் பற்றி எவர் ஒருவராலும் புரிந்துகொள்ள முடிகிறது. பழைய மரபைப் பின்பற்றி எழுந்த மரபிலக்கணங்கள் புணர்ச்சியைப் பற்றி எழுத்து இலக்கணத்தில் பெருவாரியாகக் குறிப்பிட்டுள்ளன. அவ்வாறு சொல்லக் கூடிய தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளன எனலாம். ஆனால் தற்காலத்தில் எழுந்துள்ள நூல்களில் அது போன்ற பெரும் பகுதியைக் காண முடிவதில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்திலும் மு.வ.வின் மொழி நூலிலும் சிறிதளவே புணர்ச்சியைப் பற்றிக் கூறப்பட்டு இருக்கிறது.

4.2.2
புணர்ச்சி என்றால் என்ன?

நிலைமொழி ஈறும் வரும்மொழி முதலும் புணர்தலைப் புணர்ச்சி என்கிறோம். அதாவது ஒரு சொல்லின் கடைசி எழுத்தும் அதனை அடுத்துவரும் சொல்லின் முதல் எழுத்தும் ஒன்றாகச் சேருவதைப் புணர்ச்சி என்பர்.

சான்று:

மரம் + கள் = மரங்கள்
4.2.3
புணர்ச்சியின் வகைப்பாடுகள்

தொல்காப்பியர் புணர்ச்சியை இரண்டாகப் பிரித்துக் காட்டுகின்றார். அவை,

1.
வேற்றுமைப் புணர்ச்சி,

2.
அல்வழிப் புணர்ச்சி

என்பனவாகும்.

வேற்றுமை குறித்த புணர்நிலை மொழியும்

வேற்றுமை அல்வழிப் புணர்நிலை மொழியும்

(
தொல்.எழுத்து.113)

நிலைமொழி ஈறும், வரும்மொழி முதலும் புணர்வன எனப் பார்த்தோம். அவ்வகையில் நான்கு நிலைகளைக் காண முடிகின்றது.

1.
உயிர் + உயிர் 2. உயிர் + மெய் 3. மெய் + உயிர் 4. மெய்+ மெய்.
இவற்றையே தொல்காப்பியர் உயிர் ஈறு முன் உயிர் முதல், உயிர் ஈறு முன் மெய் முதல் என்றும், மெய் ஈறு முன் உயிர் முதல், மெய் ஈறு முன் மெய் முதல் என்றும் விளக்குவார். தொல்காப்பியர் கூறாத புணர்ச்சி விதிகள் பல வீரசோழியத்தில் கூறப்படுகின்றன. இடைக்கால இலக்கியத்தையும், பேச்சுவழக்கையும் நன்கு ஆராய்ந்து புணர்ச்சி விதிகளைக் கூறியிருக்கின்றார் வீரசோழிய ஆசிரியர்.
ஆக்கம் / Posted by M.MATHIVANAN 1 comment:

1 கருத்து: