மரவீணை
விரல்களின் மீட்டலில்
வீணையின் நீலாம்பரி உதயம்!
அருகினில் ஊக்குவித்த ஆசானாய்
ஷண்பகத் தோட்ட மலர்களின்
வடிவ முகம் மலர்ந்ததம்மா!
உச்சிதனை முகர்ந்தால் கண்ணம்மா!
உன் முகமும் தெரியுதம்மா!
உன்னில் முகம் புதைத்தே
வரைபடமாய்
தலையணையில் நித்திரை
கொள்கின்றேன்!
சிலும்பத் தலையசைய
தந்தியின் கம்பியின்
உடலும்
காற்றில் குளிருதப்பா!
குளிரின் குறை காணாதிருக்க
கற்பனையில் வடிவெடுத்த
உன்னிரு கைகளாய்
புடவை உறையினுள்
தஞ்சமானேன்!
இன்னொரு பிறவியிலே உங்கள்
மகளாய்
கற்பூர பொம்மையாய் கரையாமல்
அருகினில் இருக்க வரமருள்வாய்!
ஆண்டிரண்டு கடந்தாலும்
ஆலயமணியாய் நெஞ்சில்
ஆதித்ய ஹிருதயம்
இரும்பாய் கனக்கிறது!
மணித்துளி இசைக்கே
உருகிடும் நெஞ்சங்கள்
பலவிருக்க மாதக்கணக்கில்
ஒளி வெள்ளம்!
உண்மை அன்று மௌனமாக
உறங்கிய பொழுதுகள்
விடியலின் பாதி தான்!
எண்ணிறந்த இழப்புகளினால்
எண்ணிக்கை வங்கியில்
குறைவான சோகமரத்தில்
உருவாகிய இசைக்கருவி!
பந்தம் மட்டும் அறுபட்ட தந்தியாய்
அறுபட்டுக் கிடக்கிறது!
காற்றில் கரைய
நாளை எதிர்பார்த்துக்
காத்திருக்கும் வாசனையில்லாமல்
வாழ்ந்து கொண்டிருக்கும்
வண்ண மலராய் வீணை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக