வியாழன், 16 பிப்ரவரி, 2012

ஆசிரியர் பணி

கற்றல் என்பது தனிப்பட்ட ஒருவருடைய செயல். அதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பது மட்டும்தான் ஆசிரியர் பணி. ஒவ்வொரு குழந்தையிடமும் கற்பனை, ஓவியம், விளையாட்டு, இசை என தனிப்பட்ட ஆற்றல்கள் ஒளிந்திருக்கும். அதன் அடிப்படையில் கூட, பாடங்களை சொல்லி கொடுக்க முடியும். ஆனால், அதையெல்லாம் எந்த பள்ளி நிர்வாகமும், ஆசிரியரும் சிந்திப்பதில்லை. அதை பெயரளவிற்கு ஒரு பாடமாக வைத்து விடுகின்றனர். டாக்டர் அல்லது இன்ஜினியராவதே, கல்வி கற்பதன் முக்கிய நோக்கம் என, பெரும்பாலான பெற்றோர் மற்றும் மாணவர்கள் நினைக்கின்றனர். தமிழகத்தில் உள்ள கல்வி முறை, புத்தகத்தில் உள்ளதை படித்து, தேர்வில் தேர்ச்சி பெற மட்டுமே பயன்படுகிறது. மாணவ, மாணவியர் கொண்டுள்ள சிந்தனைத்திறன், படைப்பாற்றல் உள்ளிட்டவற்றை, வெளிக்கொண்டு வர உதவுவதில்லை. இத்தகைய கல்வி முறை நீடித்தால், அடுத்த பத்தாண்டுகளில் அறிவியல்துறையில், எந்த அளவுக்கு வளர்ச்சி பெறுவோம் என்பது, கேள்விக்குறி.முடியாதது என்று, இவ்வுலகில் ஒன்றுமில்லை. குறிக்கோளை அடைய, பல சிக்கல்களை துணிச்சலுடன், எதிர்கொள்ள வேண்டும். யாரும் நுழையாத துறைகளை, தேர்ந்தெடுத்துக் குடும்பம், சமுதாயம் மற்றும் நாடு முன்னேற்றம் உள்ளிட்டவற்றிற்கு உதவும் வகையில், செயல்பட வேண்டும். என்னால் முடியும் என்ற எண்ணம், கொண்டிருத்தல் வேண்டும்நீங்கள் அடைய நினைக்கும் குறிக்கோள்கள் குறித்த எண்ணங்களை, தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தால், நினைத்ததை விட, அதிகம் சாதிக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையை கண்டு, எக்காரணம் கொண்டும் பயம் கொள்ளக் கூடாது. இன்றைய இளைய சமுதாயத்தினர், சாதிக்க வாய்ப்புகள் அதிகம் கிடைத்துள்ளன. குழந்தைகள் எப்படி கற்றுக் கொள்கின்றனர் என்பதை ஆசிரியர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் குழந்தைகள் பற்றிய உளவியல் பயிற்சி ஆசிரியர்களுக்கு தேவை. குழந்தைகளை மற்றவர்கள் மத்தியில், மட்டம் தட்டக் கூடாது. பாடம் நடத்தும் முறை பின், எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கிடையே கலந்துரையாடல் முறை அவசியம். ஒரு விஷயம் குறித்து கலந்துரையாடும்போது தான், பல முடிச்சுகளுக்கு விடை கிடைக்கிறது. குறிப்பாக, இந்த முறையில் பாடத்தை ஒவ்வொரு மாணவனும் எந்த அளவிற்கு அறிந்து வைத்துள்ளான் என்று, அவனே அறியும் வகையில் சூழ்நிலை அமைவதால், சிறந்த கல்வியைக் கொடுக்க இயலும்.மாணவர்களிடம் ஒழுக்கத்தை கொண்டு செல்ல சிறந்த வழி...ஆசிரியரே முன் உதாரணமாக இருப்பது ஒன்று. அடுத்ததாக, நீதி போதனை என்று ஒரு வகுப்பு நடத்தப்படுவதால் மட்டுமே ஒழுக்கத்தை மாணவர்களிடம் கொண்டு சென்று விட முடியாது. மாறாக, சில பிரச்னைகளை கையில் எடுத்துக் கொண்டு அதனை விவாதிக்கும் சுய ஆராய்ச்சி முறை நல்ல பலனைத் தரும். சினிமா, "டிவி' நிகழ்ச்சிகளால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்களா...தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பழிக்குப் பழி வாங்குவது போல் தான் அமைந்துள்ளன. அது குறித்து விவாதத்தில் மாணவர்களை ஈடுபடுத்தும் போது, அதனால் பாதிப்படைய மாட்டார்கள். மாறாக, நல்லது எது, கெட்டவை எது என பிரித்தறியும் தன்மையை பெறுவர்.பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு அவசியமா?மிக, மிக அவசியம். ஆனால், இன்று பெற்றோர் - ஆசிரியர்கள் சந்திப்பு என்பது பல இடங்களில் பெயரளவில் மட்டுமே நடக்கிறது. சில இடங்களில் சந்திப்பு நிகழ்ந்தாலும், ஆசிரியர் கருத்தை, பெற்றோர் கேட்டு செல்வது போன்று தான் அமைந்துள்ளது. பெற்றோரின் கருத்தும் கேட்கப்படுவது அவசியம்.இன்றைய கல்வி முறை குறித்து தங்களது கருத்து?மதிப்பெண்ணிற்கு முக்கியத் துவம் கொடுத்து, அதன் அடிப்படையில் மாணவர்களை உருவாக்கும் இன்றைய கல்வி திட்டத்தால் எவ்வித பயனும் கிட்டப்போவதில்லை. அதிக மதிப்பெண் பெற்று விட்டதால் மட்டும், சிறந்த மாணவனாக ஒருவர் உருவாகி விட்டார் என்று சொல்லி விட முடியாது. அதிக மதிப்பெண் பெற என்ன செய்ய வேண்டும் என்ற நிலை மாறி, இன்று என்னவெல்லாம் செய்யலாம் என்று மாணவர்கள் யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது ஆபத்தான பாதைக்கு வழி வகுத்தது போன்று அமைந்து விட்டது.பாடத்திட்டத்தில் என்ன மாற்றம் வேண்டும்?தொடர் மதிப்பீட்டு திட்டம் என்ற முறையை கொண்டு வருவது அவசியம். இத்திட்டத்தின் படி, மாணவர்கள் தன்னைத் தானே மதிப்பிடுதல், ஆசிரியர்களை மதிப்பிடுதல் ஆகியவை சாத்தியம். மேலும், தாங்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்கள், தங்களது வாழ்க்கைக்கு உதவுவதாக அமையும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும்.மாணவர் - ஆசிரியர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க வழி?ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென்று கவுன்சிலர் ஒருவரை நியமித்து அவரிடம் முறையிடும் வழி சிறந்தது. இதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படும் கசப்புணர்வு ஆரம்பித்திலே தீர்க்கப்பட்டு விடும். இதன் மூலம், பெரிய குற்றச் செயல்களை முன் கூட்டியே தடுக்க முடியும். நன்றி.தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக