புதன், 10 ஜூன், 2015

இணையத்தில் தமிழ் கற்றல்,கற்பித்தல்- இன்றைய நிலை-ஓர் ஆய்வு

          இணையத்தில் தமிழ் கற்றல்,கற்பித்தல்- இன்றைய நிலை-ஓர் ஆய்வு
                                             முனைவர் பி.ஆர்.இலட்சுமி.,        பி.லிட்., எம்.ஏ(தமிழ்).,எம்.ஏ (மொழியியல்)., எம்ஃபில்., புலவர்., பிஎச்.டி., டிசிஇ.,
(பிஜிடிசிஏ.,எம்.ஏ(ஜெஎம்சி).,டிசிஏ., எம்பிஏ).,
                                     
                                                           சென்னை-66.

மொழி மனிதனின் எண்ண வெளிப்பாடு. அத்தகைய மொழியினைக் கற்றலும்,கற்பித்தலும் சிறப்புடையதாக அமைதல் அவசியமாகிறது.
கற்க கசடற என்பது வள்ளுவன் வாக்கு. அத்தகைய கல்வியினை நாம் மொழிப்பாடத்தின்வழி பெறுகிறோம். இப்புவி உலகில் மனிதன் வாழ எத்தனிக்கும்போது ஒரு குறிக்கோளுடன் இயங்க தகுதி உடையவரால் பணிக்கப்படுகிறான். அக்குறிக்கோளினை அடைய தமிழ்மொழி உதவி புரிகிறது.  இத்தகைய தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் முறைகள் குறித்து ஆய்வது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகிறது.
தமிழ் கற்றல்
தமிழ் கற்றல் இன்றைய உலகில் பல்வேறு இடங்களிலும் பல முறைகளில் நடந்து வருகிறது.அடிப்படைத் திறன்களானகேட்டல்,பேசுதல்,படித்தல்,எழுதுதல் போன்றவைகளின் வழியாக மாணவர்கள் பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக்கல்விவரை மொழிக்கல்வியைக் கற்கின்றனர்.மொழியினைக் கற்க இயல்பான ஆர்வம்,எழுதும் பயிற்சி,பேசும் திறன்,படைப்பாற்றல் திறன் அனைத்தும் தேவைப்படுகிறது.கையெழுத்து ஒரு மாணவனின் வாழ்க்கையைச் சீர்திருத்தும்.இக்கையெழுத்துப்பயிற்சியினை இன்றளவில் மாணவர்கள் ஏடுகளில் எழுதிப் பழகுகின்றனர்.  இயல்பான வகுப்பறையில் பயிலும் மாணவனின் கல்விநிலைப்பயிற்சி தேர்ச்சி சதவிகித அளவு செயல்வழிக்கல்விநிலைப்பயிற்சி தேர்ச்சி சதவிகித அளவினைவிடக் குறைவாக இருக்கிறது. உலகளாவிய அளவில் இன்றளவும் முழுமையாக இணையத்தின்வழி கற்றல் மாணவர்களிடையே நடைபெறவில்லை.
எழுதும் பயிற்சி மாணவர்களிடையே குறைந்து வருதல்,ஆசிரியர்களுக்கே கணினி குறித்த விழிப்புணர்வு இல்லாமை போன்றவை இதற்குக் காரணங்களாக அமைகின்றன. பெரும்பான்மையாகக் தொடக்கக் கல்வி கற்பித்தல் பணியில் பெண் ஆசிரியர்களே கற்பிக்கின்றனர். அந்நிலையில் பெண்கள் இணையம் பயன்படுத்துவது இன்னமும் பல குடும்பங்களில் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையும் காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில்  ஆசிரியர்கள் பயிற்சி  ஏடுகள், கரும்பலகை, பசும்பலகை,மின்னட்டைகள்,செயல்திட்ட கையேடுகள் இவற்றைத் துணையாகக் கொள்கின்றனர். இதனால் பள்ளிகளிலேயே ஆசிரியர்களுக்குத் தகுந்த காலம் ஒதுக்கி இணையம் தொடர்பானவற்றை அளிக்கப் பயிற்சி அளிப்பதினால் இணையம் வழி கற்பித்தலை மேம்படுத்தலாம். ஆசிரியரின் கற்பித்தல் திறனிலும் புதிய பல உத்திகளைப் பயன்படுத்தலாம்.ஒரு வகுப்பறையில் இரண்டிற்கு மேற்பட்ட கற்பித்தல்முறைகள் நிகழ்வது கற்றல்திறனைப் பாதிக்கும்.
இணையப் பயன்பாடு
                    ஆங்கிலமொழியில் உள்ளதுபோல ஆண்ட்ராய்டில் பயன்படுத்தக்கூடிய திறன்களுடன் கூடிய விளையாட்டுப்பயிற்சி(pre school writing method, preschool skill,Toddler animated puzzle) தமிழில் அமையவேண்டும். பிற பாடங்களுக்கு இருப்பதுபோன்ற விளையாட்டுமுறையுடன் கூடிய கல்வி கணினியில் அமையுமானால் தமிழ் கற்க மாணவர்களுக்கு ஆர்வம் வளரும்.செல்லிடப்பேசி வரவால் மாணவரின் கவனம் முழுவதும் திசை மாறிச் சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில் இணையத்தின் வழி தமிழ் கற்க பல வலைத்தளங்கள்  உதவி புரிகின்றன. எழுத்துகளின் ஒலித்திறனை உணர்ந்து கற்க www.noolagam.com உதவி புரிகிறது. இணையவழியில் பலவித மென்பொருட்களைப் பயன்படுத்தி குறுக்கெழுத்துப்புதிர்கள், விளையாட்டுகள் அமைக்கலாம்.
நடுநிலைக்கல்வி கற்பதற்குத் தேவையான மின் நூலக வசதியினைப் tamil virtual academy.com வழங்குகிறது. தேவைப்படும் வரைகலையை இணைய வழியாகக் கற்று ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயன்படுத்தலாம்.
கற்பித்தல் திறன்
ஆரம்பக் கல்வி நிலை மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர
v  எழுத்துப் புள்ளிகளை இணைத்தல்
v  வண்ணங்களை வேறுபடுத்திக் காட்டுதல்
v  நிழலிட்ட படங்களைப் பொருத்திக் காட்டுதல்
v  நிழலிட்ட எழுத்துகளைப் பொருத்திக் காட்டுதல்
v  மாறுபட்ட எழுத்துகளை ஒழுங்குபடுத்துதல்
v  எழுத்துகளைப் பொருத்திக்காட்டுதல்
போன்றவற்றின்வழி எழுத்துகளை மாணவரிடம் தெளிவாகக் கற்பிக்கலாம். அடுத்த படிநிலையாக சொற்களை இணைத்து எழுதும் பயிற்சியினை அளிக்கலாம். இவற்றினிடையே நாநெகிழ் பயிற்சி,நா பிறழ் பயிற்சி போன்றவற்றை அளிக்கலாம்.10 வயது மாணவனுக்கு குறைந்தபட்சம் ஐயாயிரம் சொற்களை எழுதப் பயிற்சியளித்தல் அவசியமாகும்.
மொழி காலங்கடந்து மனிதனின் துணையாக அமையக்கூடிய கருவி. இத்தகைய தமிழ்மொழி கற்றல்-கற்பித்தலில் காணப்படும் சில குறைபாடுகளை நீக்கி கற்கின்ற முறைதனைத் தெளிவாக்கியது இவ்வாய்வுக் கட்டுரையின் வழி அறிய முடிகிறது.




          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக